தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான ஆயுத்தப் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன.
முன்னதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழகம் வந்து இங்குள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மேலும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், டி.ஜி.பி., தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
இந்நிலையில் இன்று மாலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களுடன் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உதவும் வகையில் இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கமாக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உதவும்படி 2 தேர்தல் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கும். அவர்கள் இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
அதன்படி வேளாண் இணைச் செயலராக இருந்த ஆனந்த் ஐ.ஏ.எஸ். இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் சுகாதாரத்துறை இணைச் செயலராக இருந்த அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
18.02.2021 12 : 55 P.M