பெற்றோர்களைவிட, ஆசிரியர்களால்தான் நான் வளர்க்கப்பட்டேன்!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில் தமிழிசை சௌந்தரராஜனின் பள்ளிப் பிராயம்.

****
“மதுரையில்தான் என் ஆரம்பப் பள்ளிப்படிப்பு தொடங்கியது. சௌராஷ்டிர மக்கள் அதிகம் வசித்த பெருமாள்கோயில் தெருவில் குடியிருந்தோம். அங்கிருந்த சிறிய பள்ளியில்தான் அப்பா என்னை சேர்த்தார். சாக்லெட்டுகள் வாங்கிக் கொடுக்காமல் மா, பலா, வாழைப்பழம் கொடுத்து பள்ளியில் சேர்த்தார். பால்யத்திலேயே இயற்கை, சுதேசி என்கிற எண்ணம் என்னுள் அப்பாவால் விதைக்கப்பட்டது.

அண்மையில் மதுரை சென்றிருந்தபோது, அந்தப் பகுதியில் இருந்த பெரியவர்கள், “இந்தத் தெரு வழியாகத்தான் அப்பா உங்களை ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போவாங்க” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்கள்.

மதுரையில் படித்த காலத்தில்தான் அப்பாவை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக காமராஜர் நியமித்தார். அப்பாவின் மேடைப் பேச்சைக் கவனித்த ஈ.வெ.கி.சம்பத் இதுபோன்ற இளைஞர்கள்தான் தலைமைக்கு வரவேண்டும் என்று காமராஜரிடம் சொல்லி இருக்கிறார்.

பின்னர், நாங்கள் குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர வேண்டியிருந்தது. நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில்தான் வீடு. வள்ளுவர் கோட்டம் பகுதி அப்போது குப்பை மேடாக இருக்கும். அதற்கு எதிரே இருந்த பத்மா சேஷாத்ரி பள்ளியில்தான் யூ.கே.ஜி. படித்தேன்.

அருகிலேயே அங்காளம்மன் கோயில். அங்கு வனிதா டீச்சர் இருந்தார். நோட்டு, புத்தகங்கள், பென்சில்களை வகுப்பில் கொடுத்து, வீடு திரும்பும்போது கேட்டு வாங்கி வைத்து விடுவார்கள். குழந்தைகள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்த வசதியை செய்திருந்தார்கள்.

பிறகு, திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்துக்கு குடும்பம் இடம்பெயர வேண்டி வந்தது. காங்கிரஸ் கட்சியில் அப்பா தீவிரமாகப் பணியாற்றிய காலகட்டம் அது. அதனால் குடும்பத்தைக் கவனிக்க முடியாது என்று எங்களை தாத்தா வீட்டில் கொண்டுபோய் விட்டார்.

அங்கு நேரு உயர்நிலைப்பள்ளி இருந்தது. அந்தப் பள்ளியை அம்மாவின் தந்தையார் சங்கு கணேசன், ராஜேந்திரனார் ஆகியோர் சேர்ந்து உருவாக்கினார்கள். ஸ்ரீமகள் என்ற பெயரில் காலண்டர் தயாரிக்கும் தொழிலில் தாத்தா ஈடுபட்டிருந்தார்.

அந்தப் பள்ளிக்கு தாத்தாவே தாளாளர். என் படிப்பை டெஸ்ட் செய்துவிட்டு, “ஏ, பி, சி, டி எல்லாம் நல்லா சொல்றா குட்டி. இங்க மூணாம் கிளாஸ் குழந்தைகளுக்குத்தான் ஏ, பி, சி, டி சொல்லித் தர்றோம்னு சொன்னார்கள். என்னை புரோமோஷன் கொடுத்து மூன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். ஓர் ஆண்டுதான் அங்கு படித்தேன். பிறகு நான்காம் வகுப்புக்கு அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளிக்கு வந்துவிட்டேன். அப்போது, அசோக் நகர் ஸ்டேட் பாங்க் காலனியில் வீடு இருந்தது.

தமிழிசை என்ற பெயர் வைத்திருந்ததால், அப்பா என்னை தமிழ் மீடியத்தில்தான் சேர்த்துவிட்டார். ஆங்கில மீடியம் வகுப்புகளுக்கு நல்ல இடம், தமிழ் மீடியம் வகுப்புகளுக்கு சாதாரண இடம்.

அப்போது பர்வதம் என்றொரு ஆசிரியை இருந்தார். சுதந்தர தின விழாவின்போது பள்ளியில் ‘கல்யாணப் பரிசு’ படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிட்டார்கள். அதனை அப்பா எதிர்த்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற படங்களை திரையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது கருத்தை ஆசிரியைகள் வரவேற்றார்கள்.

இன்னாரின் மகள் என்பதைவிட நல்லா படிக்கிற பொண்ணு என்ற அறிமுகம் பள்ளியில் இருந்தது. சுறுசுறுப்பாக இருப்பேன். வகுப்பில் “நோட்டுப் புத்தகங்களை கலெக்ட் செய்யுங்கள்” என்று ஆசிரியை சொன்னால், உடனே நான் முன்வந்து செய்வேன். அடுத்து, ராயபுரத்துக்கு நகர வேண்டியிருந்தது.

1971 சட்டமன்றத் தேர்தலில் அப்பா, ராயபுரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் நின்ற வேதாசலம் வென்றார். “வென்றாலும் தோற்றாலும் ராயபுரத்தில்தான் வசிப்பேன்” என்று தொகுதி மக்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்தார் அப்பா. அதனால் எங்கள் குடும்பம், 13, கிழக்கு மாதா கோயில் தெரு, ராயபுரம் என்ற முகவரிக்கு குடிபெயர்ந்தது.

அதைத் தொடர்ந்து, செயின்ட் ஆண்டனி பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். அங்கு ஏ, பி, சி, டி, இ – வரை பிரிவுகள் இருந்தன. ஏ மட்டும் ஆங்கில மீடியம். மற்ற எல்லாமும் தமிழ் மீடியம். எம்.எல்.ஏ.வுக்கு நின்றவரின் மகள் என்பதால் கூடுதல் கவனம் பள்ளியில் இருந்தது.

வகுப்பில் ஆசிரியைகள் கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்வேன். எல்லோரையும்விட சின்னப் பெண்ணாக இருந்தேன். அதை கவனித்த க்ளாஸ் டீச்சர் ரெஜினா, ஸ்டாப் ரூமுக்கு அழைத்துப் பேசினார். “நீ நல்லா படிக்கிற பொண்ணு. ஆங்கில மீடியத்துல படிக்கிறது உனக்கு நல்லது. நான் அப்பாகிட்ட பேசறேன்” என்றார்.

இன்னொரு ரெஜினா டீச்சரும் பள்ளியில் இருந்தார். அவர் உயரமானவர். அறிவியல் ஆசிரியை. அவருக்கும் என் மீது பிரியம். தமிழ் மீடியத்துல படிச்சா, பிளஸ்-டூ முடிச்சு கல்லூரியில் சேரும்போது சிரமமாக இருக்கும் என்று அப்பாவிடம் வந்து பேசினார்கள். ஆசிரியைகள் பரிந்துரைத்தால் ஆங்கில மீடியத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்று என்னை ஆறாம் வகுப்பு ஏ பிரிவுக்கு மாற்றினார்கள். அப்பா கடுமையாக எதிர்த்தார்.

பழைய கணக்குகள் போய், மாடர்ன் மேத்ஸ் அறிமுகமான காலகட்டம் அது. ஆனால் எனக்குக் கணக்குப் பிடிக்காது. ஆசிரியை மீனாட்சிதான் கணக்குப் பாடம் எடுப்பார், அடி வாங்குவேன்; திட்டு வாங்குவேன்; அறிவியலில் வெரிகுட் வாங்குவேன். அழகாகப் படங்கள் வரைவதால் ரெஜினா டீச்சர் பாராட்டுவார். என்னை உற்சாகப்படுத்துவார். தமிழாசிரியை மங்கையர்க்கரசி, தமிழ்ப் பாடங்களை அருமையாக சொல்லித் தருவார்.

சுதந்திர தின விழாவின்போது லைட் அண்ட் சவுண்ட் நிகழ்ச்சியை பள்ளியில் ஏற்பாடு செய்தார்கள். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்று தமிழாசிரியை கூறியதும் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தேன். வீட்டிற்குப் போய் வசனங்களை மனப்பாடம் செய்தேன். என்ன உடை அணிய வேண்டும் என்று டீச்சரிடம் கேட்கப் போனேன்.

“நீ கறுப்பாக இருக்கிறாய். பத்மினி சிவப்பா நல்ல உயரமாக இருக்கிறாள். அவள் கட்டபொம்மனாக வரட்டும். நீ பின்னணிக் குரல் கொடுத்தால் போதும்” என்று மங்கையர்க்கரசி டீச்சர் கூறியதும், எனக்குக் கோபம் வந்துவிட்டது. முதன் முதலில் பள்ளியில் ஆசிரியையை எதிர்த்துப் பேசினேன்.

“எனக்குத் தகுதி இல்லையா?” என்று அவரிடம் கேட்டேன். அன்று முதல் நான் உடையில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டேன். என்னை தோற்றத்தில் மேம்படுத்திக் கொள்ள அந்தச் சம்பவம் ஒரு காரணமாக அமைந்தது.

நான் பள்ளியில் புளு ஹவுஸ் லீடராக இருந்தேன். ஸ்கவுட்டுக்கும் லீடர். காமராஜர் மறைவுக்குப் பிறகு பள்ளி அசெம்ப்ளியில் அவரைப் பற்றிப் பேசினார்கள். நான் அப்பாவுடன் சென்று பலமுறை காமராஜரைப் பார்த்திருக்கிறேன். அதனால் நினைவுகள் வர தேம்பித் தேம்பி அழுதேன்.

அதைக் கண்ட மங்கையர்க்கரசி டீச்சர், “இப்படி எமோஷனலாகக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும்” என்று ஆறுதல் சொன்னார். அந்த நாள் இன்றும் நினைவில் மங்காமல் இருக்கிறது.

ஒருமுறை என் அப்பா பள்ளிக்குப் பேச வந்திருந்தார். அந்த விழாவில் எட்டாம் வகுப்பு மாணவிகள் கலந்துகொள்ளமுடியாது. வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நான் பேசுவேன் என்பதால், அந்த விழாவில் என்னை நன்றியுரை பேச வைத்தார்கள். மேடையில் ஏறி, விழாவுக்கு வந்திருக்கும் குமரி அனந்தன் அவர்களுக்கு நன்றி என்றேன்.  அப்பா என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டார்.

ஆங்கிலத்தில் அழகாக எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் ஷெர்லி டீச்சர். அந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் படித்தேன். இப்போதும்கூட பல பள்ளிகளில் பேச அழைக்கிறார்கள். பெற்றோர்களால் வளர்க்கப்பட்டதைவிட, நான் ஆசிரியர்களால்தான் வளர்க்கப்பட்டேன் என்று குறிப்பிட்டுப் பேசுவேன். அதுதான் யதார்த்தம்.

அரசியல் தலைவரின் குடும்பத்தில் பிறந்ததால், எங்கள் படிப்பு பற்றி அப்பாவுக்கு எதுவும் தெரியாது. வீட்டுக்கு வருகிறவர்கள், “மகள் என்ன படிக்கிறாள்?” என்று அப்பாவிடம் கேட்டால், என்னைக் கூப்பிட்டு “என்ன வகுப்பு படிக்கிறேன்னு சொல்லு” என்பார். அந்த அளவுக்குத்தான் அவரது கவனம். பள்ளியில் நடக்கும் பெற்றோர் சந்திப்புக்குக்கூட சித்தப்பா வசந்தகுமார்தான் வருவார்.

பள்ளியில் படிக்கும்போது கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். அதற்காக ‘கூண்டுக்கிளி’ என்ற தலைப்பில் கட்டுரை எழுத நினைத்தேன். அப்பாவிடம் போய் கேட்டேன். “வீட்டில் உள்ள புத்தகங்களைப் படித்து எழுது”  என்று சொல்லிவிட்டார்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதை ஒன்று கூண்டுக்கிளி பற்றி இருந்தது. அந்தக் கவிதையுடன் என் கட்டுரையை ஆரம்பித்திருந்தேன். இப்படிப் பேச்சு, கட்டுரை எழுதும் திறன்களை வளர்த்துக்கொள்ள உற்சாகப்படுத்தியவர்கள் என் பள்ளி ஆசிரியர்களே.

பிளஸ்-டூவுக்குப் பிறகு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே தமிழ்ப் பற்றுள்ள பல பேராசிரியர்கள் இருந்தார்கள். சாரதா கதிரேசன், லலிதா காமேஸ்வரன், வாதா பலராமன், தெய்வநாயகம் போன்றோர் பாடம் கற்பித்தார்கள். அந்த மருத்துவ ஆசிரியர்களும் என்றும் நினைவில் நிற்கிறார்கள்.

மருத்துவப் படிப்பின் முதல் ஆண்டிலேயே பேச்சுப் போட்டியில் பங்கேற்றேன். அங்கு நடந்த கலைவிழாவில் வழக்கம்போல ‘நாணயம்’ என்ற தலைப்பில் பேசினேன். சீனியர் மாணவ, மாணவிகள் ஒரே கூச்சலிட்டனர். என்னைப் பேசவிடாமல் தடுத்தனர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படாமல் பேசி முடித்தேன். அதற்காகவே எனக்கு ஆறுதல் பரிசு கொடுத்தார்கள்.

எம்.பி.பி.எஸ். முதலாண்டு படிக்கும்போது எனக்குத் திருமணம் நடந்தது. கணவர் சௌந்தரராஜன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் துறை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். நானும் அவருடனேயே கல்லூரியை மாற்றிக்கொண்டு போய்விட்டேன்.

அங்கும் மோகன்தாஸ், கலாவதி, லெட்சுமி என்று சிறந்த பேராசிரியர்கள் இருந்தார்கள். தினமும் கல்லூரிக்கு கணவருடன் ஸ்கூட்டரில் போவேன். பேத்தாலஜியில் குறைவான மதிப்பெண்கள் பெற்றேன். “தினமும் ஸ்கூட்டரில் சுத்தத் தெரியுது. மார்க் எடுக்கத் தெரியாதா?” என்று ஒரு பேராசிரியர் திட்டினார். பிறகு, ஸ்கூட்டரில் என் கணவருடன் வருவது குறித்து அவரிடம் விளக்கினேன்.

எம்.பி.பி.எஸ். முடித்ததும் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் டி.ஜி.ஓ. படித்தேன். அங்கு சாவித்திரி, ஜெயா, உஷாராணி, தனலெட்சுமி என்று நட்புடன் பழகிய மருத்துவர்களை சந்திக்க முடிந்தது. தலைமைப் பண்பும், பேச்சாற்றலும், எழுதும் ஆர்வமும் பள்ளிப் பிராயத்திலேயே தொடங்கிவிட்டது.

எப்போதுமே சொல்வேன், நான் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவள் என்று. இப்போதும்கூட “நல்லா தமிழ் பேசுறீங்களே” என்பார்கள். “தமிழ் கற்றதனால் பேசவில்லை. தமிழ் பெற்றதனால் பேசுகிறேன்” என்று பதில் சொல்வேன்.

16.02.2021  03 : 20 P.M

Comments (0)
Add Comment