லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் ‘நான் வந்த பாதை’ நூலிலிருந்து தேவரைப் பற்றிய சில பகுதிகள்:
***
”தேவரய்யா அவர்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைச் சுருக்கமாக இங்கே சொல்லியாக வேண்டும்! நான் குழந்தையாக இருந்தபோது என்னை அவர் மடியில் படுக்கவைத்து, ‘இராஜேந்திர பாண்டியன்‘ எனப் பெயர் சூட்டியவரே அந்தப் பெருந்தகைதான்.
நான் தேர்தலில் போட்டியிட விரும்பியபோது, மதுரை திருநகரில் வாழ்ந்து கொண்டிருந்த தேவர் பெருமகனாரைச் சந்தித்து அவரை வணங்கி நின்றேன்; வாழ்த்துப் பெற்றேன். “எனது உடல்நிலை சரியாக இல்லாததால், உனது தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை” எனப் பரிவோடு பேசினார் ஐயா.
“உங்கள் வாழ்த்துக் கிடைத்தாலே போதும்! ஒரு அறிக்கை மட்டும் தாங்கள் எழுதிக் கையெழுத்துப் போட்டால் போதும். அதை நோட்டீஸ் மாதிரி அச்சடிக்கச் செய்து வெளியிட்டு விடுகிறேன். நான் வெற்றி பெற்றுவிடுவேன்” என்றேன்.
“நீயே அறிக்கை எழுதிக்கொடு! நான் கையெழுத்துப் போடுகிறேன்” எனச் சொன்னார்.
“நடைபெற இருக்கிற தேர்தலில் தேனி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.எஸ்.இராஜேந்திரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அனைவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என எழுதிக் காட்டினேன்.
“சுருக்கமாகத் தெளிவாக எழுதியிருக்கிறாய்” என ரசித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு நான் ‘பசும்பொன் தேவரின் வேண்டுகோள்‘ என்ற தலைப்பை எழுதிக்கொண்டேன்
தேவரய்யா சொல்லுகிறார்: “இது தேர்தல் நேரம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய சமயம். மதுரை பக்கம் நீ வந்தால் எங்கும் ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கிவிடாதே! இரவு எந்நேரமாக இருந்தாலும் நேராகத் திருநகருக்கு வந்து என்னுடன் தங்கிவிடு.
குறிப்பாகச் சொல்லுகிறேன். தேர்தல் முடியும் வரை நீ மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்றார்.
அவர் சொற்படி தேர்தல் நேரத்தில் மதுரை பக்கம் வரும்போதெல்லாம் தேவரய்யா அவர்களுடன் தங்கும் பேறு எனக்குக் கிடைத்தது.
அவர் கட்டிலில் மெத்தை போட்டு அதற்கு மேல் ஒரு பாயை விரித்துத் தலையணை வைத்துப் படுத்துக்கொள்வார். அவர் அருகில், தரையில் பாய், தலையணையுடன் எனது படுக்கை.
அந்தச் சமயங்களிலெல்லாம் அவரது சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் பற்றிய செய்திகள், வேறு சில முக்கியச் சம்பவங்களையெல்லாம் என்னிடத்தில் சொல்லியிருக்கிறார்.
அவரது வாழ்க்கையில் அதுவும் அரசியலில் நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் கேட்கும்போது உடல் சிலிர்க்கும், உள்ளம் வேலை செய்யும்.
பசும்பொன்தேவர் வேண்டுகோள்
நடைபெற இருக்கிற தேர்தலில், தேனி தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.எஸ்.இராஜேந்திரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்ளுகிறேன்.
– முத்துராமலிங்கத் தேவர்
என ஆயிரக்கணக்கான போஸ்டர்கள், நோட்டீஸ்கள் மதுரை அச்சாபீஸில் கொடுத்து, விரைவில் தயார்படுத்தி விட்டு ஆண்டிப்பட்டிக்குப் புறப்பட்டு விட்டேன்.
ஆண்டிப்பட்டித் தொகுதி
பிறகு தேர்தல் பணிகளில் வேகம் பிடிக்கிறது. எவ்வளவோ இன்னல்கள், எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுத்து தேனி தொகுதி மக்கள் என்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
அருகே கூடலூர் தொகுதியிலும் எனது மைத்துனர், ராஜாங்கம் தி.மு.கழகத்தின் வேட்பாளராக நின்று வெற்றி பெறுகிறார். ஆக திராவிட முன்னேற்றக் கழகம் அப்பகுதியில் வெற்றி பெறுகிறது, வேரூன்றுகிறது.
வெற்றிச் செய்தியுடன் மதுரை திருநகர் வந்து தேவரய்யாவைச் சந்தித்து மாலை அணிவித்து வணங்கி நின்றேன். அவர் என் கன்னங்களைத் தடவிக் கட்டிப்பிடித்து, ”நீ வெற்றி பெற்றதைவிட, நான் அனுப்பிவைத்த மாதிரியே எந்தச் சேதாரமுமின்றித் திரும்பி வந்திருக்கிறாயே அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என வாழ்த்தினார்.
திருநகரில் தேவர் மகன்
1962-ல் நான் சட்டமன்ற உறுப்பினரான பிறகு தேனி நகரில் வாடகைக்கு ஒரு வீடு பார்த்து, அங்கே ஒரு அலுவலகம் அமைத்து, சென்னை முன்னாள் ‘கவுன்சிலர்‘ புருஷோத்தமன் என்பவரை அங்கே எனது சார்பில் இருக்கச் செய்து, தொகுதியில் உள்ள மக்களின் தேவைகளை, அங்குள்ள பிரச்சினைகளைச் சேகரித்து செய்திகளை உடனுக்குடன் எனக்குத் தெரிவிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தேன்.
நான் மாதம் ஒரு முறை தேனி தொகுதிக்குச் சென்று, தொகுதி மக்களைச் சந்தித்துச் செயல்படுவேன்.
நான் மதுரை பக்கம் போகும்போதெல்லாம் திருநகரில் வாழ்ந்து வந்த தேவர் பெருமானைத் தரிசித்து, வாழ்த்து பெறத் தவறமாட்டேன்.
அப்படி ஒரு சமயம் அவரைச் சந்திக்கும்போது உடல்நலம் குன்றி மெலிந்து காணப்பட்டார். அப்போது அவரைக் கவனித்துக் கொண்டிருந்த முதலியார் என்பவரிடம் விசாரித்தேன்.
இங்கு ஏதோ வைத்தியம் பார்க்கிறோம். மாத்திரை மருந்துகூட ஒருமுறைக்கு இருமுறை பக்குவமாகச் சொல்லித்தான் அவரைச் சாப்பிட வைக்க முடிகிறது என்றார்.
தேவரய்யா அவர்களிடம் இதுபற்றிப் பேசினேன்.
“ஐயா நீங்கள் சென்னைக்கு வரவேண்டும். அங்கே நமக்கு மூன்று வீடுகள் இருக்கின்றன. தங்களுக்குப் பொருத்தமான ஒரு வீட்டை வசதி செய்து வைத்துவிடுகிறேன்.
அங்கு நல்ல டாக்டர்களிடம் பரிசோதனை செய்து தங்கள் உடல்நிலையைச் சரிசெய்து விடலாம். இது எனது விருப்பம். வேண்டுகோள்! தயவு செய்து முடிவெடுங்கள்” என்றேன்.
அவர் அமைதியாகச் சிரித்துக்கொண்டே “நீ நினைக்கிற மாதிரி எனக்கு ஒன்றும் உடம்பு அவ்வளவு மோசமில்லை. கொஞ்ச நாள் பொறுத்துப் பார்க்கலாம்” என்றார்.
பிறகு தேவரய்யாவிடம் விடைபெற்றுச் சென்னைத் திரும்பிவிட்டேன்.
அவரை அருகிலிருந்து கவனித்து வரும் முதலியாரிடத்தில் அடிக்கடி தேவரய்யா உடல்நிலை பற்றி டெலிபோனில் விசாரித்துக் கொள்வேன்.
ஆனால் எதிர்பார்த்தபடி ஐயா அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்பதை அறிந்து, வேலூரில் அமெரிக்க நாட்டு உதவியுடன் இயங்கி வரும் சிறந்த மருத்துவமனையில் அவரை அழைத்துவந்து சிகிச்சை அளிப்பது என முடிவு செய்தோம்.
அவரும் சம்மதித்து வேலூருக்கு வந்தார். இந்த மருத்துவமனை தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.
வெளிநாட்டு டாக்டர் உட்பட மூன்று டாக்டர்கள் அவரிடம் விசாரித்தனர். அவர்களிடம் மிகத் தெளிவாகத் தனது உடல்நிலை பற்றி ஆங்கிலத்தில் விளக்கிச் சொன்னார். தான் அவரிடம் விடைபெற்று விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையோடு சென்னை திரும்பினேன்.
தேவர் திருமகன் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?
வேலூர் மருத்துவமனையில் தேவரய்யா அவர்களுக்கு துரைசாமித் தேவர் என்பவர் துணையாக இருந்தார். அவர் அதிகம் படிக்காதவர். விவரம் அறியாதவர். ஆனால் தேவரய்யாவை கவனித்துக் கொள்வதில் கருத்தாக இருந்து வந்தார்.
என்னைப் பொறுத்த வரையில் வருடத்தில் ஒரு நாள் தைப்பொங்கல் தமிழர் திருநாளை நிறையச் செலவு செய்து சிறப்பாகக் கொண்டாடுவோம்.
நான் ஈடுபட்டிருக்கும் இயக்கத்தைச் சார்ந்தோர், நண்பர்கள் மற்றும் படப்பிடிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் அத்தனை பேரையும் எனது அண்ணா இல்லத்துக்கு வரவழைத்து புத்தாடைகள் வழங்கி பொங்கல் சாதம் பரிமாறி மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்வேன்.
இத்தகைய ஒருநாளில்தான் வேலூரிலிருந்து ‘ட்ரங்கால் போன்’ வந்தது. துரைச்சாமித் தேவர் குரல்தான் தேவரய்யா தங்களை இன்று புறப்பட்டு வேலூருக்கு வரும்படிச் சொல்லச் சொன்னார் என்றார்.
நான் மற்றவர்களிடம் எனது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, ஒரு டிபன் கேரியரில் பொங்கல் சாதம் எடுத்துக் கொண்டு உடனே வேலூருக்குப் புறப்பட்டேன்.
பொங்கல் சாதத்தை ஐயா அவர்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள். பிறகு உன்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்றார்.
என்னுடன் இருந்தவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களை அனுப்பிவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தேன் – கதவைத் தாளிட்டு உட்கார் என்றார்.
நானும் அவர் முன்னிலையில் ஒரு மாணவனைப்போல் அடக்கத்துடன் அமர்ந்தேன்.
“நான் திருமணமே செய்துகொள்ளவில்லை. அது ஏன் என்று உனக்குத் தெரியுமா?” என்றார்.
நான் விழித்து, ஒரு வகையாகச் சமாளித்து, “ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து, அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியா முழு விடுதலை பெறவேண்டும்.
ஆகவே தன்னைப் பற்றிச் சிந்தனையே இல்லை என்ற காரணமாக இருக்கலாம் அல்லது தெய்வ பக்தியில் வெகுவாக ஈடுபட்டுள்ள நீங்கள், துறவு வாழ்க்கை மேற்கொண்டிருக்கக் கூடும்” என்றேன்.
அவர் ஒரு குழந்தையுடன் பேசுவதைப் போல, “அதுவல்லப்பா காரணம்? அதைப் பற்றிச் சொல்லி உனக்குப் புரிய வைக்கத்தான் இன்று உன்னை வரவழைத்தேன்” என்றார்.
நான் அவரையே கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் பேசுகிறார்,
“நான் பிறந்த கொஞ்சநாளில் என் தாயார் இறந்துவிட்டார். அதேசமயம் அப்பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் தாய்க்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிடுகிறது. உடனே அந்த முஸ்லிம் அம்மையார் என்னைத் தூக்கி வரச்செய்து வளர்த்தார்.
ஒரு முஸ்லிம் தாயின் பால் குடித்துத்தான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்குள் ஒரு வைராக்கியம் என்னைப் பெற்ற தாயே எனக்குப் பால் கொடுத்து, உச்சி மோந்து, என் மேனியைத் தொட்டுக் குளிப்பாட்டி அரவணைத்து வளர்த்திட நான் கொடுத்து வைக்கவில்லையே?
எனக்கு வயது வந்தவுடன் யாரோ ஒரு கன்னிப்பெண், கல்யாணம் என்ற பெயரில் என்னைத் தொட்டுப் பேசிப் பழகிடுவது?.
அதை நினைத்துப் பார்க்கவே எனக்குச் சங்கடமாகவும், அருவருப்பாகவும் இருந்தது. ஆகவேதான் நான் திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன்.
இதுதான் என் துறவுக்குக் காரணம். நீ கூட நாள் இங்கே வந்தது முதல் வைத்தியம் செய்து கொள்ளாததைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாய்.
அந்த எனது முடிவுப்படி இதுவரை எந்தப் பெண்ணும் என்னைத் தொட்டதில்லை, தொட அனுமதித்ததில்லை.
ஆகவே, இங்கே பெண் நர்ஸுகள் என்னைத் தொடக் கூடாது. ஆண்கள் மட்டுமே இந்த அறைக்குள் வந்து என்னைத் தொட்டுச் சோதித்துப் பார்க்கவேண்டும். இதை நான் எவரிடம் கூறுவது? ஆகவேதான் உன்னை வரவழைத்தேன்.
நீ எப்படி இதை டாக்டரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்வாயோ? அப்படிச் செய்துவிடு! இன்றே வைத்தியத்துக்கு உடன்படுகிறேன்” என்றார்.
இவைகளையெல்லாம் கேட்டு அவரை பிரமிப்போடு பார்த்து எனை மறந்திருந்தேன்.!
“என்ன யோசிக்கிறே!” என்ற அவர் குரல் கேட்டு, “ஒன்றுமில்லை… உடனே பெரிய டாக்டரைப் பார்த்துப் பேசி வருகிறேன்” எனச் சொல்லி சுதவைத் திறந்து வெளியேறினேன்.
எத்தனையோ பிரம்மச்சாரிகளின் கதைகளையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாமனிதர் புடம்போட்டு எடுக்கப்பட்ட பத்தரை மாற்றுத் தங்கம்தான் எண்ணியவாறே டாக்டரைச் சந்தித்து,
“ஐயா அவர்கள் திருமணமே செய்துகொள்ளாமல் துறவியாக வாழ்ந்து வருபவர். ஆகவே பெண் நர்சுகள் தன்னைத் தொடுவதை விரும்பாதவர் அதுதான்…” என இழுத்தேன்.
உடனே அந்த டாக்டர், “அப்படியானால் ஆண்களையே அந்த நர்சு வேலைக்குப் போட்டுவிடுகிறேன். இதைத் தேவர் அவர்கள் முன்பே என்னிடத்தில் சொல்லியிருக்கலாமே!” என்றார்.
‘சரி’ இப்போது நீங்கள் ‘ட்ரீட்மெண்ட் தொடங்கலாம்’ என்றேன். வேலை ஆரம்பிக்கப்பட்டது. தேவரய்யா அவர்கள் மிகவும் ஒத்துப்போனார்.
பெரிய திருப்தியுடன் சென்னை திரும்பினேன். காரில் வரும்போது ஏதேதோ சிந்தனைகள்.
1962-ல் நான் தேனி தொகுதியில் போட்டியிட்ட சமயத்தில் தென்மாவட்டங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தேன்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது ஒரு ஊரில் பொதுக்கூட்டம் முடிந்து, இரவு ஒரு முஸ்லிம் பிரமுகர் வீட்டில் எங்களுக்கு விருந்து.
அங்கே பேசிக்கொண்டிருந்தபோது, அந்த முஸ்லிம் பெரியவர் மனம் நெகிழ்ந்து பேசியது எனது நினைவில் இருக்கிறது.
“என்னயா எங்க தேவர், எங்க தேவருன்னு சில பேர் அலட்டிக்கிறாங்க.
குழந்தையாயிருக்கும்போதே பெத்த தாயை இழந்துவிட்ட அவரு எங்க முஸ்லிம் தாய்ப்பால் குடிச்சித்தானே வளந்தாரு.
தேவர் உடம்பிலே ஓடுற ரத்தத்திலே அந்தத் தாயின் ரத்தமும் கலந்திருக்கு. அதனால நாங்க என்னைக்கும் தேவர் மகனுக்குத்தான் ஓட்டுப் போடுவோம்.
அவர் ஆதரிக்கிற கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம்” என உணர்ச்சி பொங்கக் கூறினார்.
இந்து – முஸ்லிம் ஒற்றுமை உணர்வுகளுடன் அவர்களிடம் விடைபெற்றுப் புறப்பட்டேன்.
பசும்பொன் தேவர் பெருமகன் மறைவு
வழக்கம்போல, காலை ஏழு மணிக்குப் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு அதிகாலை ஐந்து மணிக்கு டெலிபோனில் அலாரம் வைத்து என்னை எழுப்பி விடுவார்கள்.
அன்றிரவு நான் தூங்கிக் கொஞ்ச நேரத்திலேயே டெலிபோன் மணி அடித்தது. போனை எடுத்தேன். என்னை அதிரடித் தாக்குதலுக்கு ஆளாக்கிய செய்திதான் அது. தேவர் ஐயா மறைந்துவிட்டார்.
அப்போது எனக்கேற்பட்ட நிலைமையை விவரிக்க இயலவில்லை. நானும் நடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்களும் அதிகாலை விமானத்தில் மதுரைக்குப் புறப்பட்டோம்.
மதுரை திருநகரில் மூக்கையாத் தேவர் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் கூடத் தொடங்கி விட்டனர். நாங்களும் போய்ச் சேர்ந்தோம்.
அங்கே என் தந்தையார் தேவரய்யாவின் உடலைக் குளிப்பாட்டி, தயார்படுத்தி பசும்பொன் கிராமத்துக்குக் கொண்டு செல்லும் நிலையில் வைத்திருந்தார்.
பசும்பொன் தேவர் பெருமகனின் உடல், தான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த அந்தப் பசும்பொன் கிராம வீட்டுக்கே கொண்டு போகப்படுகிறது.
பத்திரிகைகளில், வானொலியில் இந்தத் துயரச் செய்தியறிந்த மக்கள், வெள்ளமெனத் திரண்டு லாரிகளிலும், மற்ற வாகனங்களிலும் எண்ணிலடங்காதோர் ஓட்டமும் நடையுமாக பார் சிறுத்ததோ!
மக்கள் படை பெருத்ததோ எனக் கருதும் அளவுக்கு அழுதுகதறிய வண்ணம் மக்கள் சாரை சாரையாக வந்து குழுமிக் கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம் செய்தல் போன்ற வேலைகளை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அன்றைய தினம் காலை மதுரையில் எழுத்தாளர் ‘தென்னரசு’ அவர்களின் திருமணத்துக்குத் தலைமை வகிக்க அறிஞர் அண்ணாவும், வாழ்த்துரைக்க அண்ணன் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், நாவலர், கலைஞர் போன்றவர்களும் வந்துள்ளனர்.
இந்தச் சேதியறிந்து தேவர் பெருமகனுக்கு மரியாதை செலுத்த நேராகப் பசும்பொன் வந்து சேர்ந்தனர்.
அண்ணா குழந்தையைப் போல அழுதார். அண்ணன் எம்.ஜி.ஆர்., அதிர்ச்சியடைந்த நிலையில் தன்னை மறந்து கைக்குட்டையால் வாயைப் பொத்திக்கொண்டு விம்மி அழுதார்.
அந்த வீட்டு முன்பே தேவர் பெருமகனின் உடலை அடக்கம் செய்வது என முடிவெடுத்தோம்.
அங்கே அழுது புலம்பிக் கொண்டிருக்கும் மக்களிடையே அண்ணா பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அண்ணா பேசினார்.
“இங்கே கூடியிருக்கின்ற இந்தப் பெருமக்களுக்கு ஆறுதல், தேறுதல் சொல்ல எவரால் இயலும்? எப்படி முடியும்?
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறேதும் கொள்வரோ! என்பதற்கிணங்க தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்திய சுதந்திரத்துக்காகவே பயன்படுத்தினார்.
இதுதான் அவர் பிறந்த வீடு என்றார்கள். ஆனால் சிறைச்சாலைதான் அவருக்குப் பழகிய வீடு. தேவர் தனக்காக வாழ்ந்தவர் அல்ல! இந்திய நாட்டு மக்களின் நலனுக்காகவே இறுதிவரை வாழ்ந்து வந்தவர்.
இந்திய சுதந்திர வரலாற்றுக்குக் காரணமாயிருந்த நேதாஜியின் நெஞ்சில் இடம்பெற்றவர்” எனத் தேவர் திருமகனின் பெருமைகளை அடுக்கடுக்காக எடுத்துச் சொன்னார்.
மற்றவர்களும் பேசினார்கள். என்னைப் பேச அழைத்தனர். என்னால் பேச முடியவில்லை. கதறி அழுதேன்.
தேவர் திருமகன் அவர் வீட்டு முன்னாலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து, வந்தோரை வரவேற்பது போல அமர வைக்கப்பட்டிருக்கிறார்.
ஒரே அழுகை, கதறல். அப்போது, அப்பகுதி அங்கிருந்த ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்ததால் இராணுவத்தினரின் உதவியுடன் போலீஸார் மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இல்லையேல் அந்த உணர்ச்சிமயமான எழுச்சிமிகு கூட்டத்தைச் சமாளித்திருக்கவே முடியாது. மக்கள் கூட்டத்தில் சிலர் மயக்கம் போட்டு விழுகின்றனர்.
சிலர் தேவரய்யா இறந்துவிட்டார் என்பதை நம்ப மறுத்து பித்துப் பிடித்தவர் போலப் பேசுகின்றனர்.
அப்பகுதியில், கூடியிருந்த மக்களும் தலையில் அடித்துக்கொண்டு அலறினர்
ஒரு வகையாகத் தேவர் திருமகன் பிறந்த நடைபயின்ற அவரது உடல், அந்த மண்ணுக்குள்ளே அடக்கம் செய்யப்பட்டது. மக்கள் கூட்டம் கூடிய வண்ணமே இருந்தது. நாங்கள் புறப்பட்டோம்.
அண்ணா காரில் என்னுடன்தான் வருகிறார். இங்கேதான் இன்னும் எனது நெஞ்சைவிட்டு நீங்காத ஒரு சம்பவம் நடக்கப்போகிறது.
நாங்கள் வருகிற ரோட்டின் இருபுறமும் தேவரைத் தரிசிக்க சிலர் வந்துகொண்டிருக்கின்றனர். வயதுக்கு வந்த ஒரு பெண், தலைவிரி கோலமாகக் கதறி அழுதவாறு ஓடிவருகிறாள்.
அவள் உடம்பில் இருந்த சேலை கழன்று காற்றோடு போய்விட்டது. அதைக்கூட உணர முடியாமல், ஓடி வந்துகொண்டேயிருக்கிறாள்.
உடனே அண்ணா அவர்கள் காரை நிறுத்து என்றார். அவர் போட்டிருந்த நீளமான துண்டை எடுத்து, தம்பி! அந்தப் பெண்ணைத் தடுத்து இந்தத் துண்டை அவளுக்குக் கட்டிவிடு என்றார்.
நான் ஓடித் தடுத்து நிறுத்தினேன். என்னைக் கண்டதும், “அண்ணே! ஐயா போயிட்டாருண்ணே! போயிட்டாரு எனக் கதறினாள்.
நான் உடனே அந்த நீளத் துண்டை சாமியார் கட்டு என்று சொல்லுவார்களே!
அதுபோல பின்புறத்திலிருந்து வளைத்து முன்பக்கம் கழுத்தில் சுற்றிக் கட்டிவிட்டேன்.
பிறகும் அந்தப் பெண் அழுகையுடன் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தாள். நாங்களும் புறப்பட்டோம்.
கென்னடி ஒரு விபத்தில் இறந்தாரே! அந்தச் சேதி கேட்டு உடனே அவரைக்காண இங்கிலாந்து ராணி விமானத்தில் புறப்பட்டாராம்.
இந்தப் பெண்ணுக்கு உள்ள உணர்வு அந்த மகாராணிக்கு இருந்திருக்குமா? என்றார். எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.
அண்ணாவின் கேள்வியைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே வந்தேன்.