தமிழர்களின் தற்காப்புக் கலைகளுக்கு உயிரூட்டிய எம்ஜிஆர்!

தமிழர்களின் தலைசிறந்த தற்காப்புக் கலைகளில் ஒன்று சிலம்பம். சிலிர்த்தெழ வைக்கும் இந்த சிலம்பக் கலையை தமிழ்த் திரைப்படங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளவுக்கு இடம் பெறச் செய்தவர்கள் வேறு யாரும் இல்லை.

சிலம்பத்தில் கிடாமுத்து, படைவீச்சு, துலுக்காணம், பனையேறி மல்லன், குறவஞ்சி போன்ற பல்வேறு விதமான முறைகள் உள்ளன.

இதில் ‘தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தில் வரும் சிலம்ப சண்டைக் காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஐயங்கால் வரிசை என்ற முறையில் சிலம்ப சண்டை செய்வார்.

அவரை எதிர்த்துச் சண்டையிடும் சாண்டோ சின்னப்ப தேவர், கூடல் ஒளிவு என்ற சிலம்ப வரிசை முறையைக் கையாளுவார்.

அதேப்போல, ‘குலேபகாவலி’ திரைப்படத்திலும், சிலம்ப சண்டை உண்டு. அதிலும் மக்கள் திலகம், சாண்டோ சின்னப்ப தேவர் இடையில்தான் சண்டை நடைபெறும்.

அதில், மக்கள் திலகம் கையாளும் சிலம்ப வரிசையின் பெயர் கருட வரிசை. சாண்டோ சின்னப்ப தேவர் நாகப் பதினாறு என்ற வரிசையைக் கையாளுவார்.

இப்படி மிக நுணுக்கமாக சிலம்ப வரிசைகள், அடிமுறைகளை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி, சிலம்பக் கலையை இன்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் அழியாமல் இருக்கச் செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்.

‘முகராசி’ திரைப்படத்தில் கதாநாயகி ஜெயலலிதா அவர்களுக்கு மக்கள் திலகம் சிலம்பம் சொல்லித்தரும் காட்சி இன்றும் நம்மை பிரமிக்க வைக்கும்.

சிலம்பம் மட்டுமல்ல. ‘சக்கரவர்த்தித் திருமகன்’ படத்தில் மற்போர், ‘காவல்காரன்’ படத்தில் பாக்சிங் என்கிற குத்துச்சண்டை, ‘ரிக்சாக்காரன்’ படத்தில் சுருள்வாள்,

‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் மடுவு என்னும் மான்கொம்பு சண்டை என்று போர்க் கலைகளுக்குத் திரைப்படங்களில் புதிய உத்வேகம் அளித்தவர் மக்கள் திலகம்.

– பத்திரிகையாளர் மோகன ரூபன் எழுதிய ‘நெஞ்சில் நிறைந்த எம்.ஜி.ஆர்.’ (மெய்நிகர் பதிப்பகம்) நூலிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment