முதியவர்களுக்குக் கொஞ்சம் நேரத்தைக் கொடுங்கள்!

அக்டோபர் – 1 சர்வதேச முதியோர் தினம்.

முதியோர் தினத்தை சில ஊடகங்கள் நினைவு படுத்தினாலும் நிஜ வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருக்கிற முதியவர்களை நாம் எப்படி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இன்றைக்குக் கேட்க வேண்டியிருக்கிறது.

நமது வீட்டில் நம்முடன் நமது வாழ்வுக்கு ஆதாரமான முதியவர்கள் கூடவே வசித்தாலும் தினமும் அவர்களுடன் சிறிது நேரத்தையாவது நாம் செலவளித்திருக்கிறோமா.

பழைய ஞாபங்களுடன் இருந்தபடி பேரக் குழந்தைகளை கொஞ்சுவதற்கு கை நீட்டும் அளவிலும் ஆவலுடன் செல்ல நாம் நம் குழந்தைகளைப் பழக்கி இருக்கிறோமா?

நம்மை பால்யத்தில் வளர்த்தவர்களுக்குப் பெரும்பாலும் கனத்த மவுனத்தையோ, பாராமுகத்தையோ தான் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

இந்தச் சமயத்தில் பிரபல வார இதழில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.

மிகவும் வசதியான அந்த வளாகத்தில் நல்ல காற்றோட்டமான அறைகள் பளிச்சென்று நிறைந்திருக்கும் சுத்தம்.

மெலிதான ஊதுபத்தியின் நறுமணம், தூரத்தில் கடல் அலைகளின் சத்தமென்று வித்தியாசமாக இருந்தது அந்த இல்லம்.

அதில் வசித்துவந்த சில வயதான பெண்மணிகளை பார்த்தமாதிரி அங்கு தனித்துவமாக தெரிந்த காந்திமதியின் அம்மாவைப் பார்த்தேன்.

75-ஐ தொடும்வயது. பேச்சில் இடையிடையே சரளமாக புழங்கிய ஆங்கிலம். சற்றே தளர்ந்த உடை. இவற்றுடன் பேசிக் கொண்டிருந்த காந்திமதியின் அம்மாவுடன் பேசும்போது தான் பேசுவதிலும் கேட்பதிலும் அவர்களுக்கு இருந்த ஒருவிதமான தவிப்புப் புலப்பட்டது.

சட்டென்று ஒட்டிக்கொள்கிறமாதிரி மனசு அவருக்கு.

தென்தமிழகத்தில் வணிகத்திற்கு பெயர்போன சிறு நகரத்தில் பெரும் வசதிபடைத்த குடும்பம். அவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகியிருந்தார்.

பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகள் உயர் வசதியிலும் உயர்ந்த நிலையிலும் இருந்தார்கள். பெரிய பங்களா மாதிரியான வீட்டில், காந்திமதி வசித்தாலும் அவ்வளவு பெரிய வீட்டில் அவருக்கு உரிய முறையில் பேச்சுத்துணை கூட இல்லை.

வசதிகள் இருந்தன. எதையும் கேட்காமலேயே வாங்கித்தரும் உறவுகள் இருந்தன.

ஆனால், காந்திமதி அம்மாவுடன் ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கான நேரம் மட்டும் அவரைச் சுற்றியிருந்த உறவுகளுக்கு இல்லை. எதை நோக்கியோ அவர்கள் ஓடிக் கொண்டே இருந்தார்கள்.

தனிமையில் அமர்ந்து தன்னைச்சுற்றி மிகவும் விலகியிருந்த உறவுகளைப் பார்க்க முடியாத நிலையில், அவருக்கு தான் ஒரு வசதியான சிறையில் வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

பெரும் மனக்கொந்தளிப்பும் கணவர் மறைந்தபிறகு உருவான மவுனமான இடைவெளியையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

மிகவும் கனத்த மனதுடன் அந்த நகரத்தில் உள்ள சைக்கார்டிஸ்டை சென்று பார்த்தபோது, தனது தவிப்பை இங்கிதமாகச் சொல்லியிருக்கிறார் காந்திமதி அம்மாள். 

அந்த சைக்கார்டிஸ்டின் ஆலோசனைப்படிதான் சென்னையிலுள்ள அந்த முதியோர் இல்லத்திற்கு இடம்பெயர்ந்திருக்கிறார் காந்திமதி.

“இங்கே நான் வந்தபிறகு எனக்கு பல பேர் பிரண்ட்ஸ் ஆகியிருக்காங்க. அவர்களுடன் நானும் பேசமுடிகிறது. அவர்கள் பேசுவதையும் கேட்க முடிகிறது.

இங்கு வந்த ஓரிரு மாதங்களுக்குள் இந்த இல்லமும் இதிலுள்ள மனிதர்களும் எனக்கு பிடித்துப்போனது” என்று பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு ஊழியர் வந்து, “அம்மா.. நீங்க சொன்ன வேன் வந்திருச்சுமா” என்று சொன்னதும் காந்திமதி அம்மாள் என்னிடம் சொன்னார்,

“என்னோட பேத்திக்கு ஊர்ல நாளைக்கழிச்சு கல்யாணம் அதுக்காக இங்கவுள்ள பிரண்ட்ஸ் பத்துபேரை அழைச்சிட்டு நான் ஊருக்குப் போகப்போறேன்.

எல்லாரும் கிளம்பிக்கிட்டு இருப்பாங்க. இங்கேயே இருப்பா நா கிளம்பிட்டு வந்துடுறேன்“ என்று சொல்லிவிட்டுப் போனவர், 10 நிமிடங்களுக்குள் மிகவும் வித்தியாசமான கைத்தறி புடவையுடனும் மென்மையான மேக்கப்புடனும் முகம் பூரிக்க திரும்பி வந்து முன்னால் உட்கார்ந்தார்.

“என்ன தோன்றியதோ தெரியவில்லை. எனது கைகளைப் பற்றிக் கொண்டவர், “ஏம்ப்பா, நான் சொல்றேனு தப்பா நினைக்காத நீயும் எங்க கூட என் பேத்தியோட கல்யாணத்துக்கு வர்றீயாப்பா? இப்ப சொல்றேனு நினைக்காத” என்றவரிடம்,

“ஏம்மா, நா இப்பதான் உங்களைப் பார்த்திருக்கேன். அதுக்குள்ள உங்க பேத்தியோட கல்யாணத்துக்கு என்னை கூப்பிடுறீங்களே” என்று கேட்டபோது, என்னைப் பற்றிக்கொண்டிருந்த அவரது கைகள் மேலும் இறுகின.

“நீ அவ்வளவு ப்ரியமா பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா. அதனாலதான் உன்னை ஒரு சொந்தக்காரனமாதிரி நினைச்சுக் கூப்பிடுறேன்” என்று சொன்னவரின் அன்பை வலிமையாக உணர்ந்தாலும், மிக மென்மையாக என்னுடைய மறுப்பை இங்கிதமாகச் சொன்னேன்.

அதற்குள் வெளியே நின்றிருந்த ஏசி வேனில் சிரமப்பட்டு ஏறிக் கொண்டிருந்தார்கள் காந்திமதி அம்மாவின் தோழிகள். நிறைவாக காந்திமதி அம்மாவும் ஏறியபடி கையசைத்தார்.

நாங்க போயிட்டுவந்ததும் மறுபடியும் இங்கே எங்களுக்காக வர்றியாப்பா? வரவேல்ல..” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னபோது, தலையசைக்க வேண்டியிருந்தது.

எவ்வளவு வசதிகள் இருந்தாலும், பிரம்மாண்டமான பங்களா, கார்கள் அனைத்தும் இருந்தாலும் தன்னிடம் நெருங்கி தன்னை உணர்ந்து பேசுவதற்கு ஆளில்லை என்கின்ற ஏக்கம் எப்படியெல்லாம் துளிர்விடுகிறது பாருங்கள்.

– மணா

Comments (0)
Add Comment