சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி முதல்முறையாக ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா தொடங்கிப் பலரும் அந்தக் கிரிக்கெட் அணியைப் பாராட்டி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, உலகளவில் கிரிக்கெட் பேட் உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஜம்மு – காஷ்மீரில், பேட் உற்பத்தித் தொழில் அழிவின் பாதையில் இருப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன.
கிரிக்கெட் பேட்களைத் தயாரிக்க ஏற்ற வில்லோ மரங்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் ஒரே பகுதி காஷ்மீர்தான்.
பிரிட்டனுக்கு அடுத்தபடியாக பேட் உற்பத்தியில் இந்தியாவின் காஷ்மீர் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ‘காஷ்மீர் வில்லோ பேட்கள்’ உலகளவில் பிரசித்தி பெற்றவை.
குறிப்பாக தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சுமார் 400 பேட் உற்பத்தி யூனிட்கள் உள்ளன.
பொதுவாக, சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்கள் அதிகம் பயன்படுத்துவது இங்கிலீஷ் வில்லோ பேட்களைத்தான். இதனை பிரிட்டன் அதிகளவில் உற்பத்தி செய்கிறது.
இதற்கு அடுத்தபடியாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பேட்கள் என்றால் அது காஷ்மீர் வில்லோவே! இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் ஆரம்ப கட்ட வீரர்களிலிருந்து முதல்தர கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் பேட் காஷ்மீர் வில்லோ.
• அதென்ன வில்லோ…
வில்லோ என்பது ஒரு வகை மரம். இதில் வொயிட் வில்லோ மரங்கள் இங்கிலாந்தின் எக்சக்ஸ் பகுதிகளில் அதிகம் விளைகின்றன. இதன் அறிவியல் பெயர் Salix alba என்பதாகும்.
இதனை பிரிட்டனில் டிம்பர், பிளைவுட் போன்றவற்றிற்கும் கிரிக்கெட் பேட் உற்பத்திக்கும் பயன்படுத்துகின்றனர்.
இதேபோல காஷ்மீரிலும் இந்த மரங்கள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. இருந்தும் இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. அதாவது இங்கிலீஷ் வில்லோ பேட்கள் வெள்ளை நிறம் கொண்டவை. அதனாலேயே அதனை வொயிட் வில்லோ எனக் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், காஷ்மீர் வில்லோகளோ பிரவுனீஷ் வண்ணம் கொண்டது. இதுதவிர, இங்கிலீஷ் வில்லோவைவிட காஷ்மீர் வில்லோ பேட்கள் கொஞ்சம் எடை கொண்டவை.
• எப்படி ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் பேட் உற்பத்தி இடமானது?
பல நூற்றாண்டுகளாக காஷ்மீரில் இந்த வில்லோ மரங்கள் வளர்கின்றன. அவற்றை காஷ்மீரிகள் வளர்ப்பு விலங்குகளின் தீவனத்திற்கும் சில தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர்.
ஏனெனில், 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கிரிக்கெட் விளையாட்டு அவ்வளவாக பிரபலமாகவில்லை. அதனால், வில்லோ மரங்கள் கிரிக்கெட் பேட் செய்வதற்கு உகந்தவை என யாரும் நினைக்க இல்லை.
1920-க்குப் பிறகு பரவலாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது பேட்களின் தேவை ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இதன்விலை அதிகமிருந்தது.
இந்நிலையில், இதன் தேவையை உணர்ந்த சியால்கோட்டைச் சேர்ந்த அல்லா பாக்ஷ் என்பவர் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஹல்முல்லா-சங்கம் பகுதியில் முதல்முதலாக ஒரு யூனிட்டை உருவாக்கினார்.
சுதந்திரத்திற்கு முன்பு வரை முப்பது, நாற்பது குடும்பங்கள் இந்த ஒரு யூனிட்டை நம்பியே இருந்தன. வீட்டிற்கு ஒருவர் இந்த யூனிட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
1947-ல் பாகிஸ்தான் பிரிந்தபோது இதன் உரிமையாளர் அல்லா பாக்ஷ் சியால்கோட்டிற்குத் திரும்பிவிட்டார். பிறகு, அனந்த்நாக் பகுதியில் கிரிக்கெட் பேட் உற்பத்தி யூனிட்டை பலர் தொடங்கினர்.
1980-கள் வரை சுமார் முப்பது யூனிட்கள் அந்தப் பகுதியில் இயங்கி வந்தன. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல, இந்நிலைமை சட்டென மாறியது. கிரிக்கெட்டை பலரும் விளையாடத் தொடங்கினர்.
இதனால் பேட்களின் தேவை அதிகரித்தது. உற்பத்தி யூனிட்களும் பெருகத் தொடங்கின. இன்று சங்கம், ஹல்முல்லா, சேதர் என அனந்த்நாக் மாவட்டம் உள்ளிட்ட காஷ்மீர் பகுதிகளில் சுமார் 400 யூனிட்கள் கிரிக்கெட் பேட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
அப்படியாக ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேட்கள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன. பின்னர் இவை இந்தியா உள்ளிட்ட கிரிக்கெட் விளையாடும் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனால், காஷ்மீரில் கிரிக்கெட் பேட் உற்பத்தி ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் பிசினஸாக வளர்ந்துள்ளது.
இந்நிலையில் ரா மெட்டீரியலான வில்லோ கிடைப்பதில் சிக்கல்கள் எழ, பேட்களின் உற்பத்தி குறையத் தொடங்கின. இதுவே இன்று காஷ்மீர் உற்பத்தியாளர்களின் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.
இதற்குக் காரணம் வில்லோ மரங்கள் கிரிக்கெட் பேட்டிற்காக நிறைய வெட்டப்பட்டு விட்டதும், போதுமான அளவு வளர்க்கப்படாததுமே ஆகும்.
இதனால், பேட் உற்பத்தியாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கியும், வங்கிகளில் கடன் பெற்றும் ரா மெட்டீரியலான வில்லோவை வெளிப்பகுதிகளில் இருந்து தருவித்து தங்கள் யூனிட்டை தக்கவைத்து வருகின்றனர். சிலர் முடியாமல் யூனிட்டை மூடிவிட்டனர்.
தற்போது காஷ்மீரில் வில்லோ மரங்களை வளர்க்க விவசாயிகள் முன்வருவதில்லை.
ஏனெனில், இந்த மரங்கள் வளர 15 முதல் 20 ஆண்டுகள் வரை பிடிக்கும். அதன்பிறகு வெட்டினால்தான் அவை கிரிக்கெட் பேட்டிற்கு உகந்ததாக இருக்கும்.
ஆனால், ஆப்பிள் மரங்கள் மூன்று ஆண்டுகளில் வளர்ந்து நல்ல விளைச்சலையும் வருமானத்தையும் தந்துவிடும்.
இதனால் ஆப்பிள் மரங்கள் நடுவதிலேயே விவசாயிகள் ஆர்வம் காட்டுவதாகச் சொல்கின்றனர் கிரிக்கெட் பேட் உற்பத்தியாளர்கள்.
‘‘எங்களுக்கு 70 ஆயிரம் வில்லோ மரங்கள் ஆண்டுக்கு தேவை. அப்போதுதான் தற்போதைய தேவையை பூர்த்தி செய்யமுடியும். ஒருவேளை அது நடக்கவில்லையெனில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தத் தொழில் முற்றிலும் அழிந்துபோகும்’’ என்கிறார் காஷ்மீர் உற்பத்தியாளர் ஒருவர்.
இதற்கிடையே வில்லோ மரங்களைப் போலவே உள்ள பாப்லர் மரங்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இது எட்டு முதல் 12 ஆண்டுகள் வரை வளர எடுத்துக் கொள்ளுமாம்.
இதுமட்டுமில்லாமல் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 8 ஆயிரம் வில்லோ மரக்கன்றுகளை அங்குள்ள வேளாண் பல்கலைக்கழகம் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
‘‘இன்னும் நிறைய மரங்களை நடவேண்டும். அப்போதுதான் இந்தத் தொழில் புத்துயிர் பெறும். ஆனால், அதற்குக் கோடிக்கணக்கில் நிதி தேவை’’ எனக் கூறுகின்றனர்.
• காஷ்மீர் வில்லோ என்ன முக்கியத்துவம்?
காஷ்மீர் வில்லோ பேட்களின் விலை, இங்கிலீஷ் வில்லோ பேட்கைளைவிட மிகக் குறைவு. சுமார் 1500 ரூபாயிலிருந்து 8 ஆயிரம் ரூபாய் வரையே விலைகள் உள்ளன.
இதுவே இங்கிலீஷ் வில்லோ பேட்கள் 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை மார்க்கெட்டில் இருக்கின்றன.
ஆனால், இங்கிலீஷ் வில்லோ தரத்தில்தான் காஷ்மீர் வில்லோ பேட்களும் தயாரிக்கப்படுகின்றன. இதன் நீடித்த தன்மையும் கொண்டது.
அதுமட்டுமில்லாமல் இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாட்டு வீரர், வீராங்கனைகள் இந்தக் காஷ்மீர் வில்லோ பேட்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், காஷ்மீர் வில்லோ பேட்களுக்கு உலக நாடுகளில் அதிக டிமாண்ட் உள்ளது. ஆனால், இப்போது வில்லோ மரங்கள் குறைவால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடும் எனக் கவலை தெரிவிக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
– கவின்