தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அடுத்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரதானக் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வீயூகங்களைத் தொடங்கிவிட்டன.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களம் காண்கிறார்.
விஜய் தலைமையிலான தவெக, கூட்டணியை இன்னும் உறுதி செய்யவில்லை. ராமதாசின் பாமக, புதிய தமிழகம், ஓபிஎஸ், புதியக் கட்சி தொடங்கியுள்ள சசிகலா ஆகியோர் தங்கள் நிலையை அறிவிக்கவில்லை.
‘நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப் போகிறோம்..’ என ராமதாஸ், கூட்டணி குறித்து பூடகமாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர், கூட்டணியை இறுதி செய்து விட்டதாகவே தெரிகிறது. எந்தக் கட்சி என்பது அவருக்கே வெளிச்சம்.
திமுகவில் தொகுதிப் பங்கீடு
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது. இதுவரை 3 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு பேச்சு நடத்தியுள்ளது. முதல் நாளில் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்தக் கட்சி கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றிலும் தோல்வி அடைந்தது. இந்த முறை 5 இடங்களை அந்தக் கட்சி கேட்டது. 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கண்டிப்பாக தெரிவித்துவிட்டது.
மதிமுக கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் வென்றது. அந்த நான்கு தொகுதிகளைக் கொடுக்கவே திமுக விரும்புகிறது. மதிமுக ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் விரும்பியது. அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. பிற கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் அளிக்கப்பட்டது. 18 இடங்களில் அந்தக் கட்சி ஜெயித்தது. இந்த முறை காங்கிரஸ் 41 தொகுதிகள் கேட்கிறது. 27 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்குவதாக திமுக கூறிவிட்டது.
விசிக மற்றும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட தொகுதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்தக் கூட்டணியில் புதிதாக சேர்ந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி உறுதி. 7 அல்லது 8 எம்.எல்.ஏ. தொகுதிகளை திமுக அளிக்கும் என தெரிகிறது. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 5 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதிமுக கூட்டணி நிலவரம்:
அதிமுக கூட்டணியில் பாஜக, டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணியின் பாமக, ஜிகே வாசனின் தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டணியில் இதுவரை அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
பாஜகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்த பின்னரே, பிற கட்சிகளுடன் பேச்சு நடத்தும் என தெரிகிறது.
தங்களுக்கு 35 தொகுதிகள் தேவை என வலியுறுத்தும் பாஜக, தொகுதிகள் பட்டியலையும் அளித்துள்ளது.
ஆனால், 25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதனால், தொகுதிப் பங்கீட்டில் இழிபறி நிலை நீடிக்கிறது. இந்தச் சூழலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று சென்னை வருகிறார்.
அவர் இபிஎஸ் உடன் பேச்சு நடத்தி தொகுதிகள் எண்ணிக்கையை இறுதி செய்வார் என தெரிகிறது.
– பாப்பாங்குளம் பாரதி