“யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றிய போது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது.
வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஸ்ரீரங்கத்துக்கு கலைவாணர் வந்த செய்தி கேட்டு பொன்னுசாமி பிள்ளை அவர்கள் அவரைக்காண என்னையும் கூட்டிக்கொண்டு சென்றார்.
தடபுடலாக எங்களை வரவேற்ற என்.எஸ்.கே, சாப்பிடச் சொல்லிவிட்டு நலம் விசாரித்தார். அப்போது கம்பெனியின் கஷ்ட நிலையை வாத்தியார் (பொன்னுசாமி பிள்ளை) சூசகமாக என்.எஸ்.கே அவர்களிடம் சொன்னார்.
பின்னர் நாங்கள் புறப்பட்டபோது வாத்தியாரிடம் ‘கல்கி’ புத்தகத்தைக் கொடுத்து, 30-ம் பக்கத்தில் நல்ல கதை ஒன்று வந்திருக்கு, அதைப் படித்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார் என்.எஸ்.கே.
சோர்ந்த நிலையில் நாங்கள் வெளியே வந்தோம். அங்கே நாடக நடிகர்கள் எல்லோரும் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கல்கி புத்தகத்தில் 30-ம் பக்கத்தைப் புரட்டியபோது அதில் 3000 ருபாய் வைத்திருந்தார் கலைவாணர். அதைப் பார்த்ததும் எங்கள் கண்கள் கலங்கிவிட்டன.
பகல் நேரத்தில் அறிஞர் ஒருவர் கையில் விளக்குடன் மனிதனைத் தேடிச் சென்றார் என்ற கதையைக் கேட்டிருக்கிறேன். என் அறிவுக்கெட்டியவரை அந்த ‘மாமனிதர்’ கலைவாணர்தான் என்று எனக்குத் தோன்றுகிறது.”
-வி.கே.ராமசாமி எழுதிய ‘எனது கலைப் பயணம்’ நூலில் இருந்து.
நன்றி: என்எஸ்கே நல்லதம்பி முகநூல் பதிவு.
26.02.2021 04 : 59 P.M