ஐ.மா.பா என்றும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த சுதந்திர போராட்ட வீரர் மாயாண்டி பாரதி.
அவருடைய காலம் 1917-2015, தன் 14 வயதில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தன் சகோதரன் பங்குபெற்ற வீடு திரும்பும் பொழுது தந்தை கடுமையாக அடித்தார்.
அதன்மூலம் ஈர்ப்பு கொண்டு தன் வீட்டு அருகில் உள்ள லஜபதிராய் நூலகம் காங்கிரஸ் அலுவலகம் போல் செயல்பட்டது. அங்கு சிதம்பர பாரதி, சீனிவாச அய்யங்கார் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.
சுதேசமித்திரன் போன்ற சுதந்திரக் கனவைச் சுமந்து சென்ற பல பத்திரிகைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1932 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலித் மக்களுக்கு சேவையாற்ற ஹரிஜன சேவா சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். தலித் மக்கள் வாழும் பகுதியில் பல்வேறு பணிகளைச் செய்தனர்.
மாயாண்டி பாரதியும் அவர்களுடன் இணைந்து கிணறு தோண்டும் பணிகளில் ஈடுபட்டார். அவர் தந்தை நீதி கட்சியைச் சேர்ந்தவர்.
தனது மகன்கள் காங்கிரசு இயக்கத்தில் இருந்து பணியாற்றுவது பிடிக்கவில்லை. குடும்ப எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.
ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை கொண்ட மாயாண்டி பாரதி மதுரையில் நடந்த பெரியார் கூட்டத்தில் கடவுள் இல்லை என்ற பிரச்சாரத்தை எதிர்த்து பெரியாரிடம் கேள்வி கேட்டார்.
கடவுள் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்றார், அதற்குப் பெரியார் கடவுள் இருக்கு என்று எப்படி சொல்கின்றாய் என்று விளக்கம் மாயாண்டி பாரதி இடம் கேட்டார் அவரால் சரியாக விளக்க முடியவில்லை. பிறகு அங்கிருந்து வீடு திரும்பினார்.
பிறகு ஜனசக்தி பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோது பெரியார் அவர்களிடம் பேட்டி காணச் சென்றபொழுது தன் சிறு வயதில் தங்களிடம் கேள்வி எழுப்புவதே பற்றி வருத்தம் தெரிவித்தார். அதற்குப் பெரியார் அரசியல்வாதிகள் கல்லடி பெறுவதென்பது புதிதல்ல என்றார்.
திருப்பூர் குமரனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று சிறு பிரசுரம் ஒன்றை ராஜபாளையம் தமிழ் மாகாண அரசியல் மாநாட்டில் பிரசுரித்தார்.
அங்கு வந்த காங்கிரஸ் பத்திரிகையான லோகசக்தி ஆசிரியர் கே. ராமநாதன் மாயாண்டி பாரதியை சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கட்டுரை எழுத வேண்டினார்.
பிறகு சென்னையில் “போருக்குப் புறப்படு“ என்ற கட்டுரை எழுதியதால் அந்த பத்திரிகை ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது 2 மாதச் சிறை தண்டனையும் முதல்முறையாகப் பெற்றார்.
சாவர்க்கர் நடத்திய இந்து அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார். மதுரையில் அவரை அழைத்துப் பேரணி நடத்தினார். பின்பு “படுகளத்தில் பாரத தேவி” என்னும் நூல் எழுதினார்.
அதில் ஜாதி, மதம் பாராமல் மாணவர் இளைஞர் தொழிலாளர் அனைவரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தார்.
இரண்டாம் உலகப் போர் 1939ல் தொடங்கியது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய அரசியல் தலைவர்களை கலந்து கொள்ளாமல் இந்தியாவும் பங்கேற்பதாக அறிவித்தது.
இதை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாயாண்டி பாரதி போராட்டம் நடத்தினார்.
யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு “ஆங்கில ஆட்சிக்கு வரி கட்டாதே” என்று பேசியதால் கைது செய்யப்பட்டு ஆறுமாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.
விசாரணையில் நீதிபதியிடம் உனது சொத்து எவ்வளவு இருக்கிறது என்று கேட்டதற்கு, ’ராணி மங்கம்மாள் சத்திரம்’, ’திருமலை நாயக்கர் மஹால்’, ‘பாரதமாதா’ இவையெல்லாம் என் பாட்டன் சொத்து“ என்று நீதிபதியிடம் கேலியாகப் பேசினார்.
மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு நூற்றுக்கணக்கில் காங்கிரஸ் தலைவர்களையும், கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு கம்யூனிஸ்ட் தலைவர்களான சீனிவாசராவ், விபி.சிந்தன், மார்க்சிய அறிஞர் சமத்கனி, போன்றோருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்புகளில் பங்கு பெற்றார்.
சிறையிலிருந்து வெளிவந்த பொழுது அவர் ஒரு முழுமையான கம்யூனிஸ்டாக வெளிவந்தார்.
அதே ஆண்டு மதுரை மில் தொழிலாளர் சங்கத்தின் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் பேசிக்கொண்டிருக்கும்போது மதுரையில் மில் தொழிலாளர் சங்கம் ஒன்று முதலாளிகள் ஆதரவு சங்கம் கூட்டத்தில் கலவரம் செய்தது.
மீண்டும் காவல்துறை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர் அங்கு ஜீவானந்தம், எம்.ஆர். வெங்கட்ராமன், சீனிவாசராவ், சங்கரய்யா போன்ற கம்யூனிஸ்ட் தலைவருடைய தொடரும் கிடைத்தது.
1942ல் கம்யூனிஸ்ட் கட்சி கட்சி மக்கள் யுத்தக் கொள்கை என்ற நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவாக சிறையிலிருந்து அனைவரையும் ஆங்கில அரசாங்க விடுவித்தது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் போராட்டத்தில் பங்கு பெற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். இரண்டு வருடம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1944ல் ஜனசக்தி ஏட்டில் கட்டுரை எழுதும் ஆசிரியராக பணியாற்ற சென்னை சென்றார். இந்த நேரத்தில் காந்தி அவர்கள் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்ட கோட்சே மத கலவரத்தைத் தூண்ட நினைத்தார்.
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர் இன்னிலையில் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும் காந்தியைக் கொன்றவன் ஒரு இந்துத் தீவிரவாதி என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மாயாண்டி பாரதி அருளும் சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தீவிரமாக செயல்பட கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு கல்கத்தா நடைபெற்றது.
அதில் ஆங்கில அரசாங்கம் அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களையும் கைது செய்து, கட்சியை தடை செய்தது.
பலர் தலைமறைவு வாழ்க்கை. மாயாண்டி பாரதி திருநெல்வேலிக்கு சென்று கட்சிப் பணியாற்ற பணிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டு திருநெல்வேலி சதி வழக்கு போடப்பட்டது. அந்த நேரத்தில் இரட்டை ஆயுள் கொடுக்கப்பட்டது. மதுரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
அந்நேரத்தில் தூக்கு மேடை தியாகி பாலு தூக்கிலிடப்பட இருந்தார். இரண்டு நாட்களுக்கு சிறை அதிகாரி தனது சகாக்களைப் பார்க்க அனுமதித்தார்.
மாயாண்டி பாரதி இரண்டு நாளும் தியாகி பாலுவிடமிருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டார்.
பிறகு, அது கட்சிப் பத்திரிகையில் கட்டுரையாக வெளிவந்தது. பொதும்பு தியாகிகள் பற்றியும் கட்டுரை வெளியிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பத்திரிகையாளர் குழு ஒன்று சோவியத் செல்ல, மாயாண்டி பாரதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதை வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியாக நினைத்தார்.
அவரது வாழ்க்கையில் 1932 முதல் 47 வரை 15 ஆண்டுகள் தேச விடுதலைக்காகவும், 1941 முதல் 2014 வரை 74 ஆண்டு மார்க்சிய தத்துவத்தில் தன்னை அற்பணித்து, இறுதி இலட்சியம் சோசலிசம் தான் நிச்சியம் வெல்லும் என்பதில் உறுதி கொண்டு, இறுதிவரை வாழ்க்கை நடத்தினார்.
இன்றைய சூழலில் மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் வேலைக்கான போராட்டத்தில் கல்விக்கான போராட்டத்தில் மக்கள் வாழ்வியலுக்கான போராட்டத்தில் ஒவ்வொரு இளைஞனும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர் நமக்குச் சொல்லும் செய்தி.
– எஸ். பாலகிருஷ்ணன்
************
நூல் பெயர்: அன்புடன் ஐ.மா.பா
ஆசிரியர்: என்.ராமகிருஷ்ணன்
காலம் பதிப்பகம்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 20/-
- நன்றி : புக் டே இதழ்