கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது.

கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர் பாதிப்புக்குள்ளாகி மீண்டிருக்கிறார்கள்.

தடுப்பூசிக்குப் பிறகும் பலர் பின்விளைவுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி பெரும் வணிகமானது. தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் மருத்துவம் என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டன.

பலர் வேலை வாய்ப்புகளை இழந்தார்கள். தொழிலை இழந்தார்கள். பிழைக்க வந்த ஊரை விட்டுச் சொந்த ஊர்களுக்குப் பராரிகளைப் போலப் போனார்கள்.

ஊரடங்கினால் பலரும் வீட்டுக்குள் கிடந்து புழுங்கினார்கள். காவல்துறையின் கெடுபிடிகள் அதிகமானதில் சிலர் உயிரிழந்தார்கள்.

இப்போது இரண்டாம் அலையின் வீச்சு ஒய ஆரம்பித்து, மூன்றாவது அலையின் பாதிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் பலரும். முன் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

எல்லாம் சரி, மனிதர்கள் எப்படியோ உயிரோடு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்கிறார்களா?

மிக வசதியானவர்களைத் தவிர, பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு விதத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

பலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது கொரோனா. சொந்த உறவுகளில் சிலரைப் பறிகொடுத்த குடும்பங்கள் அநேகம். வேலையை இழந்தவர்கள் படுகின்ற சிரமங்கள் அதிகம். நகைகளை விற்கிறார்கள்.

வட்டி அதிகரித்தும் கடன் வாங்குகிறார்கள். எப்படியோ நாட்களைத் தள்ளுகிறார்கள்.

குழந்தைகள் வினோதமான உலகத்திற்குள் ஐக்கியமாகி விட்டார்கள். சற்று வசதியான வீட்டுக் குழந்தைகள் எப்போதும் செல்போனே கதி என்று கிடக்கின்றன.

கல்வி கற்கும் விருப்பத்தை உலர வைத்திருக்கிறது கொரோனா.

வீட்டிப் பெண்கள் புலம்பித் தொலைக்காட்சி சீரியல்களில் தங்களைத் தொலைக்கிறார்கள். ஆண்கள் டாஸ்மாக்கைத் தற்காலிகத் தீர்வாக நினைக்கிறார்கள்.

நிறைய வீடுகளுக்குள் சண்டை, சச்சரவுகள் சாதாரணமாக நடக்கின்றன. விவாகரத்துகளும், குடும்பத்துடன் தற்கொலைகளும் நடக்கின்றன. எப்போதும் இவை நடப்பது தான் என்றாலும், கொரோனாக் காலத்தில் இவை அதிகமாக நடக்கின்றன.

வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றவர்கள் பாலியல் அத்துமீறல்களில் அதிகம் ஈடுபடுவதும் கூடியிருக்கிறது. மனசின் வக்கிரங்களும், குரூரங்களும் அழுக்கைப் போல வெளிவருகின்றன. குற்றவியல் புள்ளிவிபரங்கள் அதிகமாகின்றன.

குழந்தைகளைத் துன்புறுத்துவது முன்பை விடப் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. குடும்பம் என்கிற கட்டமைப்பு பல விரிசல்களைக் கொரோனாக் காலத்தில் சந்திக்கிறது.

செல்போன்களைத் திருடுவதிலும், பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளைத் திருடுவதிலும் நிறைய இளைய முகங்கள் பிடிபட்டு, தொலைக்காட்சி காமிராக்களுக்கு முன்னால் தங்கள் முகத்தை மறைக்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் மீது பலர் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளும் கொரோனாக் காலத்தில் தகர்ந்து போகின்றன.

நாளை எப்படியிருக்கும் என்கிற கேள்வி பலரையும் குடைய, பொதுவான அறம், நேர்மை, ஒழுக்கம் போன்ற சொற்கள் அர்த்தமிழந்து கொண்டிருக்கின்றன.

எங்கும் பொறுமையில்லாத அவசரமும், படபடப்புமான நிலை தலைதூக்கி நிற்கிறது. டிராஃபிக் சிக்னலில் பச்சை விளக்கு விழுவதற்குள் வாகனங்களில் விரைகிறவர்களைப் பார்க்க முடிகிறது.

துவைத்த துணிகளை அணிந்த படி – பிச்சை எடுப்பதை இதுவரை நினைத்திராத முதியவர்களும் நீண்ட நேரம் வாகன இரைச்சலுக்கிடையே கையேந்தி நிற்கிறார்கள்.

அடகுக் கடைகளிலும், மனநல மருத்துவமனைகளிலும் கூட்டம் அதிகமாகியிருக்கிறது.

கோவில்களில் கருவறைகளில் உறைந்திருந்த சாமிகள் கொரோனா இடைவெளிக்குப் பிறகு பூசைகளைச் சந்தித்துக் கொத்தான புகார்களுடன் வரும் பக்தர்களைச் சந்திக்கின்றன.

“இன்று நீ; நாளை நான்” என்பதை அமைதியாக வலியுறுத்துகின்றன பொது மருத்துவமனைகளின் பிணவறைகள்.

காலாவதி ஆகிவருகின்றன சுய முன்னேற்ற நூல் பிரதிகள். நாளை என்பது பலருக்கு இருள் சூழ்ந்த கனவைப் போலிருக்கிறது.

சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் வருவதற்கு முன்பே சில விலங்குகளும், பிராணிகளும், பறவைகளும் கூட முன்னுணர்வு கொள்வதைப் போன்ற பீதி பலருடைய மனங்களில் படர்ந்திருக்கிறது.

செவ்வாய்க் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு அங்குக் குடியேறுவது பற்றி ஆராய்ச்சி நடத்துகிற நாடுகள் கொரோனா என்கிற சின்னஞ்சிறு கிருமி எங்கிருந்து உருவானது என்பதைக் கண்டறிவதில் தோற்றுப் போகின்றன.

நவீனத் தொழில்நுட்பத்திற்கு முன்னால் ‘ரோபோ’வைப் போன்ற இயந்திர மனிதர்களும், தந்திரங்களை மட்டுமே முன்னிறுத்தி இயங்கும் மனிதர்களைப் போன்றவர்களுமே நாளையக் கவலையற்று இருக்கிறார்கள்.

கொரோனா நமது உடலில் பரப்ப முனையும் தொற்றை ஏதாவது தடுப்பூசி போட்டுக் கூடத் தடுத்துவிட முயலலாம்.

ஆனால் நம் மனங்களில் கொரோனா உருவாக்கியிருக்கும் மனரீதியான தொற்றை எப்படித் தடுப்பது? மாற்று நம்பிக்கையை யார் மூலம் எப்படி உருவாக்குவது?

Comments (0)
Add Comment