சில படங்களுக்கு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இயல்பாகவே அமைந்துவிடுவது உண்டு. அப்படித்தான் இந்தப் படத்துக்கும் அமைந்தது.
ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய படம் இரும்புத்திரை.
தொழிற்சாலை, தொழிலாளி, முதலாளி கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில், சிவாஜி கணேசன், வைஜயந்தி மாலா, தங்கவேலு, சரோஜாதேவி, பண்டரிபாய், ரங்கராவ், வசுந்தரா தேவி உட்பட பலர் நடித்தனர்.
ரங்காராவ் முதலாளி, சிவாஜி தொழிலாளி. தங்கவேலுவின் காமெடி அப்போது பேசப்பட்டது. அதோடு அவருக்கு எப்போதும் பேசப்படும் பாடல் ஒன்றும் இந்தப் படத்தில் அமைந்தது.
எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார். ’ஏரைப் புடிச்சவனும் இங்கிலீஸ் படிச்சவனும்..’, ’நன்றிகெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்’, ’போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்..’,
‘நெஞ்சில் குடியிருக்கும்’, ’கையில வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியலை’ உட்பட அனைத்துப் பாடல்களும் அப்போது சிறப்பான வரவேற்பைப் பெற்றன.
’கையில வாங்கினேன்’ பாடலில் சிறப்பாக நடித்திருப்பார். இப்போது கேட்டாலும் இந்தப் பாடல் டச்சிங்காக இருக்கும். ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற பாடல் அப்போது இளம் ஜோடிகளை மயக்கிய காதல் பாடல்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதியிருந்தனர்.
தொழிலாளர்களுக்கு ஆதரவான புரட்சிப் பாடல் ஒன்றையும் பட்டுக் கோட்டை அருமையாக எழுதியிருந்தார்.
இந்தப் படம் இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் உருவானது.
இந்தியில், சிவாஜி கேரக்டரில் திலிப்குமார் நடித்தார். ராஜ்குமார், ஜானி வாக்கர் உட்பட சில இந்தி நடிகர்கள் நடித்தார்கள்.
வைஜயந்தி மாலா இந்தியிலும் ஹீரோயினாக நடித்தார். சரோஜாதேவி, திலீப்குமாரை காதலித்து தோல்வியடையும் கேரக்டரில் நடித்தார். இந்திப் பதிப்புக்கு சி.ராமச்சந்திரா இசை அமைத்தார்.
இந்திக்கு முதலிலேயே ‘Paigham‘ என்று டைட்டில் வைத்துவிட்டார்கள். தமிழுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்த எஸ்.எஸ்.வாசன், தனது நிறுவன ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார்.
அதில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தலைப்புதான் ’இரும்புத்திரை’. இதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் விருந்து வைத்து, டைட்டிலை சொன்னவருக்கு பரிசுத் தொகையும் அளித்தார் வாசன்.
1960 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த ’இரும்புத்திரை’ சூப்பர் ஹிட் படமானது. 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது.
இந்தப் படத்தில் வைஜயந்தி மாலாவும் அவர் அம்மா வசுந்தரா தேவியும் அம்மா, மகளாகவே நடித்தனர்.
இருவரும் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த நேரம் அது. அப்போது வாசன், இருவரையும் சமரசம் செய்து இந்தப் படத்தில் சேர்ந்து நடிக்க வைத்தார்.
சிறந்த பரதக் கலைஞரும் கர்நாடக பாடகியுமான வசுந்தரா தேவி, ரிஸ்ய சிருங்கர், மங்கம்மா சபதம், நாட்டிய ராணி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.
– அலாவுதீன்