வாசிப்பின் ருசி:
“வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென்று விரைந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க் குவித்திருந்தது.
அப்போது யாரோ பாடும் குரல் கேட்கிறது.
ஆண் குரல். ஹிந்துஸ்தான் சங்கீதம். ‘கஜல்’ இடையிடையே நீண்ட தொகையறாக்கள். குரலோடு இழைந்து பத்து சாரங்கிகள் அழுகின்றன.
திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன், ஆரம்ப அடியில் பாட்டு முடியும் போதெல்லாம், இன்பம் அடிவயிற்றைச் சுருட்டிக் கொண்டு, பகீர் பகீர் என்று எழும்புகிறது.
அந்த மாதிரிக் குரலை நான் கேட்டதே இல்லை. என் எலும்பெல்லாம் உருவி விடும் போலிருக்கிறது.
நான் அதைத் தேடிக் கொண்டே போகிறேன்.
நான் போகிற வழியெல்லாம், யார் யாரோ மேடுகளிலும், பள்ளங்களிலும், மரத்தடிகளிலும், பரந்த வெளிகளிலும் கூட்டம் கூட்டமாகவும், கொத்துக் கொத்தாகவும், தனித்தனியாக, அசைவற்று உட்கார்ந்திருக்கிறார்கள்.
நான் போகப் போக பாட்டிடன் நெருக்கமும், இனிமையும் இந்த உடலர் தாங்கக் கூடியதாக இல்லை.
பாடும் ஆளும் தென்படுவதாக இல்லை.
என் எதிரே கட்டிடமுமில்லை.
ஒரே பரந்த வெளி தான்.
ஆனால் குரலின் கணகணப்பும், நெருக்கமும், இனிமையும் ஒரே இரைச்சலாய் வீங்கி என் மேல் மோதுகையில், எனக்கு ஏற்பட்ட திகைப்பு தாங்க முடியவில்லை.
திகைப்பூண்டு மிதித்த மாதிரி கடைசியில் என்னையே நான் சுற்றிச் சுற்றி வருகிறேன்.
அப்போது என்னிலிருந்தே அக்கீதம் வெளிப்பட்டதாய் உணர்கிறேன்”
- ‘நான்’ என்ற தலைப்பில் படைப்பாளியான லா.ச.ராமாமிர்தம் 1959, ஏப்ரல் மாதம் வெளிவந்த ‘எழுத்து’ இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
19.01.2021 4 : 10 P.M