வாருங்கள் இளைஞர்களே வடம் பிடிப்போம்!

ரஜினிகாந்த் தயாரித்த ‘அரசியல்’ படம் திரையரங்குகளுக்கு வராமலேயே பெட்டிக்குள் பூட்டப்பட்டு விட்டது. ஆனால் அவரது ரசிகர்கள் அல்லது ரசிகர்கள் போல் சாயம் பூசிக்கொண்டு நின்றவர்கள் “வா தலைவா தலைமை ஏற்க வா” என்று கூவிக் கூவி அழைத்தனர். அவரோ “என்னை விட்டு விடுங்கள். என் மனதைப் புண்படுத்தாதீர்கள்” என்று அறிக்கை விட்டு மன்றாடுகின்றார்.

இந்த நிகழ்வைப் பார்க்கும்போது என் நண்பர் ஒருவர் எப்பொழுதும் கேட்கும் கேள்வி எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவர் எப்போதும் கேட்பார்.

“பலரையும் ‘தலைவர்’ என்கின்றனர் நமது மக்கள். நான் அவர்களைத் தரகர் என்கின்றேன்” என்பார். பலர் தலைவர் என்ற வார்த்தையைப் பொருள் புரியாமல் பயன்படுத்துகின்றனர் என்று கூறுவார். தலைவர் என்பவர் பிம்பத்தின் பின் நிற்கின்றவரா அல்லது ஆத்மாவின் சொரூபமாக செயல்படுபவரா?

அத்துடன் தலைவர் என்பவர் அறிவால் உருவாகின்றாரா அல்லது உணர்வால் உந்தப்பட்டு செயல்பாட்டுக் களத்தில் தன்னை இழந்து உருவாக்கிக் கொள்கின்றாரா?

தலைவர் என்பவர் சூழலில் சிக்குண்டு போகாமல், சூழலைச் சமாளிப்பவரா அல்லது சூழலை வென்றெடுத்து புதுச் சூழலை உருவாக்குபவரா?

தலைவர் என்பவர் சுயநலம் மறுத்து தன்னலமற்றவராக வாழ்பவரா அல்லது தன்னை மேம்படுத்திக் கொள்பவரா? தலைவர் என்பவர் சமூகத்தை மாற்றுபவரா அல்லது தன்னை மாற்றிக் கொண்டு மற்றவருக்கு வழிகாட்டுபவரா? தலைவர் ஆன்மாவில் வளர்பவரா? அல்லது உடலில் வாழ்பவரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேட நாம் முயற்சித்தால் நமக்குக் கிடைக்கும் பதில்கள் பொதுத் தளத்தில் ‘தலைவர்’ என்ற பதம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ, அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது.

தலைவர் என்பவர் மக்களுடன் வாழ்பவர், அவர் பிம்பத்தில் வாழ்வதில்லை. தலைவர் மக்களை மதிக்கும் உயர்ந்த கலாச்சாரத்திற்குச் சொந்தக்காரர். அவர் பதவியை நோக்கி ஓட மாட்டார். பதவி அவரை நோக்கி ஓடிவரும். தலைவர் மக்களுக்கு ஒரு வழிகாட்டி. அவர் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுப்பவர்.

நாம் பலரையும் இன்று தலைவர் என்று அழைத்து, தலைவர் என்ற சொல்லுக்கு பொருள் புரியாமலேயே அந்தச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம்.

ஒரு காலத்தில் அந்தச் சொல் மனிதர்களுக்கு வழங்கப்பட்டது. இன்று அது பதவிகளுக்கு வழங்கப்பட்டு, அந்தப் பதவிகளில் அமர்வோரைக் குறிப்பதாக மாறிவிட்டது. பதவிகளில் அமர்கிறவர்களுக்குத் தலைவருக்கான குணங்கள் இருக்கின்றதோ இல்லையோ, அவர்களை தலைவர்கள் என்று நாம் அழைக்கின்றோம்.

இன்று அந்தச் சொல் சந்தையில் மட்டும்தான் சரியான பதத்தில் உபயோகத்தில் உள்ளது. ஆகையால்தான் அந்தச் சொல் பற்றி அதாவது தலைமைத்துவம் பற்றி எண்ணிலடங்கா ஆராய்ச்சிகள் மேலாண்மைத் துறையில் நடைபெற்று புத்தகங்கள் பதிப்பித்துக் குவிக்கப்படுகின்றன.

அந்த தலைமைத்துவப் பண்பை வளர்ப்பதற்கான முறைமையும் கண்டுபிடித்து உயர்நிலைக் கல்விக் கூடங்களில் பாடத்திட்டமாக உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர் பல மேற்கத்திய நாடுகளிலும், வட அமெரிக்க நாடுகளிலும். அதற்கு மிகப்பெரிய தொகையாக கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்து அந்தப் படிப்புக்குச் செல்லும் மாணவர்களிடம் கட்டணமாக வசூல் செய்கின்றனர்.

அந்தப் படிப்புக்களைப் படித்து விட்டு வெளிவரும் மாணவர்களுக்கு வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சம்பளம் நிர்ணயித்து பணியில் அமர்த்துகின்றனர். அடிப்படையில் பொதுத்தளத்தில் மக்கள் உபயோகப்படுத்தும் தலைவர் என்ற சொல் அறிவுலகில் நடைமுறையில் இருப்பதற்கு முற்றிலுமாக மாறுபட்ட பதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுத்தளத்தில் மக்கள் எப்படிப் புரிந்து கொண்டு தலைமைத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நிறுவனங்களில், அமைப்புக்களில் பொறுப்புக்களில் அதிகாரங்கள் மிக்கவர்களை, ஆதிக்கம் செலுத்துபவர்களை தலைவர்களாகப் பாவித்து செயல்பட்டு இன்று அந்தச் சொல் மக்கள் மனதுக்குள் செலுத்தப்பட்டு விட்டது.

அதை மக்களை இயக்கும் பதமாகப் பயன்படுத்துகின்றோம். ஆனால் உண்மையில் தலைமைத்துவம் மற்றும் தலைவர் என்ற சொற்களுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கப்படும் பொருள் வேறு.

தலைவர் என்றால் மாற்றங்களை மேலாண்மை செய்பவர் என்று பொருள். அந்த மாற்றங்களைச் செய்வதற்கான அடிப்படை தகுதிகளை வளர்த்துக் கொள்ள ஒருவர் முதலில் தன்னை மாற்றிக் கொண்டு பிறகு சமூகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த  வேண்டும். அப்படி ஏற்படுத்துபவருக்குப் பெயர்தான் தலைவர்.

அவர் மக்களுடன், அதாவது யாருக்கான மாற்றத்திற்காக செயல்படுகிறாரோ, அவர்களுடன் இணைந்து அவர்கள் வாழும் வாழ்க்கையை வாழ்ந்து மாற்றங்களைக் கொண்டு வருகின்றவர்களைத் தான் தலைவர் என்று அழைக்கிறார்கள் .

தலைமைக்குத் தேவை குறியீடு போதனையோ அல்லது மனதை மயக்கும் உரையோ அல்ல. உண்மையை தன்னை நம்பும் மக்களின் ஆன்மாவுக்குள் கொண்டு செல்பவர்தான் தலைவர். தலைமை என்பது தன்னை பிறருக்காக இழப்பது. தலைமை என்பது மற்றவரை அடக்கி ஆள்வதல்ல, தன்னை அடக்கி உயர்ந்து வாழ்வது.

தலைமை என்பது அனைவரையும் அரவணைத்து தன்னுடன் வருவோரின் உள்ளங்களில் குடிகொள்வது. தலைமை என்பது பிறரின் மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்ல, அனைவரையும் அன்பால் இணைப்பது.

தலைமை என்பது வெறுப்பை உருவாக்குவது அல்ல, மாறாக கருணையே வடிவமாகக் கொண்டு வாழ்தலாகும். தலைமை என்பது தனக்குள் இருக்கும் தனித்தன்மையை அறிந்து, வாழ்க்கையைப் பொருள்பட வாழ, வாழ்க்கையின் உன்னதங்களை உருவாக்குவது.

தலைமை என்பது மானுடச் செயல்பாடு நடைபெறுகின்ற அனைத்து இடங்களிலும் வெளிப்படுகின்ற ஒரு உன்னதக் குணம். எங்கெல்லாம் மாற்றங்கள் நடைபெறுகின்றதோ, அங்கெல்லாம் தலைமை இருக்கிறது என்று பொருள். எனவே மாற்றத்தைக் கொண்டு வருவதும் அதை மேலாண்மை செய்வதும் தான் தலைமைக்கு சரியான விளக்கமாக இன்று முன்வைக்கப்படுகிறது. உலகில் நடந்த மாற்றங்கள் அனைத்தும் ஒருவரால் கொண்டு வரப்பட்டதல்ல.

அதேபோல் ஒரு நாட்டில் நடந்த மாற்றங்கள் தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ள ஒரு அதிபரோ அல்லது பிரதம மந்திரியால் மட்டுமோ வருவது அல்ல. ஒவ்வொரு நிலையிலும் பொறுப்பிலுள்ளவர்கள் அல்லது பொறுப்பெடுத்துக் கொண்டு செயல்படுபவர்களால் கொண்டு வரப்படுவது.

கிராமத்தில் இயங்கும் ஒரு அரசு பள்ளிக் கூடத்தில் தொடங்கி நாட்டைப் பாதுகாக்கும் ஒரு படைத் தளபதி வரை அனைவரிடமுமே தலைமைத்துவச் செயல்பாடு இருக்கிறது. ஒரு கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிக்கூடம் ஒரு புதிய தலைமை ஆசிரியரைப் பெறுகிறது.

அதுவரை அங்கு இருந்த தலைமையாசிரியர் ஏன் தங்கள் பள்ளியிலிருந்து மாணவர்கள் தனியார் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று யோசிக்காமல் காலத்தைக் கழித்தார்.

புதிதாக வந்தவருக்கு அது வேதனையாக இருந்தது. பள்ளி வளாகம் தூய்மையாக இல்லை, வகுப்பறை வெளிச்சமற்று இருந்தது, வகுப்பறையில் காற்றோட்டம் கிடையாது, கழிப்பறைகள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை, அனைத்தும் தாழ்நிலையை அடைந்திருந்தன.

புதிதாகச் சேர்ந்தவர் முதலில் தான் செய்ய வேண்டிய பணிகளை மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரனமாக செய்தார். அது மற்ற ஆசிரியர்களைப் பாதித்தது, அவர்களும் புதிதாக வந்த தலைமையாசிரியருடன் களத்தில் இறங்கினர். பள்ளி மாறத் துவங்கியது.

பெற்றோர்கள் கவனித்தார்கள், ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் கவனித்தார்கள், இளைஞர்கள் கவனித்தார்கள், பணி செய்து ஓய்வு பெற்று அந்த ஊரில் வசித்து வந்த அரசு ஊழியர்கள் கவனித்தார்கள். கவனித்தது மட்டுமல்ல, நாங்களும் உங்களுக்கு உதவியாகக் களத்திற்கு வரட்டுமா எனக் கேட்டார்கள்.

இரண்டாண்டில் அரசுப் பள்ளி, தரமான பள்ளியாக மாறியது. தனியார் பள்ளியில் சேர்ந்திருந்த குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள் என பெற்றோர்களிடம் வேண்டி, ஒரு உத்தரவாதத்தை தந்தார் அந்த தலைமையாசிரியர். மக்கள் அவர் செய்த காரியங்களைப் பார்த்து அவர்மேல் நம்பிக்கை வைக்கத் துவங்கி மீண்டும் அந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ந்தனர். அந்தப் பள்ளி மீண்டெழுந்து மாதிரிப் பள்ளியாக உருவானது.

அரசாங்கம் அவருக்கு புதிதாக எந்த ஊக்கத் தொகையும் கொடுக்கவில்லை. எது அவரை அப்படி இயங்க வைத்தது என்றால் அவருக்கு உள்ளே இருந்த ஒரு தணல் அவரை முன்னுக்குத் தள்ளியது. அவர் முனைப்புடன் பணி செய்ய வந்தார். அது மட்டுமல்ல, தானே முன்னுதாரணமாகச் செயல்படத் துவங்கினார்.

மாற்றத்தைக் கண்ட மற்ற ஆசிரியர்கள் மாற ஆரம்பித்தனர். பள்ளியில் நடந்த மாற்றங்களைக் கண்ட ஊர் மக்கள் சும்மா இருக்காமல் அவர்களும் மாற்றத்திற்கான பள்ளிச் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டனர். அந்தப் பள்ளியால் அந்த ஊரே மாற்றம் பெற்றது.

இந்தத் தலைமை பற்றி ஒரு நாள் செய்தித்தாளில் வந்தது. அவர் செய்தித்தாளில் பெயர் வரும் என்று அந்தப் பணிகளைச் செய்யவில்லை. தேவையான மாற்றத்தை அந்தப் பள்ளியில் நாம் கொண்டு வரவில்லை என்றால் யார் கொண்டு வருவது? இப்போது கொண்டு வரவில்லை என்றால் எப்போது? எனக் கேட்டுச் செயல்பட்டதால் வந்த விளைவு என்பது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஏனென்றால் நமது ஊடகங்கள் அவர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சுவது கிடையாது.

கிராமத்தில் படித்த இளைஞர் ஒருவர் எங்கோ மாத ஊதியத்தில் பெரும் பணியில் இருந்தார். அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வேலையை விட்டுவிட்டு வந்து பங்கெடுத்தார். அங்கு விவாதிக்கப்பட்ட பல்வேறு கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு பணிக்குத் திரும்பாமல் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று சேர்ந்தார். அங்கு ஒரு இளைஞர் குழுவை உருவாக்கினார். கிராம சபைக்கு இருக்கும் அதிகாரங்களை உள்வாங்கிக் கொண்டு பொது மக்களிடம் ஒரு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்.

நம் ஊர் நம் கையில், நம் வாழ்க்கை நம் கையில், நம் எதிர்காலம் நம் கையில் என மக்களைத் தட்டி எழுப்ப, நாம் எங்கு வீழ்ந்து கிடக்கின்றோம் என்பதை மக்களுக்குச் சுட்டிக்காட்ட ஒரு யுத்தியை கையிலெடுத்தார். அந்தக் குழுவில் படித்த இளைஞர்கள் இருந்தனர்.

கிராம வளர்ச்சிக்கென அந்த கிராமப் பஞ்சாயத்தில் செலவழிக்கப்பட்ட தொகை அவ்வளவையும் மத்திய அரசாங்கத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கிராமத்து பெண்களிமும், இளைஞர்களிடமும், ஊர் பெரியவர்களிடமும் காட்டினர்.

நம் ஊர் வளர்ச்சி என்று சொல்லி இவ்வளவு பணம் கொள்ளையடித்து விட்டார்களே, சாலை போட்டதாகச் சொல்லி இவ்வளவு பணம் எடுத்து விட்டார்களே, சாலையைக் காணோமே என அனைவரும் கதற ஆரம்பித்து, இதற்கு நாம் என்ன செய்வது என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு அந்த இளைஞர்கள் வாருங்கள் கிராம சபைக்கு கேள்வி கேட்போம் என்று மக்களைத் திரட்டி மிகப் பெரிய கிராமசபைக் கூட்டத்தில் பிரச்சனைகளை விவாதித்துத் தீர்வு கண்டனர். ஊழலுக்கு எதிரான ஓர் மனநிலையை மக்களிடம் உருவாக்கியது மட்டுமல்ல, நம் கிராம முன்னேற்றத்திற்கு எதிராக நாம் தான் உள்ளோம் என்று கூறினர்.

இவற்றை விளக்கமாக மக்களிடம் நாம் ஒரே பஞ்சாயத்தில் பகுதி வாரியாக பிரிந்துள்ளோம், சாதி ரீதியாக பிரிந்துள்ளோம், கட்சி ரீதியாக பிரிந்துள்ளோம் என்பதனை அவர்களிடம் எடுத்து வைத்து, நாம் பிரிந்து நிற்பதால் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி ஒரு சில குடும்பங்களும், அரசு அலுவலர்களும் நம் பெயரில் முன்னேற்றம் செய்வதாக கூறி எந்த ஊழலையும் செய்வார்கள்.

நம் அனைவரின் பொது எதிர்காலம் நம் ஒற்றுமையில் தான் இருக்கிறது. அப்படி நாம் ஒற்றுமையைப் பராமரித்தால் நம் பணத்தில் ஒரு ரூபாயைக் கூட எவராலும் களவாட முடியாது என கற்பித்தார்கள்.

ஒற்றுமையை உருவாக்கி கிராமத்திற்கு மாற்றம் கொண்டுவந்த அந்த இளைஞர்கள் எந்தக் கட்சியின் ஆதரவையும் பெறவில்லை. அவர்களுக்கு இப்படி ஒரு சிந்தனை எங்கேயிருந்து வந்தது? அவர்களை யாரும் தூண்டி விடவில்லை. அவர்களுக்குள் இருந்த அக்கினிக் குஞ்சு வெளிவந்தது. அவ்வளவுதான்.

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க தமிழகத்தில் அதன் தந்தையாய் பல்கலைக்கழகம் போல் செயல்பட்டு இயக்கமாக்கிய நம்மாழ்வார் இறந்த பிறகு, அவரால் தூண்டப்பட்ட எண்ணற்ற இளைஞர்கள் பயிற்சி நிலையங்களை பல இடங்களில் உருவாக்கினார்கள். பயிற்சி வகுப்புக்களை நடத்தினார்கள்.

மரபு வழி விவசாயத்திற்கும் மாசில்லா பசுமைச் சூழலுக்கும் வித்திட்டு முன்மாதிரிப் பண்ணைகளை அமைத்துச் செயல்பட்டார்கள். அந்த இளைஞர்களுக்கு எது தூண்டுகோலாக இருந்தது? உள்ளத்தில் எழுந்த குமுறலால் உலகைக் காக்கப் புறப்பட்டனர். அவர்களுக்கு ஊடக வெளிச்சம் தேவையில்லை. அவர்களுடைய உள்ளத்தில் வெளிச்சத்தை நம்மாழ்வார் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்று விட்டார்.

பொருளாதாரச் செயல்பாடுகள் குவிந்துள்ள நிலையில், அதிகாரம் எப்படிப் பரவலாகும் என்ற விவாதம் உண்மையாகி வருகின்ற சூழலில், மக்களுக்கே அதிகாரம் என்ற உள்ளாட்சி அமைப்பை வலுப்படுத்த ஒரு சிறிய அமைப்பை உருவாக்கி, தமிழக கிராமப்புறங்களில் முதலில் இளைஞர்களுக்கு பயிற்சியளித்து கிராம சபையை வலுப்படுத்த வேண்டும் என்று தங்கள் சேவையினைச் செய்து கொண்டிருக்கும் ஒரு இளைஞர் கூட்டம் எந்த அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்பார்த்து செயல்படுகிறது? யார் ஆதரவை வைத்து செயல்படுகிறது? அவர்கள் அனைவரும் அவரவர் ஆன்மாவின் குரலை ஏற்று களத்தில் நிற்கும் போராளிகள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் செயல்படுவது தான் மிகவும் சவால்கள் நிறைந்த பணி, அதைவிட மிகச் சிக்கலான பணி – கடல் ஓரங்களிலும், மலையோரக் கிராமங்களின் மேம்பாட்டுக்காக செயல்படுவது.

காட்டுப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு வித்தியாசமான கல்வியைத் தந்து அவர்களுக்கு வாழ்வளிக்க முனைந்திடும் அளவுக்குச் சாமான்ய இளைஞர்களை எது தூண்டியது? அவர்கள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அவர்கள் யாருடைய ஆதரவையும் தேடாமல் ஓசையின்றி செயல்படும் இளைஞர்கள். அவர்கள் நம் சமூகத்துக்குச் சொல்லும் செய்தி என்ன?

இப்படி தமிழகம் எங்கும் கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பசுமைச் சூழலை உருவாக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நீர் நிலைகளை தூர்வாரி பராமரிக்கவும், இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கவும், ஆதரவின்றி நடுத்தெருவில் விடப்பட்ட எண்ணற்ற மக்களை பாதுகாக்கவும், எண்ணற்ற இளைஞர்கள் செயலாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு வாக்குகள் தேவையில்லை. ஆகையால் அவர்களுடைய செயல்பாடுகளுக்கு விளம்பரம் தேவையில்லை. இவர்கள்தான் இன்று நமக்கு வேண்டிய தலைவர்கள். இவர்கள் தான் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் மாற்றுத் தலைவர்கள். இவர்கள்தான் புதிய காந்தியர்கள்.

இளைஞர்களாகிய நீங்கள் எங்கு இருக்கின்றீர்களோ அங்கு மேற்கூறிய முன்னுதாரங்களைப் பின்பற்றிக் குழு அமைத்து செயல்படுங்கள். அதுதான் இன்றைக்குத் தேவையான ஒன்று. தலைவரைத் தேடி அலையாதீர்கள். நீங்களே தலைவர் தான். என்னால் தலைவராக முடியாது என்று சொல்லி என் உயிர் எனக்கு முக்கியம் எனக் கூறி ஓட்டம் பிடிக்கும் மனிதரை விரட்டாதீர்கள்.

உங்களுக்குள் இருக்கும் தலைவரை அழையுங்கள் நீங்களே தலைவராக மாறுங்கள். சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள். தலைவர்கள் டெல்லியிலும் சென்னையிலும் மட்டுமல்ல, மக்கள் வசிக்கின்ற எல்லா இடங்களிலும் இருக்கின்றார்கள். எனவே தலைவரை வெளியில் தேடாதீர்கள், உங்களுக்குள் தேடுங்கள். இணையுங்கள், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். செயல்படுங்கள்.

உங்களைத்தான் தேடினார்கள் விவேகானந்தரும் மகாத்மா காந்தியும். வாருங்கள் வடம் பிடிப்போம்!

கட்டுரை ஆசிரியர் டாக்டர் க.பழனித்துரை

(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.

சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.

126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.

க.பழனித்துரை

ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.

பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

20.01.2021   12 : 30 P.M

Comments (0)
Add Comment