மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை…!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்கள், அமைச்சரின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிலர் மீது வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார இதழுக்காக சி.விஜயபாஸ்கரைச் சந்தித்து எடுத்து அப்போது வெளிவந்த பேட்டி – உங்கள் பார்வைக்கு:

****

“அடுத்தடுத்து எனக்குப் பலதரப்பட்ட சோதனைகள்! இருந்தாலும் அனைத்தையும் நான் கடந்து மீண்டு வருவேன்’’ – நம்பிக்கை தொனிக்கச் சொல்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான சி.விஜய பாஸ்கர்.

கூவத்தூர் துவங்கி குட்கா வரை பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் எழுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் அமைச்சரை அவருடைய வீட்டில் காலை நேரத்தில் சந்தித்தோம். அந்த நேரத்தில் எம்.எல்.ஏ.க்களும், கட்சிக்காரர்களுமாக ஒரே கூட்டம்.

சிறிது நேரத்தில் தனித்து நம்மிடம் பேசியபோது அவரைச் சுற்றிலும் மறைந்த முதல்வர் ஜெயல்லிதாவின் புகைப்படங்கள். பேச்சும் அவரைப்பற்றித் தான் துவங்கியது.

“அம்மா என் மீது வைத்திருந்த அன்பு மிகப் பெரும் விஷயம். நான் ஒரு மருத்துவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர். ஹண்டேவுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மக்கள் நல்வாழ்வுத்துறை எனக்குக் கிடைக்கக் காரணமானவர் அம்மா.

முதன்முறையாக நான் அமைச்சராகப் பதவியேற்றபோது என்னுடைய குடும்பத்தினரைக் கவனித்த அம்மா என்னை உடனே அவரைப் பார்க்க வரச் சொன்னார்கள். அப்போது அம்மா அவர்கள் சொன்ன அட்வைஸை நான் என்றும் மறக்க முடியாது.

“இந்தப் பதவியில் நீங்க எப்படி இருக்கணும்னா, உங்க பாணியிலேயே சொல்றேன். ஒரு பட்டாசு வானத்தில் போய் வெடிக்கறப்போ பிரகாசமா இருக்கும். ஆனால் கண நேரத்தில் அதோட லைஃப் முடிஞ்சு போயிடும். அது மாதிரி அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது.

அதே சமயம் அகல் விளக்கைப் பாருங்க. நின்னு நிதானமா எரியும். ஆனா அது தொடர்ந்து வெளிச்சத்தைக் கொடுக்கும். அதோட லைஃப் கூடுதல்.

அது மாதிரி நீங்க இருக்கணும்னு நினைக்கிறேன்’ என்று சொன்னார்கள்.

எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த துறை சென்ஸிட்டிவ்வானது மட்டுமல்ல, மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய துறை. சேவையை மட்டுமே நினைத்துப் பணியாற்றக்கூடிய துறை.

அரசியலில் எனக்கு எந்த அளவுக்குப் பொறுப்பு கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுத்தவர் அம்மா. அவரிடம் பாராட்டும் பெற்றிருக்கிறேன். சில சமயங்களில் அவருடைய மோதிரக் கையால் குட்டும் பெற்றிருக்கிறேன்.

முதல்முறையாக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைக்காக நான் பேசப்போகும்போது அவருடைய அறைக்கு என்னை அழைத்து ஆசீர்வதித்தார்.

அன்று மதியம் வரைக்கும் விவாதம் நீண்டபோதும் அம்மா அன்றைக்கு அவையில் தொடர்ந்து இருந்து நிறைவில் என்னை அழைத்து நன்றாகப் பேசியதற்குப் பாராட்டியதை மறக்கவே முடியாது.’’.

“அப்படிப்பட்டவருடைய இழப்பை தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?’’

“எனக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பெரும் இழப்பு. என்னுடைய அப்பா எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவர். மருத்துவக் கல்லூரியில் நான் படிக்கும்போது இருந்தே அம்மாவால் 27 வயதில் எம்.எல்.ஏ ஆனேன்.

எனக்குப் பதவிகளைக் கொடுத்தார். அவர் தான் எனக்குத் திருமணம் செய்துவைத்தார். என்னுடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார்.

எங்கள் துறையில் அம்மா பெயரில் பல நலத்திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறோம். அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா ஆரோக்கியத் திட்டம் என்று பல திட்டங்களை அம்மா பெயரில் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்.

அப்படிப் அவருடைய இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.”

“அவருடைய மரணம் பற்றிய சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்கிற முறையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“அம்மாவை நாங்க முதலமைச்சராக மட்டும் பார்க்கவில்லை. எங்களுடைய தெய்வமாகத் தான் பார்த்தோம். அப்படிப்பட்டவரை எவ்வளவு கவனமாகப் பார்த்திருப்போம், கிசிச்சை அளித்திருப்போம்? அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் கிசிச்சை அளித்தார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து ஐந்து முறை டாக்டர்கள் வந்து அவரைப் பார்த்தார்கள். வெளிநாட்டிலிருந்து சிறப்பு நிபுணர்கள் வந்து பார்த்திருக்கிறார்கள்.

மருத்துவர்கள் குழு அவருக்கான சிகிச்சை குறித்தும், மரணம் குறித்தும் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறது.

அதற்கான தெளிவான ஆவணங்கள் இருக்கின்றன. உண்மை இருக்கிறது. அதைவிட நாங்கள் என்ன விளக்கிவிட முடியும்? சொல்லுங்கள்’’

“திரும்பத் திரும்ப இன்றுவரை இறப்பு என்பது அரசியல் படுத்தப்படுவதால் தான் இதை உங்களிடம் கேட்கிறோம்?’’

“பலரும் அதை அரசியலாக்கக் கூடாது. ஆனால் அரசியல் ஆக்குவது எங்களைப் போன்றவர்களுக்கு வேதனை அளிக்கிறது.’’

“அப்புறம் கூவத்தூர் பிரச்சினை தொடர்பாக உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனைகளை நடந்ததே?’’

“அது முழுக்க முழுக்க அரசியல்.அம்மா  மறைவுக்குப் பிறகு ஆட்சியும் மறைய வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அம்மாவும் தனக்குப் பிறகும் ஆட்சி தொடரும் என்று சொல்லியிருந்தார்கள்.

அதன்படியே நாங்கள் அவருடைய மறைவுக்குப் பிறகு ஆட்சி தொடர வேண்டும் என்று முன்னால் நின்று களப்பணி ஆற்றினோம்.

எப்போதுமே நான் துடிப்பாக முன்னின்று பணியாற்றிப் பழக்கப் பட்டவன்.அந்தக் காரணத்தால் நான் தனித்து ‘கார்னர்’ செய்யப்பட்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.’’

“ஆக்டிவ்வாக இருந்ததற்காக இந்த நடவடிக்கையா?’’

“உண்மை தான். யார் ஆக்டிவா இருக்கிறார்களோ, அவர்களைத் தானே தட்டப்பார்ப்பார்கள். அது தான் நடந்திருக்கிறது.’’

“அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டீர்களா?’’

“எனக்கு அது மிகப் பெரிய நெருக்கடி தான்.  இன்னும் முழுமையாக என்னால் விடுபட முடியவில்லை.பொதுவாழ்வுக்கு ஒருவர் வந்தால் இவ்வளவு கஷ்டங்களைச் சந்திக்க வேண்டுமா என்கிற அளவுக்குப் பல சோதனைகளை நான் சந்தித்துவிட்டேன்.

என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எவ்வளவு தொல்லைகள்? என்னைச் சுற்றியுள்ளவர்களும் அதனால் கஷ்டங்களை அனுபவித்தது தான் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியது.அதை ஒரு சோதனை என்று எடுத்துக் கொள்ளலாம்.

அம்மா இல்லாமல் போன வேதனையை அனுபவிக்கிறோம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.’’

முன்னாள் தலைமைச் செயலாளரான ராம்மோகன்ராவ் “அம்மா உயிருடன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?’’ என்று கேட்ட மாதிரி அல்லவா நீங்களும் சொல்கிறீர்கள்?

“அது தான் நூறு சதவிகிதம் உண்மை. அம்மா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது. தன்னுடைய தொண்டன் மீது ஒரு தூசி படுவதைக் கூட அம்மா விரும்ப மாட்டார்கள். அனுமதிக்கவும் மாட்டார்கள்.

இன்னும் இயக்கம் பலமாக இருக்கிறது. ஆட்சி பலமாக இருக்கிறது. இருந்தும் அம்மா இல்லாத வெற்றிடத்தை இப்போது அழுத்தமாக உணர்கிறோம்.’’

“சமீபத்தில் குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும், அவை விற்பனை ஆவதில் ஊழல் நடந்ததாகச் செய்திகள் வெளியாகி அதில் உங்கள் பெயர் சம்பந்தப்பட்டது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’

“இது நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்தது தான். 2013ல் தான் அந்தத் தடை விதிக்கப்பட்டது. கண்காணிக்கத் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏகப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் மட்டுமே 80 டன்னுக்கு மேல் குட்காவும்,பான் மசாலாவும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா பொருட்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.’’

“2016 ல் நடந்ததாகச் சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் எழுப்பப்படுவதற்கு என்ன காரணம்?’’

“இந்தக் கேள்விகளை இப்போது சமூக வலைத்தளங்களில் பலர் கேட்கிறார்கள். அம்மா இருந்தபோதே இது நடந்ததாகச் செய்திகளைப் பரப்புகிறார்கள்.

அம்மா இருந்தபோது தான் பான் மசாலா தடை செய்யப்பட்டது என்பதைத் தகவலைப் பரப்புகிறவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

அவர்கள் குறிப்பிடுகிற எதிலும் என்னுடைய பெயர் இல்லை. அதில் குறிப்பிடப்பட்டிருக்கிற மாதவராவ் என்பவரை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்தித்தது கிடையாது. மிகுந்த நெஞ்சுரத்துடன் இதை நான் மறுக்கிறேன்’’

“இந்தக் குற்றச்சாட்டை முழுக்க மறுக்கிறீர்களா?’’

“நூறு சதவிகிதம் மறுக்கிறேன்.அதைச் சட்டரீதியாக நான் சந்திப்பேன். என்னுடைய மடியில் கனமில்லை. வழியில் பயமுமில்லை. என் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதனால் தான் இதை இவ்வளவு அழுத்தமாக நான் சொல்கிறேன்.’’

“நீங்கள் பதவி விலக வேண்டும் என்று தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் குரல் கொடுக்கின்றனவே?’’

“சென்னையில் புயல் அடித்தபோது எந்தத் தொற்றுநோயும் தொற்ற விடாத அளவுக்கு வேகமாக எங்களுடைய துறை பணியாற்றியதற்குப் பரவலான பாராட்டுக் கிடைத்திருக்கிறது.

மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறோம். அதைப் பார்த்தவர்கள் தான் இப்படிப் பொறாமையில் குரல் கொடுக்கிறார்கள்.

ஏன்.. தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டே இல்லையா? 2 ஜி ஊழல் வழக்கை அவர்கள் மறந்துவிட்டார்களா? அன்புமணி அவர் மீதான ஊழல் வழக்கை மறந்துவிட்டாரா? எந்த ஒரு மனிதனின் அரசியல் பயணத்திலும் இம்மாதிரிக் கல்லும், முள்ளும் எதிர்ப்படுவது சாதாரணம்.

அதை நாம் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். அப்படித்தான் நானும் எடுத்துக் கொள்கிறேன்.’’

“தமிழக முதல்வர் உங்களுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறாரா?’’

“கண்டிப்பாக உறுதுணையாக இருக்கிறார். உண்மை எங்கள் பக்கம் இருக்கிறது. எங்கள் மீது நிகழக்கூடிய எல்லாத் தாக்குதல்களையும் சமாளிக்கக்கூடிய சக்தியை அம்மா எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். அதனால் எதிர்கொள்வோம்.

கழகம் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகும் சலசலப்பு ஏற்பட்டு மீண்டிருக்கிறது. அம்மா மறைவுக்குப் பிறகும் அதே விதமான சலசலப்பு எழுந்தாலும் மீண்டும் கழகம் வலுப்படும்.

எங்களுடைய இயக்கத் தொண்டர்கள் அதிருப்தி அடைந்து எங்காவது எதிர்க்கட்சிகளில் சேர்ந்திருக்கிறார்களா? சொல்லுங்கள். எங்களுடைய அமைதியான பயணம் தொடரும்.’’

புன்சிரிப்புடன் சொன்னவர் கிளம்பும்போது‘’ எப்படியும் தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருக்கிறோம். அவசியம் கொண்டு வந்துவிடுவோம்’’ என்கிறார் உறுதியோடு.

சந்திப்பு – யூகி

Comments (0)
Add Comment