மாக்சிம் கார்க்கியின் சிறுகதைகள்!

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 7

ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகங்களில் விலை மலிவான  தரமான ரஷ்ய இலக்கிய நூல்கள் தமிழக வாசகர்களிடையே பிரபலமாக இருந்தன.

லியோ டால்ஸ்டாய், தஸ்வோவெஸ்கி, மாக்சிம் கார்க்கி,  நிகொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ் உள்ளிட்ட பல எழுத்து ஆளுமைகளின் படைப்புகள் பரிச்சயமாயின. இன்றும் அவை வாசகர்களிடையே படிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதுதான் அந்த எழுத்துகளின் பெருமையாக இருக்கிறது.

தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பில் மாக்சிம் கார்க்கி எழுதிய சந்திப்பு, தாலாட்டு, சிவப்பன், சங்கீதம் ஆகிய நான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூலை ஜோலார்பேட்டையைச் சேர்ந்த தேநீர் பதிப்பகம் கொண்டு வந்துள்ளது.

அழகிய அட்டைப் படத்துடன் வாசிப்பதற்கு ஏற்ற எழுத்துருக்களுடன் செம்மையாக வெளி வந்துள்ளது. இந்த நூல் முதன்முதலில் வெளியான ஆண்டு 1951.

மாக்சிம் கார்க்கியைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கத் தேவையில்லை என்கிறார் தொ.மு.சி. ரகுநாதன். நூலில் அவர் எழுதியுள்ள முன்னுரையில், வெளிநாட்டுக் கதையாசிரியர்களிலேயே தமிழ் மக்களின் மனத்தைக் கவர்ந்து பேராதரவு பெற்று விட்டவர்களில் கார்க்கியே முதன்மையானவர் என்று சொல்லலாம். உலகத்தின் முற்போக்கு இலக்கியத்திற்கு அவர் பிதாவாக விளங்குகிறார் என்கிறார்.

மக்களது போராட்டத்தில் கார்க்கி பங்குகொண்டார். நசுக்கப்பட்ட மக்கள் குலத்தின் மத்தியிலேயே பிறந்து, அந்த நரக வாழ்வைத் தாமும் அனுபவித்து, அதற்கு விடுதலை காணும் இயக்க சக்தியோடு தோளோடு தோள் நின்று போராடிய வீரன் மாக்சிம் கார்க்கி.

இவரது கதைகளின் உயிர் மூச்செல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனத்திலே எப்படி மனிதத் தன்மை சிறந்து விளங்குகிறது, எப்படி போராட்ட சக்தி உள்ளடங்கி நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை விளக்குகின்றன.

இந்த நூலில் உள்ள கதைகள் அனைத்திலும் கார்க்கி மனிதத் தன்மையை எவ்வளவு சிறப்பாக மதிக்கிறார், உணர்கிறார் என்பதையே நாம் காண்கிறோம். முற்போக்கு இலக்கியம் சிருஷ்டிக்க விரும்புபவர்களுக்கு இந்தக் கதைகள் ஒரு முன்மாதிரி.

முற்போக்கு இலக்கியத்தைப் பிரச்சார இலக்கியம் என்று குறைகூறும் சனாதனிகளுக்கு இந்தத் தொகுதி ஒரு பதில் எச்சரிக்கை என்ற தொ.மு.சி. ரகுநாதனின் வார்த்தைகள்  நினைவு கூரத்தக்கவை.

மாக்சிம் கார்க்கி எழுதியுள்ள எப்படி எழுதினேன் என்ற நான்கு பக்கக் கட்டுரை மிக முக்கியமானது. அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய அனுபவம். “நான் படித்த பிற இலக்கியங்கள் இருக்க, பிரெஞ்சு இலக்கியத்தில் இருந்துதான் எழுதக் கற்றுக் கொண்டேன்.

இது தற்செயலாக நடந்தபோதிலும், இளம் எழுத்தாளர்கள் கட்டாயம் பிரெஞ்சு இலக்கிய மேதைகளின் நூல்களைப் படித்து அவர்களின் சொல்லாட்சிக் கலையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றே சொல்வேன்” என்று எழுத வந்த கதையைப் பகிர்ந்துகொள்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் மனிதனை மிஞ்சிய கருத்து கிடையாது. மனிதன்தான் மனிதன் மட்டும்தான் சகல பொருள்களுக்கும்  கருத்துக்கும் சிருஷ்டி கர்த்தா. அவனே மாயாஜாலன். அவனே இயற்கையின் சகல சக்திகளுக்கும் எதிர்கால எஜமான்.

நமது உலகில் உள்ள அழகிய பொருள்களெல்லாம் நமது உழைப்பின் சிருஷ்டி. மனிதக் கரங்களின் படைப்பு. நான் மனிதனுக்குத் தலைவணங்குகிறேன் என்ற மாக்சிம் கார்க்கியின் சத்தியமான வார்த்தைகளை நீங்கள் அவர் எழுதிய கதைகளில் உணரமுடியும். படித்துப்பாருங்கள்.

சந்திப்பு (சிறுகதைகள்): மாக்சிம் கார்க்கி,
தமிழில்: தொ.மு.சி. ரகுநாதன்
வெளியீடு: தேநீர் பதிப்பகம்,
24/1, மசூதி பின் தெரு,
சந்தைக்கோடியூர்,
ஜோலார்பேட்டை – 635851.
விலை ரூ. 100

09.03.2021 01 : 20 P.M

Comments (0)
Add Comment