‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கத்தை மறந்த விஜய்!

தவெக தேர்தல் அறிக்கையில் ‘இலவசங்கள்’ இருக்காது!

பெரும்பாலான அரசியல் கட்சிகள் மதுரையில்தான் பிரசவித்துள்ளன. கட்சியின் முதன் மாநாட்டையும் மதுரை மாநகரிலேயே பல கட்சிகள் அரங்கேற்றி உள்ளன.

ஆனால், தவெக என கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், வட மண்டலமான விக்கிரவாண்டியில், தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி, லட்சக்கணக்கானோரைத் திரட்டி, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

மாநாட்டில் விஜய் பேசியதன் சுருக்கம்:

“அரசியல் ஒரு பாம்பு – அதை பயமறியா ஒரு குழந்தையைப் போலக் கையில் பிடித்து விளையாடுகிறேன்.

அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், பாம்பைக் கண்டு எனக்கு பயமில்லை. அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, போர்க்களம். சீரியஸாக சிரிப்போடு எண்ணங்களைச் செயல்படுத்துவதுதான் என் வழி.

கவனமாகக் களமாட வேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை” என்று சொன்ன விஜய், இந்த மாநாட்டில்தான் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற திரியைக் கொளுத்திப் போட்டார்.

அவர் பற்ற வைத்த நெருப்பு, திமுக கூட்டணியில் பகிரங்கமாகவும், அதிமுக கூட்டணியில் மறைமுகமாகவும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை விஜய் மேற்கொண்டுள்ளார்.

இப்போதும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார்.

’இந்த சந்திப்பு நிகழ்வில் இத்தனை பேர்தான் கலந்து கொள்ள வேண்டும்‘ என்பது தொடங்கி ஏராளமான நிபந்தனைகளை விதிக்கிறது, காவல்துறை.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து திங்கள் கிழமை வேலூர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது, போலீஸ்.

‘இந்தக் கூட்டத்தில் 4,900 பேர் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் தடுப்புகளை உடைத்துவிட்டு கூட்ட அரங்கில் நிறைய பேர் நுழைந்துவிட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீசாரால் இயலவில்லை.

வழக்கம் போல் வேலூர் கூட்டத்திலும் முதலமைச்சர் ஸ்டாலினை ஒரு பிடிபிடித்தார் விஜய்.

‘’கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஸ்டாலின் சார் ஒரு உருட்டு உருட்டினார். வரப்போகிற தேர்தல் தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல். இதை தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறார்.

இன்னும் கொஞ்சம் மேலே போய் தமிழ்நாட்டுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குமான தேர்தல் என்று சொல்கிறார்.

ஏன் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறீர்கள்?

எந்தத் தேர்தலை எப்படிக் கையாள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

போருக்குப் போகும் போதுதான் படை பரிவாரங்களுடன் போவார்கள். ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் உதவாத பால் டப்பாவை உருட்டிக் கொண்டிருக்கிறீர்களே.

உண்மையிலேயே இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுகவுக்குமான போர். தமிழ்நாடு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர்.

இன்னும் சுருக்கமாகச் சொன்னால் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர்” என கர்ஜித்த விஜய், சில தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளி வீசினார்.

“தவெக ஆட்சிக்கு வந்தால், பெண்கள், பெண் குழுந்தைகளுக்குப் பாதுகாப்பு இருக்கும். சட்டம் – ஒழுங்கு கடுமையாக இருக்கும். அரசுப் பள்ளி, கல்லூரிகள் முதல் தரமாக இருக்கும்.

போட்டித் தேர்வுகளுக்கு என்று லட்சங்களைக் கொட்டி, தனி கோச்சிங் சென்டர் சென்று படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பெண் குழந்தைகளுக்குச் சுத்தமான சுகாதாரமான மற்றும் தரமான கதவுகள் பொருத்தப்பட்ட ரெஸ்ட் ரூம்கள் அமைக்கப்படும்” என்பன விஜய் அளித்த வாக்குறுதிகள்.

கருணைத் தொகை, உரிமைத் தொகை, உதவித் தொகை போன்ற கவர்ச்சி அறிவிப்புகளை அவர் வெளியிடவில்லை.

எனவே தவெக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் இருக்கப்போவதில்லை.

திமுக தவிர களத்தில் உள்ள தனது எதிரிகளான பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் குறித்து விஜய் மூச்சு விடவில்லை.

இரு மருத்துவர்கள் (ராமதாஸ், கிருஷ்ணசாமி) தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணியை முடிவு செய்து விட்டதால், ‘ஆட்சியில் பங்கு’ என்ற அஸ்திரத்தை அவர் மறந்துவிட்டார்.

இந்தக் கூட்டத்திலும் அது குறித்து அவர் வாய் திறக்கவில்லை.

சீமான் வேட்பாளர்களையே அறிவித்து விட்டார். திமுக -அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடியும் தறுவாயில் உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், விஜய் ஊர் ஊராகச் சுற்றி வருகிறாரே தவிர, தேர்தல் ஆயத்தங்களை ஆரம்பித்த மாதிரி தெரியவில்லை.

விஜய் சார்! எப்போ விசில் ஊதப்போறீங்க? ரயில் எப்போ புறப்படும்?

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment