10 ஆண்டுகளுக்கு முன் பரம எதிரிகள்; இப்போது பங்காளிகள்!

‘அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை… நிரந்தர நண்பர்களும் இல்லை‘

அரசியலில் மேடைகளில், கட்சித் தலைவர்கள் அவ்வப்போது உச்சரிக்கும் இந்த வார்த்தை தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலுக்குக் கனக் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

தமிழக சட்டசபைக்கு 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

அந்தத் தேர்தலில் நான்கு பேர் முதலமைச்சர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டிருந்தனர்.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருடன் விஜயகாந்தும், அன்புமணியும் இந்தப் பட்டியலில் இருந்தனர்.

அதிமுக 234 தொகுதிகளிலும் ‘இரட்டை இலை’யை இறக்கி இருந்தது. அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் சமக, கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன.

அந்தக் கூட்டணிக் கட்சிகள், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது.

தனித்து போட்டியிட்டது – பாமக.

பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தனித்தே நின்றன.

அந்தத் தேர்தலில், விஜயகாந்தின் தேமுதிக, திமுக அணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதனால் தான், கருணாநிதி, அந்த நேரத்தில், ‘பழம் நழுவி பாலில் விழும்’ என விஜயகாந்த் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனால், அந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆறு கட்சிகள் இணைந்து வலுவான மூன்றாவது அணியை உருவாக்கின.

தேமுதிக, மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், ஜி.கே. வாசனின் தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து கட்டமைத்த இந்த அணிக்கு, ‘மக்கள் நலக்கூட்டணி‘ என பெயர் சூட்டப்பட்டது.

மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் ஆகக்கூடாது என்ற குறிக்கோளுடன், உருவான இந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டார்.

விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், ஜி.கே. வாசன் போன்ற நாடறிந்த தலைவர்கள், இந்த அணியில் இருந்தனர். இதனால் மக்கள் நலக்கூட்டணி, இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணித்தனர்.

ஆனால், அவர்கள் கணிப்பு பொய்த்துப் போனது. அதிமுக 136 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. திமுகவுக்கு 89 இடங்கள் கிடைத்தன.

மக்கள் நலக்கூட்டணி 234 தொகுதிகளிலும் தோற்றுப்போனது. விருத்தாசலம் தொகுதியில் தனித்து நின்று ஜெயித்த விஜயகாந்த், 6 கட்சிகள் ஆதரவுடன் களம் இறங்கிய உளுந்தூர் பேட்டையில் டெபாசிட்டையே பறிகொடுத்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில், கம்யூனிஸ்டுகளுக்கு, சட்டசபையில், முதன்முறையாக பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. மக்கள் நலக்கூட்டணி, கலகலத்துப் போனது.

ஸ்டாலின் முதலமைச்சர் ஆகக்கூடாது என சங்கல்பம் மேற்கொண்ட, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கின.

இந்தத் தேர்தலில், தேமுதிகவும், திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டது.

மீண்டும் ஸ்டாலினை முதலமைச்சராக்க பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன.

‘2016-ம் ஆண்டு கருணாநிதி ‘பழம் நழுவி பாலில் விழப்போகிறது‘ என்று சொன்னார். விஜயகாந்துக்கும் விருப்பம் இருந்தது.

ஆனால், கூட்டணி உறுதியாகவில்லை. 10 ஆண்டுகள் கழித்து பழம் நழுவி, தேன் கலந்த பாலில் இந்த முறை விழுந்துள்ளது‘ என்று விளக்கம் கொடுத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்று சினிமாவில் கவுண்டமணி சொன்ன வசனம், நிஜத்தில் ‘ரீ-ரிலீஸ்’ ஆகியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment