’பார்க்க காமெடி பீஸ் மாதிரி தெரிஞ்சாலும் ஆளு டெரர் பீஸு’ என்று உதார் விடுவதும், அதற்கேற்றாற்போல ஹீரோயிசம் காட்டும் சூழல்களில் காலரை தூக்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து வருவதும் தற்போதைய நாயகர்களுக்கான வரையறை.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உட்பட சில நடிகர்கள் வெற்றிகரமாக கையாண்டுவரும் இந்த உத்தியை, பல ஆண்டுகளுக்கு முன்பே பாக்யராஜ் ரசிகர்களுக்குக் காட்டிவிட்டார்.
அதனைத் தன் பங்குக்கு ’காட்டு.. காட்டு..’ என்று காட்டிவரும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, முதன்முதலாக எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’.
கதையோ கதை!
தொண்ணூறுகளில் இக்கதை தொடங்குகிறது.
பட்டு தயாரிப்பில் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், ராஜ பட்டுகளைத் தயாரித்து வருகிறார் வரதராஜன் (இளங்கோ குமணன்). அவரது மகனுக்குத் (மனோஜ்) திருமணமாக, மருமகள் (அபிநயா) வீட்டுக்கு வருகிறார்.
அந்த நேரத்தில், கர்ப்பிணியாக இருக்கும் வரதராஜனின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு மரணமடைகிறார். அவருக்கு முருகன் என்று பெயரிடப்படுகிறது.
மனைவி இறந்த துக்கம், திருமணமான மகன் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது மறுபக்கம் போன்றவற்றோடு பொருளாதார ரீதியாகவும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் வரதராஜன், தனது பிடிவாதத்தைக் கைவிட்டு தெய்வத்துக்குச் செலுத்தும் ராஜ பட்டுகளை விற்பனை செய்யச் சம்மதிக்கிறார்.
இதனால், அவர் கையில் காசும் புரள்கிறது.
அதேநேரத்தில், மருமகள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அந்தக் குழந்தையின் பெயர்தான் சிவகுமார்.
இனிமேல், தான் பட்டு நெய்யப் போவதில்லை என்று சபதமெடுக்கிறார்.
தன் மீது பாசம் காட்டாத தந்தையை முருகன் (பிராங்க்ஸ்டர் ராகுல்) வெறுக்க, பதிலுக்கு தாத்தாவே தனக்கு வழிகாட்டி என்று வாழ்கிறார் சிவகுமார் (ஹிப்ஹாப் தமிழா). இதுதான் முன்கதை.
வரதராஜனின் பேரன் என்ற வகையில் சிவகுமார் புகழ் பெற்றாரா, தந்தையின் மீதான வெறுப்பை முருகன் கைவிட்டாரா, இருவரது வாழ்க்கையும் என்னவானது என்பதைச் சொல்வதுதான் இப்படத்தின் முழுக்கதை.
புதிதல்ல என்றாலும் சுவாரஸ்யம் கூட்டக்கூடிய பல அம்சங்களைப் புகுத்திவிடக் கூடிய கதை இது. ஆனால், ஏனோதானோவென்று காட்சிகளை அமைத்து அந்த வாய்ப்பைக் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் ஹிப்ஹாப் தமிழா.
அங்க கொஞ்சம்.. இங்க கொஞ்சம்..!
ரஜினி முருகனில் வரும் ராஜ்கிரண்-சிவகார்த்திகேயன், கடைக்குட்டி சிங்கத்தில் வரும் கார்த்தி-சூரி காம்பினேஷனை கொஞ்சமாக ‘பட்டி டிங்கரிங்’ பார்த்து, தாத்தா வரதராஜன் மற்றும் சித்தப்பா முருகன் பாத்திரங்களை படைத்திருக்கிறார் இயக்குனர்.
இளங்கோ குமணனும் பிராங்ஸ்டர் ராகுலும் அப்பாத்திரங்களில் நன்றாகவே நடித்திருக்கின்றனர்.
ஆனால், எமோஷனை சரியாகக் காட்டும் இளங்கோ குமணன் காமெடி என்று வரும்போது கொஞ்சம் திணறுகிறார்; காமெடியில் அதகளப்படுத்தும் ராகுல் எமோஷனில் ‘பேக்’ அடிக்கிறார்.
தான் வரும் காட்சிகளைத் தனக்கேற்றவாறு அமைத்துக்கொண்ட ஹிப்ஹாப் தமிழா, ராகுல் காமெடி செய்வதற்கேற்ப காட்சிகளை வடிவமைக்காதது பெருங்குறை.
ஹீரோவுக்கு இணையாக காட்சிகளும் திரைக்கதை அழுத்தமும் இருந்தாக வேண்டிய ஒரு கதாபாத்திரத்தை, இறுதியில் அம்போவென விட்டிருப்பது கொடுமை.
வில்லனாக வரும் விஜய் கார்த்திக்கும் ரஞ்சனாவும் அண்ணன் தங்கையா, ஜோடியா என்று உணர்வதற்குள் முக்கால்வாசி படம் முடிந்துவிடுகிறது.
ஆனால், இருவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கின்றனர். விஜய் கார்த்திக்கின் மைத்துனராக வந்துபோகும் கோபாலுக்கு கிளைமேக்ஸில் மட்டுமே வசனம் பேச வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
ஆதியின் பெற்றோராக வரும் மனோஜ்-அபிநயா ஜோடிக்கு பெரிதாக வேலையில்லை. அவர்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமோ எனும்படியே கதை இருக்கிறது.
ஹிப்ஹாப் தமிழாவின் நண்பனாக வரும் ஆதித்யா கதிர், ஒருகாலத்தில் சந்தானம், சூரி, சதீஷ் செய்த பணியைச் செவ்வனே செய்கிறார்.
நூடுல்ஸை சிதறவிட்டது போன்ற ஹேர்ஸ்டைல். ட்ரிம் செய்யப்படாத தாடி, ஏனோதானோவென்று உடையணியும் பாணி, அலட்சியமான உடல்மொழி என்று சிவகுமார் பாத்திரம் கல்லூரி, பள்ளி செல்லும் பருவத்தினரை ஈர்ப்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா.
நடனமாடும்போதும் சண்டையிடும்போதும் பற்கள் தெரிய வலம் வருபவர், சீரியசான காட்சிகளிலும்கூட அதையே ‘மெய்ண்டெய்ன்’ செய்கிறார். ஆனாலும், ஒரு ‘லைவ்’வான நடிப்பை அவரிடம் பார்க்க முடிவதில் மகிழ்ச்சி.
ஹிப்ஹாப் தமிழாவின் படங்களில் அவரது ஜோடியாக நடிப்பவர்கள் கொஞ்சம் வயதான தோற்றம் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். ஸ்ருதியாக வரும் நாயகி மாதுரியும் அந்த ரகம்தான்.
காதல், நகைச்சுவை காட்சிகளில் நன்றாக நடித்திருந்தும்கூட, மாதுரியின் முகத்தைப் பார்க்கும்போது தமிழ்ப்பெண்ணாகத் தோன்றாதது மிகப்பெரிய மைனஸ்.
காட்சிகள் பழசென்றாலும், பார்க்கப் புதிதாக இருக்க வேண்டுமென்று ஒரு டஜன் நடிகர், நடிகைகளைக் களமிறக்கியிருக்கிறார் இயக்குனர். சில இடங்களில் திரைக்கதையோடு ஒன்ற, அதுவே தடையாகவும் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா, படத்தொகுப்பாளர் தீபக் துவாரகாநாத், கலை இயக்குனர் வாசுதேவன் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் அறிமுகமாகியிருப்பது நல்ல விஷயம்.
பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, ஹிப்ஹாப் தமிழாவின் உழைப்பு முழுமை பெறாமல் போயிருப்பதில் வருத்தம்தான்.
சபதமாவது.. ஒண்ணாவது..!
‘போங்கய்யா நீங்களும் உங்க சபதமும்..’ என்ற வார்த்தைகளை உதிர்ப்பதற்கு ஏற்றவாறு, ஒரு சபதம் அபத்தமானதாக இருக்க வேண்டும்.
ஒருவேளை அது மிகவும் கேவலமானதாக கருதப்பட்டுவிடக் கூடாது எனும் பயத்தில், இப்படத்தில் சத்தமே இல்லாமல் சபதம் போடுபவராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி (தனது பெயரில் இருக்கும் பாதியை அவர் துறந்ததற்கான காரணம் என்னவோ!).
ஆனால், திரைக்கதையில் அதனை அழுத்தமாகப் பதிய வைக்காததுதான் பிரச்சனை. இதனால், முக்கியமான கட்டங்களில் சிரிப்பு வந்து தொலைக்கமாட்டேன் என்கிறது.
நகைச்சுவையில் ‘டைமிங்’ என்பது வெகுவேகமாக டயலாக் டெலிவரி செய்வது மட்டுமல்ல; தேவைப்படும்போது மவுனத்துக்கும் இடமளிக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் வடிவேலு காமெடிகளில் இருந்து பாடம் கற்கலாம்.
மனதில் கொண்ட தீர்மானத்தில் உறுதியாக இருக்கும் தாத்தா, அண்ணன் என்று கூப்பிடத்தக்க வயதில் ஒரு சித்தப்பா, இவ்விரு பாத்திரங்களுக்கும் ஹீரோவுக்குமான தொடர்பு இழை முழுதாகத் திரைக்கதையில் வெளிப்படவில்லை.
அதற்குப் பதிலாக டான்ஸ் ஆடிக்கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் கலாய்த்துக்கொண்டும் இருப்பது, ஹீரோவின் இலக்கு ஒன்றுமில்லாமல் இருப்பதுதான் என்றுணர்த்துகிறது.
இன்றைய இளைஞர்களால் தான் கொண்டாடப்பட வேண்டுமென்பதில் கவனமாக இருக்கும் ஹிப்ஹாப் தமிழா, இளைய சமூகம் இப்படித் தேவையற்ற விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமென்பதைத் தனது திரைக்கதையால் சூசகமாக உணர்த்துகிறாரோ என்றுகூட கவலைப்பட வேண்டியிருக்கிறது.
தான் நடிக்கும் படங்களில் கதைக்கருவைச் சுவைபடத் தேர்ந்தெடுக்கும் ஹிப்ஹாப் தமிழா, முழுத்திரைக்கதையும் அச்சுவையை வெளிப்படுத்துகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், இளம் ரசிகர்களைக் கவராமல் விடமாட்டேன் என்று எத்தனை உறுதிபடச் சபதமிட்டாலும் ‘சபதமாவாது.. ஒண்ணாவது..’ என்று யூடியூப் வீடியோக்கள் பின்னால் இளம் தலைமுறை சென்றுவிடும் அபாயத்தை அடுத்தடுத்த படங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!
– பா.உதய்