நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?

நினைவில் நிற்கும் வரிகள்:

***

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்?
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே…

பின்னே நன்மை தீமை என்பது என்ன?
பாவ புண்ணியம் என்பது என்ன? பாதையிலே…

                                                                (நீங்கள்…) 

அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன்
சாமியைப் போலே வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன்
உத்தமன் போலே காண்கின்றான்

                                                                             (நீங்கள்…) 

சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம்
இவரை விடாது சொல்கின்றேன்

பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன்
தலைமுறை வரையில் பார்க்கின்றேன்

                                                      (நீங்கள்…) 

1974-ம் ஆண்டு சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த ‘என் மகன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

27.02.2021 12 : 56 P.M

Comments (0)
Add Comment