உலகை வியக்க வைத்த இந்திய சினிமா இயக்குநர் சத்யஜித் ரேயின் பிறந்தநாள் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி, ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘ஃபிரண்ட்லைன்’ ஒரு சிறப்பிதழைத் தயாரித்து வருகிறது.
132 பக்கங்களைக் கொண்ட இந்த இதழில், ரேயின் வாழ்க்கை வரலாற்றை ‘தி இன்னர் ஐ’ (The Inner Eye) என்ற தலைப்பில் 1989-ல் வெளியிட்ட ஆண்ட்ரூ ராபின்சன் எழுதிய கட்டுரையும், ரேயுடன் ஆண்ட்ரூ பல முறை நடத்திய நேர்காணல்களின் தொகுப்பும் இடம்பெறுகின்றன.
ரேயுடன் நெருக்கமாகப் பணியாற்றிய கலைஞர்களான ஷர்மிளா தாகூர், அபர்ணா சென், த்ருத்திமான் சாட்டர்ஜி, பரூன் சந்தா, கதக் நடனக் கலைஞர் சாஸ்வதி சென்,
பிரபல இயக்குநர்கள் ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரிஷ் காசரவல்லி, கவுதம் கோஷ், ரேயின் மகனும் இயக்குநருமான சந்திப் ரே ஆகியோரின் நேர்காணல்களும் இடம்பெறுகின்றன.
ரேயின் சினிமா, அதற்குப் பின்னால் இருக்கும் உலகப் பார்வை குறித்து அறிஞர்கள் பலர் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.
ரேயின் நிழல் என்று அழைக்கப்பட்ட நிமாய் கோஷ் பல ஆண்டுகள் அவருடனேயே இருந்து பல படங்களின் படப்பிடிப்புத் தளங்களிலும், இசைக் கோர்ப்பு அறையிலும் சத்யஜித் ரே எப்படிச் செயல்பட்டார் என்பதைக் காட்டும் அரிய புகைப்பட ஆல்பமும் இதில் வெளியாகிறது.
முன்பு யாரும் கண்டிராத புகைப்படங்களின் தொகுப்பும் வெளியாகிறது.
“இந்த இதழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது மட்டுமின்றி, திரைத்துறையின் இளம் இயக்குநர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடப் புத்தகமாகவும் இருக்கும்” என்கிறார் ஃபிரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர்.
நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்