ஓவியர் ஆதிமூலம் அற்புதமான மனிதர்!

எதிர்காலத்தில் இப்படி எல்லாம் வருவோம் என்றெல்லாம் எதிர்பார்த்த காலகட்டம் அல்ல அது.

பதினாறு, பதினேழு வயதில் ஓவியனாக வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் நிறைந்திருந்த அற்புதமான காலகட்டம்.

தாகூரின் சாந்தி நிகேதனுக்கு நான் சென்றதில்லை. அதைப்பற்றி என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ அதைவிட மேலான உணர்வைப் படித்த மாணவர்களிடம் ஏற்படுத்திய இடம் சென்னை ஓவியக் கல்லூரி.

1952-ல் ஆண்களும் பெண்களும் இணைந்து படித்த பள்ளிக்கூட காலத்தில் 1957-ல் படிப்பு முடிகிறவரை கூடப்படித்த 8 மாணவிகளுடன் நாங்கள் பேசிக் கொண்டதில்லை. அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்குப் பின் சென்னைக்கு வந்தபோது, ஓவியக் கல்லூரியில் எங்களுக்குக் கிடைத்த சுதந்திரம் அவ்வளவு அருமையானது.

எங்களுடைய ஆசிரியரான அந்தோணி தாஸ், ஜூலியட் என்கிற மாணவியைத் திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு ஆசிரியராக இருந்த சந்தானராஜ் – சீனியர் மாணவியான மீரா லட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவின் தலைச்சிறந்த ஓவியர்களில் ஒருவரான அவர்தான் என்னை நடிப்புத் துறைக்கு திசைமாற்றி அனுப்பியவர். அப்படி ஒரு சூழல் அப்போதிருந்தது.

தனியார் தொலை நிகழ்ச்சிக்காக சமீபத்தில் அதே கல்லூரிக்குப் போயிருந்தேன். பழுதடைந்திருந்தாலும் அதன் மெருகு குலையவில்லை. கோயம்புத்தூரிலிருந்து ஓவியக் கலையை நம்பி வந்து சற்றேறக்குறைய 50 ஆண்டுகள் ஆகின்றன.

இந்தக் காலகட்டத்திற்குள் கோவை, சேலம், திருச்சி என்று அந்தப் பகுதியிலிருந்து எத்தனை ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ், மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள்? ஆனால் என் அளவுக்குக் கூட ஓவியத் துறைக்கு எவனாவது வந்திருக்கிறானா என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் வரவில்லை.

அப்போது கிராமத்திலிருந்து வந்து ஓவியக் கல்லூரியில் வடிகட்டி எடுக்கப்பட்டவர்கள் தான் நான், ஆதிமூலம், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களெல்லாம் வறுமையாக இருப்பதில் எங்களுக்குள் போட்டி இருந்த மாதிரியான காலம் அது. ஆதிமூலத்திற்கு பி.எஸ்.செட்டியார் உதவி பண்ணிக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுவிட்ட தாய்மாமன் உதவி பண்ணினார். அந்த மாதிரி ஆட்கள் அப்போது இருந்திராவிட்டால், நாங்கள் எங்கோ காணாமல் போயிருப்போம்.

ஆதிமூலம் அப்போது உடைகளைத் தளர்வாக இல்லாமல் இருக்கமாகப் போட்டிருப்பார். சட்டையின் கைப்பகுதியை இரண்டரை இன்ச் அகலத்தில் மடித்து விட்டிருப்பார். வேஷ்டிதான் அணிந்திருப்பார். கணீர் என்று குரல் இருந்தாலும் மிகவும் அளந்துதான் பேசுவார். அவர் சத்தம் போட்டு விட்டேத்தியாகச் சிரத்து நான் பார்த்ததில்லை. ரொம்பவும் நிதானமானவர். சந்தோஷம் துக்கம் எதையும் மிகையாக காட்டிக் கொள்ளாத ஸ்படிகம் என முகம் அவருக்கு.

ஓவியனாக பார்த்தால் – மிக அழகான முகம், மூக்கு சற்று நீண்டு மாதிரி இருக்கும். அழகான புருவம், நெற்றியும், உதடுகளுமாக என்னை விட உயரமாக இருப்பார். அப்போதே வழக்கமாக வரையும் கோடுகளை மாற்றிப் போட ஆரம்பித்திருந்தார். என்னுடைய நோக்கிலேயே அவர் என்னை வரைந்த ஓவியங்களும், நான் அவரை வரைந்த ஓவியங்களும் இன்னும் இருக்கின்றன.

ஒவியக் கலையைப் பற்றியே இன்னும் மக்களிடம் முழுமையாக போய்ச் சேராதபோது ஓவியர்களை நவீன ஓவியர்கள், பழமையான ஓவியர்கள் என்று அறிய இதாவிடப் பிரிவினை மாதிரியான பிரிவினைகள் எல்லாம் எங்களுக்குள் இருந்ததில்லை. அவரவருக்கு தனித்தனி பாணி. அவருடைய பாணியை நான் ரசிப்பேன் என்னுடைய பாணியை அவர் ரசிப்பார்.

எங்களுக்கு ஓவிய கல்லூரியில் இருந்த ஆசிரியர்கள் எங்களுக்கு அண்ணன்களைப் போல இருந்தார்கள். எங்களுடைய ஓவியங்களைச் சரியாக திருத்துவார். வயதில் ஆதிமூலம் என்னைவிட மூன்று வயதுக்குமேல் மூத்தவர் என்றாலும், படிக்கும்போது ஒரு வருடம் ஜூனியர்.

நவீன ஓவியம் தான் தன்னுடைய வழி என்று தீர்மானித்துக் கொண்டு அந்த வழியில் போனவர் ஆதிமூலம். காந்தியை நிறைய ஓவியங்கள் வரைந்து இருந்தாலும், அவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியின் அடிப்படையான உருவம் சிதையாமல் ஒரு ஓவியம் வரைந்திருப்பார்.

காந்திய அடையாளம் முக்கியம். காந்தி உருவத்தைச் சற்றுச் சிதைத்தால் ராஜாஜி ஆகிவிடும். காந்தியின் அடையாளத்தை இழக்காமல் தன்னுடைய பாணியில் பண்ணியிருந்தார் ஆதிமூலம். நான் அதே காந்தியை அகாடமிக்கலாக பண்ணினேன்.

வரையும் காலத்திலேயே நல்ல திறமையான மனிதர் அவர். என்னுடைய முகத்தை அவருடைய பாணியில் வரைவார். அதிலிருப்பது நான் தான். ஆனால் புகைப்படங்களில் வெளிப்படும் முகத்தைப்போன்று அந்த உருவம் இருக்காது. என்னுடைய அடையாளங்கள் அதில் தெரியும்.

நவீன ஓவியத்திற்குப் போனால் மக்களிடம் போய்ச் சேராது என்கிற எண்ணம் அப்போது எனக்கு இருந்தது. நவீன ஓவியத்தில் நுட்பங்கள் இருக்கலாம். நிறைய அர்த்தங்கள் இருக்கலாம். அதேசமயம் மக்களிடம் போய் சேராவிட்டால் என்ன பயன்? ஆதிமூலம் அதிகமாக மக்களிடம் போய்ச் சேர்ந்தது பத்திரிகைகளின் மூலம்தான்.

தமிழ்நாட்டு கிராமப்புறத்தில் நாம் பார்த்த அதே சுடுமண் சிற்பங்களையும், அய்யனார் சிலைகளையும் கோடுகளுக்குள் கொண்டு வந்த ஆதிமூலம், அதை ஒரு கட்டத்தில் விட்டுவிட்டு உருவங்களற்ற வர்ணச் சேர்க்கையிலான அரூப ஓவிய வெளிக்குள் அவர் சென்று அடைந்திருப்பது அவருடைய வளர்ச்சியைப் பொறுத்தவரை சரியாக இருக்கலாம்.

அதன் மூலம் சர்வதேச அளவிற்கு அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறார். ஆனால் அந்த நவீன அரூப ஓவியங்கள் அவருடைய பேரக்குழந்தைகளுக்கே புரியுமா?

நம் நாட்டில் ஓவியக் கலையும், ரசனையும் அப்படிதான் இருக்கிறது. ராஜா ரவிவர்மா ஐரோப்பிய பாணி ஓவியத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர். ராமாயண, மகாபாரதப் பாத்திரங்களை எல்லாம் அவர் வரைந்தார். அஜந்தா, எல்லோரா காலத்திலிருந்து நமக்கு நீண்ட ஓவிய மரபு இருந்தாலும், அற்புதமான சிற்ப கலை இருந்தாலும், ஓவியத் துறையில் நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது.

அறுபதுகளில் நான் படிக்கும்போது – நவீன ஓவிய பாணி இங்கு அறிமுகமாகி விட்டாலும், ஆதிமூலம் இங்கு அடையாளம் காணப்பட்டதே அவருடைய வித்தியாசமான காந்தி, பாரதி இன்னும் முகமற்ற மன்னர் ஓவியங்களை வைத்துதான். அவர் சமீபகாலமாக வரைந்த அரூப ஓவியங்கள் இங்கு சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை.

ஓவியக் கல்லூரி ஆசிரியராக இருந்த பணிக்கர் அரூப ஓவியங்களை அப்போதே வரைந்து கொண்டிருந்தார். மிகுந்த ஈடுபாட்டுடன் பலர் வரைந்தாலும் – நவீனம் என்கிற பெயரில் நடந்த சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜீப் டயர்கள் நான்கிலும் வர்ணங்களை அடித்து, கீழே கிடந்த கேன்வாஸ் மீது குறுக்கும் நெடுக்குமாக நகர்த்தி அதில் பதிவானதைப் பிரேம் செய்து பெயிண்டிங்காக காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஒரு குரங்கிடம் பெயிண்டும், பிரஷும் கொடுத்து கத்திக்கொண்டே அது வரைந்ததைப் பெயிண்டிங்காக வைத்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான ஓவியங்களில் எதை அடிப்படையாக வைத்துத் தரத்தை நிர்ணயிக்கிறார்கள்? நான் யாரையும் புண்படுத்தவோ, கேலி பண்ணவோ விரும்பவில்லை. எங்கள் ஆசிரியர் ஒருவர் – வடை சட்டியின் அடிப்பகுதியை வெட்டிவிட்டு, கைப்பிடிக் கம்பியுடன் சேர்த்து சுத்தியலால் அடித்து ஒருவழி பண்ணி – கருப்பு சிவப்புப் பெயிண்ட் அடித்து – நவீன பெயிண்டிங் என்று மாட்டினார். எவ்வளவு பேதைமை இது?

கலைஞனின் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு இதை எப்படி ஓவியம் என்று கட்டாயப்படுத்த முடியும். நான் அகாடமிக் பெயிண்டராக இருந்தபோது – ஆதிமூலம் நான் இருந்த அதே பாணியில்தான் இருந்தார். காந்தியை உருவத்துடன் வரைந்தாரே ஒழிய அவரை அரூபமாக்கிவிடவில்லை. நவீனமாக வரைந்தாலும் அவர் வரைந்திருந்த காந்தி உள்படம் பல ஓவியங்களைப் புரிந்து ரசிக்க முடிந்தது.

பாரதியையும், ஜெயகாந்தனையும் மாறுதலான கோடுகளின் மூலம் ரசிக்க வைத்தார். பிறகு தன்னுடைய ஓவியத்தை மாற்றிக் கொண்டாலும் அவர் மிகச்சிறந்த ஓவியர்.

பழகுகிற விதத்தில் மிகவும் அற்புதமான மனிதர் ஆதிமூலம். நியாயமான விஷயங்களுக்காக நான் இயல்பாகக் கோபப்படுவேன். ஆனால் அவர் அடிப்படையிலேயே சாந்தமானவர். இரைந்து பேசாதவர். கிட்டத்தட்ட துறவி கூறிய மனநிலை வாய்க்கப் பெற்றவர்.

வெளிப்படையாக யாரையும் விமர்சிக்க மாட்டார். இவரும் பி.கிருஷ்ணமூர்த்தியும் ஒரே மாதிரியான இயல்புடன் இருப்பார்கள்.

ஓவியத் துறையில் இருந்து நடிக்க நான் வந்தபோது, எனக்குள் ஏதோ ஒரு உணர்வு உண்டாகி – என்னுடைய ஓவியக் கல்லூரியில் படித்த சக நண்பர்களை – வரைந்துக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கையெழுத்து அமைகிறமாதிரி அவரவர்க்கென்று ஒரு விதமான ஓவிய பாணி இருந்தது. எங்களுக்குள் எந்த பேதமும் இல்லாமல் அவ்வளவு நெருங்கிப் பழகிய வாழ்க்கையை மறக்க முடியாது.

என்னுடைய மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்கப் போயிருந்தபோது கடைசியாக ஆதிமூலத்தைப் பார்த்தேன். அதற்கு முன்பு குமுதம் இதழை வாராவாரம் ஒருவர் சிறப்பாசிரியராக இருந்து தயாரித்துக் கொண்டிருந்தபோது – நானும் தயாரித்த நேரத்தில் – ஆதிமூலத்தைச் சந்தித்தபோது – என்னை வரைந்து கொடுத்தார்.

நாங்கள் சேர்ந்து படித்தபோது அவரிடமிருந்த இயல்பான குணம் – அவருடைய ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றபோதும் மாறவில்லை. அந்தக் காலகட்ட நட்பு கடைசி வரையிலும் நீடித்தது.

என்னதான் வாழ்க்கையின் இன்னொரு கட்டத்திற்கு வந்து பணமும், வசதியும் கூடி இருந்தாலும் 85 ரூபாய் கட்டி ஓவியக் கல்லூரியில் படித்த அந்தக் காலகட்டத்தில் உறவான நட்பும், அந்த மனசும் மகத்தானது.

“வாடா.. போடா…” என்று ஆதிமூலம், நான், கிருஷ்ணமூர்த்தி எல்லாம் நெருக்கத்துடன் அழைத்தபடி திரிந்த அந்த நாட்கள் இன்றும் மனதில் இருக்கின்றன.

மறுபிறவி என்று ஒன்று இருந்தால் – மறுபடியும் பழமை வாய்ந்த ஓவியக் கல்லூரி மாணவனாக மாற வேண்டும் போலிருக்கிறது.

22.01.2021    12 : 49 P.M

Comments (0)
Add Comment