மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை விட்டு 1972 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டபோது, அவரைத் தனிக்கட்சியைத் துவக்குமாறு தூண்டியவர்கள் அவரை ஆதரித்த தொண்டர்கள் தான்.
அதனாலேயே 1972 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அ.தி.மு.க என்ற இயக்கத்தைத் துவக்கினார் எம்.ஜி.ஆர்.
அவர்கள் தான் அதன் வளர்ச்சிக்குப் பலமாக இருந்தார்கள். வாக்கு வங்கியாக மாறினார்கள். கட்சியை அடுத்தடுத்து வளர வைத்து, பொன்விழா காண வைத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய வலிமையை எம்.ஜி.ஆர். உணர்ந்ததால் தான், அ.தி.மு.க தலைமையை அவர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சிக்கான விதிமுறையை உருவாக்கினார்.
இது மற்ற கட்சிகளிலிருந்து அ.தி.மு.க.வை வேறுபடுத்திக் காட்டியது.
அ.தி.மு.க. இயக்கத்திற்கான சட்டவிதிகளைப் படிப்பவர்களுக்கு எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் புரியும்.
2016 ல் ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தவர்கள் தான், அவர் சிறைக்குச் சென்ற பிறகு, 2017 ல் கழகப் பொதுக்குழுவைக் கூட்டி அ.தி.மு.க.வின் சட்டவிதிகளை மாற்றினார்கள்.
அதன் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு எதிராகப் பொதுச்செயலாளர் பதவியைத் தூக்கிவிட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவிகளை உருவாக்கினார்கள்.
அது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் டிசம்பர் 7 ஆம் தேதியன்று கட்சித்தேர்தல் நடக்கும், அ.தி.மு.க தொண்டர்கள் நேரடியாக வாக்களித்து தலைமையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று குழப்பமான ஒரு முடிவு அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்யத் தேதியும் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வேட்புமனு பெற வந்த தொண்டர்கள் கழகத்தினராலேயே தாக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள்.
எம்.ஜி.ஆரின் மீது மிகவும் விசுவாசமான தொண்டரான ஓம்பிரசாத் சிங் தாக்கப்பட்டு, அ.தி.மு.க அலுவலக வாசலியே செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.
பெங்களூரு புகழேந்தியின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டு தலைமைக் கழக அலுவலகத்திற்குள் வேட்புமனு வாங்க வந்தவர்களுக்கும் இதே மரியாதை.
கட்சி அலுவலக வளாகத்திற்குள்ளேயே அதன் தொண்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து ஊடகங்களில் பரபரப்புச் செய்திகளாயின.
நேரடியாகத் தலைமைக் கழகத்திற்கு வந்தவர்கள் தாக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், நேரடியாக வராத ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரது வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டதாவும், மற்ற யாரும் வேட்புமனு செய்யாததால்(!), ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவருடைய வேட்புமனுக்கள் மட்டும் தேர்வு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எதற்கு இயக்கத் தேர்தல் என்று அவசரமாக அறிவித்தார்கள்?
தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே கழக முன்னோடியான அன்வர் ராஜா போன்றவர்கள் ஏன் கழகத்தைவிட்டு அவசரமாக விலக்கப்பட்டார்கள்?
அறிவித்த படி, தேர்தலைக் குறைந்தபட்ச ஜனநாயகத்துடன் ஏன் நடத்தவில்லை?
வேட்புமனு வாங்க வந்தவர்கள் ஏன் விரட்டி அடிக்கப்பட்டார்கள்?
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற மக்கள் செல்வாக்குப் பெற்ற ஆளுமைகளுக்குப் பிறகு இப்படியா அ.தி.மு.க தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
தனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் என்று மக்கள் திலகத்தால் பெருமையுடன் போற்றப்பட்ட கழகத் தொண்டர்களை விரட்டியடித்துவிட்டு,
நேர்தல் இப்படி நடத்தப்படுவதை, அதே கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
*
-லியோ