சித்ரவதையை எதிர்த்துக் காவல்நிலையம் சென்ற கிருஷ்ணய்யர்!

நூல் வாசிப்பு:

காவல்நிலையம் சென்று தனது ஆதரவாளர்களை, அடியாட்களை மீட்டுவரும் அரசியல்வாதிகளின் பராக்கிரமங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்பாவிகளை அடித்துச் சித்ரவதை செய்யும்போது எவரும் போய் பார்ப்பதும் இல்லை.

ஏனென்று கேட்பதுமில்லை. ஆனால் வி.ஆர். கிருஷ்ணய்யர் அமைச்சராக இருந்தபோதே முன்பின் தெரியாத அப்பாவிக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கிறார். அந்த சம்பவத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

“நான் அமைச்சராக இருந்தபோது திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கிளப்பில் டென்னிஸ் விளையாடுவேன். அப்படி ஒருநாள் விளையாடி விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் போன் அடித்தது. எடுத்துப் பேசினேன். எதிர்முனையில் ஒருவர், அருகிலுள்ள குறிப்பிட்ட காவல்நிலையத்தில் விசாரணைக்காகக் கூப்பிட்டுச் சென்றவரை அடித்துத் துவைக்கிறார்கள் என்றார்.

உடனே தாமதிக்காமல் நான் அந்தக் காவல்நிலையத்துக்குச் சென்றேன். அங்கு ஒருவரை சப் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் “இதுதான் நீங்கள் விசாரிக்கும் முறையா? தினமும் இப்படித்தான் நடக்கிறீர்களா? சக மனிதனை விலங்குகளை விட கேவலமாக நடத்த வெட்கமாக இல்லை..?” எனக் கேட்டேன்.

அவர் பேசாமல் இருந்தார்.

அவரிடம், “இது மக்கள் நேசிக்கும் அரசு. மனிதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு. உங்களின் காட்டுமிராண்டித்தனமான விசாரணை முறைகள் எங்கள் அரசின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.

குற்றம் சாட்டப்பட்டிருந்தால் சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்துங்கள். நீங்களே நீதிபதியாக மாறவேண்டாம்..” எனச் சொல்லிவிட்டு திரும்பினேன்.

எந்தவிதமான சித்ரவதையிலும் என்றைக்கும் எனக்கு உடன்பாடு கிடையாது. (இந்தியாவிலேயே முன்பின் தெரியாத நபருக்காக ஒரு உள்துறை அமைச்சர் போலீஸ் ஸ்டேஷன் சென்றது இதுதான் முதலும் கடைசியாகுமாக இருக்கும் என நினைக்கிறேன்)

– பத்திரிகையாளர் ப.திருமலை எழுதிய ‘மனித நேயத்துக்கு வயது நூறு’ புத்தகத்திலிருந்து..

Comments (0)
Add Comment