– தலைமைத் தேர்தல் ஆணையராக வாழ்ந்து காட்டிய டி.என்.சேஷன் (1932-2019)
“நான் அரசின் ஓர் அங்கம் அல்ல”
“பிரதமர், குடியரசுத் தலைவர்- இருவருக்கு மட்டுமே நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்”
“எந்தவொரு தனிநபரும் எனக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. இந்திய அரசியல் சட்டம் தான் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது”
“பிரதமராக இருக்கலாம். ஆளுநராக இருக்கலாம் அல்லது எந்தவொரு அரசியல் கட்சித் தலைவராக இருக்கலாம். சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் தான்”
-இப்படி அதிரடியான பேச்சுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது.
1990 லிருந்து 1996 வரை சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது தான், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு விசேஷ உயிர் வந்தது.
1955 ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இவர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் படித்தவர். காவல்துறைத் தேர்வு எழுதி அதில் முதலிடத்தில் வந்தும் அதில் அவர் சேரவில்லை.
கோவையில் துணை ஆட்சித் தலைவராகப் பணியைத் தொடங்கிய அவர், ராஜீவ் பிரதமராக இருந்தபோது யூனியன் கேபினெட் செயலராகவும் இருந்திருக்கிறார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்தியத் திட்டக்குழு உறுப்பினராக இருந்தவரை, தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்புக்குப் பரிந்துரை செய்தவர் யார் தெரியுமா?
சந்திரசேகர் அமைச்சரவையில் அங்கம் வகித்தவரான சுப்பிரமணியன் சுவாமி.
அதிலிருந்து அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டது தேர்தல் ஆணையம். பல விதிமுறைகள் கறாராகக் கடைப் பிடிக்கப்பட்டன. பல அரசியல் குறுக்கீடுகள் இருந்தபோதும் தளரவில்லை சேஷன்.
குறிப்பாக நள்ளிரவுக்கு மேல் நீடித்து விடியவிடிய நடந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரம் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது சேஷன் தலைமையில் இருந்தபோது தான்.
தேர்தல் பூத்களுக்கு அருகில் கட்சிச் சின்னங்களைக் கொண்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டது.
உத்திரபிரதேசத்திலும், பீஹாரிலும் தேர்தல் நேரத்தில் வன்முறை கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்த சூழலை மாற்றியமைத்து அங்கும் அமைதியாகத் தேர்தலை நடத்தியபோது, ஊடகங்கள் அவரைப் பாராட்டின.
அரசியல்வாதிகள் ஏகத்திற்கும் எரிச்சல் ஆனார்கள். பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் வன்முறைக்காக வாய்ப்பிருந்தபோது தேர்தலையே நிறுத்தி வைத்தார்.
தேர்தல் முடிந்து ஒழுங்காக கணக்கைச் சமர்ப்பிக்காத 1400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது சேஷன் நடவடிக்கை எடுத்தபோது, பல அரசியல்வாதிகள் ஆடிப் போனார்கள்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது சேஷனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு என்றே கூடுதலாக இரண்டு துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர்களை நியமித்தபோதும் தன்னுடைய கறார்த் தன்மையிலிருந்து பின்வாங்கவில்லை சேஷன்.
இத்தனைக்கும் தமிழகத்தில் ஒருமுறை சேஷன் மீது தாக்குதலே நடத்தப்பட்டது. இருந்தும் 1997-ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் கே.ஆர்.நாராயணனை எதிர்த்துப் போட்டியிட்டார் சேஷன்.
தங்களைப் பல விதங்களில் தேர்தலில் கட்டுப்படுத்திய சேஷனே தேர்தலில் போட்டியிடும்போது எந்தக் கட்சியாவது கரிசனம் காட்டுமா? சிவசேனாவைத் தவிர எந்தக் கட்சியும் அவருக்கு ஆதரவு கொடுக்காததால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
பிறகு 1999-ல் காந்தி நகர் தொகுதியில் எல்.கே.அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டபோதும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
மிகப் பெரும் வாக்காளர்களைக் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான தேர்தலை ஒழுங்குபடுத்தி அதிலிருந்த விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி, தேர்தல் நடத்தை விதிகளில் கடுமை காட்டிய சேஷனால் ஒரு வேட்பாளராகத் தேர்தலில் வெற்றிபெறும் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தலைமைத் தேர்தல் ஆணையராக ஜெயித்த அவர், அதே தேர்தல் சிஸ்டத்தில் வேட்பாளராக வெற்றி பெற முடியவில்லை.
இருந்தாலும், டி.என்.சேஷனைப் போன்ற இரும்பு மனிதர்கள், தேர்தல் இயந்திரங்கள் சகிதமாக வாக்களிக்கும் காலத்தில் கூடுதலாகத் தேவைப்படுகிறார்கள்.
மறுபடியும் சேஷனின் அன்றைய முழக்கம் நினைவுக்கு.
“பிரதமராக இருக்கலாம், ஆளுநராக இருக்கலாம் அல்லது எந்தவொரு அரசியல்கட்சித் தலைவராக இருக்கலாம். எல்லோரும் சட்டத்திற்கு முன் சமம் தான்”
– யூகி