கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் விதிகளின்படி பிரசாரத்துக்கு கட்சிகள் செலவிட்ட தொகைக்கான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி கட்சிகள் தாக்கல் செய்துள்ள கணக்குகளை, தன் இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க மட்டும் செலவுக் கணக்கை வெளியிடவில்லை.
அதன்படி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் 154.28 கோடி ரூபாய் தேர்தலுக்காக செலவு செய்திருப்பதாக கணக்குக் காட்டியுள்ளது.
இதில், 79.66 கோடி ரூபாய் கட்சியின் சார்பிலும், 74.61 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.
கட்சி செலவிட்டுள்ள தொகையில், 33.02 கோடி ரூபாய் நட்சத்திர பேச்சாளர்களின் பயணச் செலவுக்காக செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்காக, 11.93 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரத்துக்காக, 114.14 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தி.மு.க தெரிவித்துள்ளது.
அதில், 39.78 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகவும், 54.47 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.
தேர்தலின்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 57.33 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளதாக கணக்கு காட்டியுள்ளது.
அதில், 56.65 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து, 84.93 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, காங்கிரஸ் கணக்கு கூறியுள்ளது.
ஐந்து மாநிலங்களையும் சேர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் 13.19 கோடி ரூபாயும், அசாமில் போட்டியிட்ட அசாம் கன பரிஷத், 15.16 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.