இன்று ஒரு அரசியல் கலாச்சாரம் இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த உயர்ந்த மனிதரையும் தரம் தாழ்த்திப் பேசுவது, விமர்சிப்பது என்ற தாழ்நிலைக் கலாச்சாரம்.
மனிதர்கள் உயர்ந்தால் உயர்வினைப் பேசுவார்கள், உயர்ந்தவர்களைப் போற்றுவார்கள், பாராட்டுவார்கள். அவர்கள் தரம் தாழ்ந்த எந்த விமர்சனத்தையும் பொதுவெளியில் வைக்கக் கூச்சப்படுவார்கள்.
உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதை அறமற்ற செயல் என்று செய்ய மாட்டார்கள். தரம் தாழ்ந்த விமர்சனங்கள் எதைக் காட்டுமென்றால் மனிதர்களின் சிந்தனைப்போக்கு தாழ்நிலைக்குச் செல்கிறது என்பதைத்தான்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களை உயர்ந்த மனிதர்கள்மேல் வைப்பதால் உயர்ந்தவர்கள் தாழ்ந்து விடுவதில்லை. அந்த விமர்சனங்களை வைப்பவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்ந்து விடுகின்றனர்.
இந்த முன்னுரையை ஏன் இங்கு தருகிறோம் என்றால் காந்தியும் நேருவும் எதோ இந்த நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதுபோல் ஒரு கருத்தாக்கத்தை அரசியல் அறியாமையில் உள்ள மக்களிடம் கட்டமைக்க முயலுகின்றனர் சிலர்.
இங்கு நாம் காந்தியையோ, நேருவையோ நியாயப்படுத்துவதற்கோ புகழ் பாடுவதற்கோ எழுதவில்லை. அவர்கள் தங்களுக்கான கடமைகளை, பொறுப்புக்களை அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிறைவேற்றி வரலாறாக மாற்றிவிட்டார்கள்.
அவர்கள் உலக வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதர்கள். இவர்கள் உலக வரலாற்றில் இடம் பெற்றதே அறிவுசார்ந்த பெரும் விமர்சனங்கள் மூலமாகத்தான்.
ஆனால் தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனங்கள் பொதுத் தளத்திற்கு வரும்போது உண்மையை வெளிப்படுத்துவது, ஒரு பொதுக் கருத்தாளனில் பொறுப்பு கடமை என்பதால் இதைச் செய்யவேண்டி இந்தப் பதிவு.
ஹாக்கெட் என்ற வரலாற்று முறைமையியலாளர், ஒரு தலைவரையோ, அல்லது அவர் எடுத்த முடிவுகளையோ விமர்சிக்க வேண்டும் என்றால், நாம் அவர் வாழ்ந்த காலத்தில் எந்தச் சூழலில் எப்படிச் செயல்பட்டார் என்பதைத்தான் அலசி ஆராய வேண்டும்.
அவர் வாழ்ந்த காலத்தைப் பின்புலத்தில் வைத்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அவரை இன்றைய சூழலுக்குக் கொண்டு வந்து விமர்சிப்பது என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்று வரலாற்று முறைமையியலில் விளக்குகிறார் அந்த ஆய்வியல் அறிஞர்.
அந்த நிலையில் நேருவைப் பார்த்தால் அவர் எப்படிப்பட்ட மாமனிதராக, உலகம் போற்றிய ஒரு வரலாற்று ஆசிரியராக, நாட்டு மக்களின் தலைவராக, மக்களாட்சிக் காவலராக,
நாட்டின் பிரதமராக, மக்களை நேசிப்பவராக, மக்களால் நேசிக்கப்பட்டவராக, உலகத் தலைவர்களால் போற்றப்பட்டவராக எல்லாவற்றிற்கும் மேலாக மனிதாபிமானமிக்க மனிதத்துவத்தில் மிளிர்ந்தவராக வாழ்ந்தார் என்பது வரலாற்று ஆவணங்கள் தரும் செய்தி.
தேசத்தையும், தேசத்திற்கான அரசையும், தேசத்திற்கான கட்டமைப்புகளையும் எப்படி உருவாக்கினார் என்பது ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. தேசத்துடன் இணைந்தது அவர் வரலாறு. அதை மாற்ற இயலாது.
அவரை இன்று அரசியலுக்காக விமர்சிப்பதால் ஒரு சில வாக்குகளை அதிகமாக வாங்கலாமே தவிர அவரின் சாதனைகளை அழிக்க முடியாது.
அவர் ஏன் இந்தியப் பிரதமர் ஆக்கப்பட்டார் என்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் உண்மை விளங்கும்.
அவர் எண்ணிக்கையால் பிரதமராக்கப்பட்டவர் அல்ல. அவர் எண்ணங்களின் உயர்வால் அந்த இடத்தை அடைந்தார்.
அவருக்கு இருந்த உலகப் பார்வை, உலகத் தலைவர்களிடமிருந்த உயர்ந்த மரியாதை, நாட்டு மக்களிடமிருந்த அபரிவித நம்பிக்கை,
மக்களாட்சி பற்றிய ஆழமான கண்ணோட்டம், ஆளுகை பற்றிய விசாலமான புரிதல், பொருளாதாரம் பற்றிய தெளிவு,
மக்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளுகின்ற தன்மை, எவருடனும் உரையாடும் பாங்கு அனைத்தும் ஒருங்கே அவரிடம் இருந்த காரணத்தால்
அவரை அந்த இடத்துக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்தவர்களிடம் இருந்தது.
நேரு ஏன் பிரதமராக்கப்பட்டார் என்பது பற்றி டாட்டா குழுமத் தலைவர், இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் ஒரு பதிவினைச் செய்து வைத்துள்ளார். அந்தப் பதிவில் இன்னொரு செய்தியும் இருக்கிறது.
அவர் ஒரு கூட்டுத் தலைமையின் சின்னமாகத்தான் தன்னைப் பாவித்துக்கொண்டு காந்தியால் வளர்த்தெடுக்கப்பட்ட உயர்ந்த ஆளுமைகளைத் தன்னகத்தே அரவணைத்துக்கொண்டு செயல்பட்டது ஒரு வித்தியாசமான தலைமை என்று பதிவு செய்துள்ளார்.
அவரைப் புரிந்துகொள்ள அந்தச் சூழலில் உலகம், நம் நாடு எப்படி இருந்தது, அதில் தன் பங்களிப்பை எப்படிச் செய்தார் என்பதை ஆவணங்களைப் புரட்டிப் பார்த்து ஆழ்ந்து வாசித்தால் நம் அனைவருக்கம் தெளிவு கிடைக்கும்.
இன்று கருத்தாளர்கள், அரை வேக்காட்டுத் தலைவர்கள் தன் கொச்சை மொழியில் பிழைப்புவாதத்திற்கு காணொளிகளில் பேசுவதை ஆவணமாக்கிக் கொண்டு, பேசுவதைக் கேட்கும்போது நாம் எந்தத் தாழ்நிலை அரசியலுக்கு வந்துள்ளோம் என்பதை உணர முடிகிறது.
உலகத் தலைவர்கள் அவர் எழுதிய புத்தகங்களைப் படித்துவிட்டு மட்டும் அவரைப் பாராட்டவில்லை.
அன்று இந்தியா என்ற நாட்டை அவர் எப்படி உருவாக்கினார், அப்பொழுது, இந்திய சமூகத்தின் உளவியல் என்ன? பொருளாதாரம் என்ன? என்ற பின்னணியில் பார்த்து உலகம் வியந்தது.
இந்தியா பஞ்சத்தின், வறுமையின், ஏழ்மையின், அறியாமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தபோது இந்த நாடு உருவானது. இது ஒரு குழப்பத்தில் உருவான நாடு.
வெள்ளைக்காரர்கள் வைத்திருந்து விடுவித்த இந்தியாவையும், குறுநில மன்னர்கள் வைத்திருந்த 600க்கு மேற்பட்ட சமஸ்தானங்களையும் இணைத்து ஒரு பெரிய இந்தியாவை நாடாக உருவாக்கி, அதை மக்களாட்சியில் கொண்டு வந்தது என்பதை வெள்ளைய அறிஞர்கள் ஒரு சாகசமாகவே பார்த்தனர், எழுதினர்.
இந்தியா ஒரு நாடாக இருப்பதற்கே இயலாத வகையில் இருக்கும்போது அதை ஒரு மக்களாட்சியில் கொண்டு வருவது என்பது சாதாரணச் செயல் அல்ல என்பதை வெள்ளை அறிஞர்கள் எழுதினார்கள்.
இந்தியா நாடாக இருக்கப்போவதில்லை, அப்படி இருந்தாலும், அந்த நாட்டில் மக்களாட்சியில் இருக்கப்போவதும் இல்லை, அப்படியே இருந்தாலும் நேரு காலம்வரை தான் இருக்கும் என்றுதான் ஆய்வறிஞர்கள் எழுதினார்கள்.
ஆகையால்தான் நேருவுக்குப்பின் இந்தியா என்னாகும் என்று பல புத்தகங்கள் ஆங்கில அறிஞர்களால் எழுதப்பட்டன.
ஆனால், இந்தியா என்பது இன்றுவரை ஒரே நாடாகவும், அந்த நாடும் மக்களாட்சியில் இருப்பதற்குக் காரணம் அவர் மக்களாட்சிக்குக் கட்டிய அடித்தளம்தான்.
நாடு சுதந்திரம் அடைந்து குழப்பத்தில் இருந்த சூழலில்தான் பெரு நம்பிக்கையுடன் இந்த நாட்டு மக்களின் மேல் நம்பிக்கை வைத்து, இவ்வளவு வேறுபாடுகளையும், வித்தியாசங்களையும்
ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நாட்டில் மக்களாட்சியை அறிமுகப்படுத்தி நிலைக்கச் செய்து இன்றுவரை அந்த குறைந்தபட்ச மக்களாட்சியாவது கொண்டிருக்க வழிவகை செய்தது சாதாரணச் சாதனை அல்ல.
ஒரு நாட்டை உருவாக்கி, அந்த நாட்டுக்கான அரசுக் கட்டமைப்புக்களையும், மக்களாட்சிக்கான கட்டமைப்புக்களையும், மக்களின் மேம்பாட்டுக்கான மக்கள் அமைப்புக்களையும் நிறுவனங்களையும், வளர்ச்சிக்கான மேம்பாட்டுக்கான கட்டமைப்புக்களையும் உருவாக்கியது மட்டுமல்ல, அவைகளை நிலைபெறச் செய்தது மிகப்பெரிய சாதனையாக வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
வெள்ளையர்கள் இந்த நாட்டை எப்படி விட்டுச் சென்றார்கள் என்பதை வரலாற்றைப் புரட்டும்போது நமக்கு தெளிவு கிடைக்கும்.
வறுமையிலும், ஏழ்மையிலும், அறியாமையிலும், குழப்பத்திலும் குறுகிய அடையாளங்களிலும் சிக்குண்டு கிடந்த மக்களை வைத்து இந்த நாட்டை பெரிய கனவுகளுடன் உருவாக்கினார் என்பதுதான் உலகத் தலைவர்களிடம் இவரை பெரிய மகத்துவ மனிதராகக் கட்டமைத்தது.
அவர் வாழ்ந்த காலம், அவர் செயல்பட்ட அரசாங்கம், அவர் செயல்பட்ட கட்சி, அவர் காலத்தில் வாழ்ந்த உலகத் தலைவர்கள்,
அவர் கட்சியில் செயல்பட்ட இவருக்கு நிகரான காந்தியால் வளர்க்கப்பட்ட மனிதர்கள், பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட தலைவர்களை ஒருங்கிணைத்து நாட்டு உருவாக்கத்தில் பங்களிக்கச் செய்தது சாதாரண நிகழ்வல்ல.
அதற்கு ஒரு பார்வை, கண்ணோட்டம், உளவியல் கடப்பாடு தேவை. அதைக் கொண்டு செயல்பட்டதுதான் உலகத்தின் பார்வையை இந்தியா ஈர்த்து வைத்திருந்தது.
நேரு வாழ்ந்தபோது இந்தியாவில் 7% பொருளாதார வளர்ச்சியில் இல்லை, இவ்வளவு கட்டமைப்பு இல்லை.
வறுமை, பசி, பஞ்சம், பிணி, அறியாமை தான் இந்த நாட்டில் இருந்தன.
அந்த நாட்டுக்குத் தலைமை தாங்கிய மனிதரை எப்படி உலகம் போற்றியது, மக்கள் நேசித்தனர் என்பதுதான் தனிச்சிறப்பு.
அதற்கு அவரிடம் இருந்த தலைமைத்துவப் பண்பு, ஆளுமை, கண்ணோட்டம், கனவு, கனவை நனவாக்கத் தேவையான திட்டம், கட்டமைப்புக்களை உருவாக்கிய பாங்கு இவைகள்தான் இவரின் புகழுக்கு பின்புலம் என்பதைப் புரிந்துகொண்டு அவரை விமர்சிக்க வேண்டும்.
அவரைப் புரிந்துகொள்ள இரண்டு பதிவுகளை விளக்கினால் போதும் என்று தோன்றுகிறது.
அவர் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்தபோது லாகூரில் நடந்த அகில இந்திய மாநாட்டில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு வரலாற்று திருப்புமுனைச் செயல்பாடு.
அதில் ஒரு தீர்மானம் இந்தியாவிற்கு ஏன் விடுதலை வேண்டும் என்பதைப் பதிவு செய்துள்ளது.
அந்த விரிவான தீர்மானம் அடுத்த ஆண்டுதான் வெளியிடப்பட்டது. அந்தத் தீர்மானம் வெள்ளைய அரசாங்கத்திற்கு கொடுத்த விளக்கம்.
“வெள்ளைய அரசு தன்னை இந்திய அரசு என்று கூறிக்கொள்கிறது. அப்படி என்றால் அது இந்தியர்களுக்கான அரசு என்று பொருள். எங்களுக்கு இப்போது அரசாங்கம் என்பதற்குப் பொருள் விளங்கிவிட்டது.
ஒரு அரசாங்கம் என அந்த நாட்டு மக்களுக்குப் பிரகடனப்படுத்தப்பட்டால், அந்த அரசு அந்த நாட்டு மக்களைச் சுதந்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அது மக்களைச் சுரண்டக் கூடாது, அது மக்களை அச்சுறுத்தக் கூடாது, அது மக்களை இது நம்முடைய அரசு என்று எண்ணும் உளவியலுக்கு கொண்டுவர வேண்டும்.
அது மக்களை எவரும் சுரண்ட அனுமதிக்கக்சகூடாது, அது மக்களை மதிக்க வேண்டும், மக்கள் மனித வாழ்வை முறையாக வாழ்ந்திடத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து மரியாதையுடைய வாழ்வை வாழவைக்க வேண்டும்.
இவ்வளவையும் ஒரு அரசாங்கம் செய்தால் அதுதான் அந்த நாட்டு மக்களுக்கான அரசாங்கம்.
இந்த அரசாங்கத்திற்கான அடிப்படையான அம்சங்களில் எதையும் செய்யாதபோது, இந்த அரசாங்கம் இனி இந்திய அரசாங்கம் எனக் கூறி இங்கு இருப்பதற்கு எந்தத் தார்மீகமும் இல்லை.
எனவே நீ (வெள்ளையர்கள்) வெளியேற வேண்டும், நாங்கள் எங்களுக்கான அரசை உருவாக்கிக் கொள்கிறோம்” என்று அந்த தீர்மானத்தை முன்மொழிந்து இந்திய சுயராஜ்யத்திற்கு வழிவகுத்தனர்.
அந்தத் தீர்மானத்தை இன்று எடுத்து இன்றைய நமது அரசாங்கங்களை நாம் அலசினால் நமக்கு ஒரு கேள்வி பிறக்கும்.
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. 78 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அந்தத் தீர்மானத்தில் உள்ளதுபோல் இன்றைய அரசு நடந்து கொள்கிறதா என்று நம்மைக் கேட்க வைக்கிறது.
இந்தத் தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் முகத்தான் இந்திய அரசமைப்புச் சாசனத்தை உருவாக்கத் தேவையான முன் மொழிவுத் தீர்மானத்தை உருவாக்கினர்.
அதனைத் தொடர்ந்து நாட்டு உருவாக்கத்திலும், அரசுக் கட்டமைப்பை உருவாக்கும் செயல்பாடுகளில் இணைந்திருந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள், கட்சிக்காரர்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் தொடர் உரையாடலில் இருந்தார் நேரு.
அவைகளெல்லாம் தொகுக்கப்பட்டு ஆவணங்களாக இருக்கின்றன.
அவற்றில் ஒன்று “நேரு சமூக மேம்பாடு, பஞ்சாயத்து அரசு மற்றும் கூட்டுறவு” என்ற ஆவணம். அந்த ஆவணம் முழுமையும் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்புத்தான்.
அவைகளில் ஒரு பதிவை எடுத்து இங்கு விளக்கினால் இன்று நமக்கு சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் எப்படி வாழ வேண்டும் என்ற ஒரு புரிதல் கிடைக்கும்.
கிராமப்புற மேம்பாட்டுக்கு மாநில அரசுக்கு வழிகாட்டும் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் நேரு ஒருமுறை உரையாற்றினார்.
அந்த உரையில் அவர் “உயர் அதிகாரிகளாக நீங்கள் இதுவரை வெள்ளைய அரசாங்கத்தில் பணி செய்தீர்கள், அப்பொழுது உங்களுக்கு எஜமானர்கள் வெள்ளையர்கள்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு விடுதலை அடைந்து விட்டது.
அதன் பிறகு நீங்கள் பணி செய்ய வேண்டியது புதிய எஜமானர்களுக்கு.
சுதந்திர நாட்டில் அவர்களெல்லாம் இந்திய குடிமக்கள்.
அவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவர்கள் வெள்ளையர்களின் குடிபடைகள், உரிமைகள் அற்றவர்கள். பயந்து அடிமை வாழ்வு வாழ்ந்தவர்கள்.
தற்போது சுதந்திர நாட்டில் அவர்கள் எல்லா உரிமைகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கு அந்த உரிமைகளை அரசமைப்புச் சாசனம் உறுதி செய்துள்ளது. அவர்கள் உங்களிடம் வருவார்கள்.
அவர்கள் உங்களிடம் வரும்போது பழைய அதிகாரத் தோரணையைக் காண்பிக்காதீர்கள். அவர்கள் எளிய சாதாரண மனிதர்களாக எளிய உடைகளில் வருவார்கள். அவர்கள் வறுமையில் இருப்பார்கள்.
அவர்களை நீங்கள் உங்களின் எஜமானனாகப் பாவித்து அவர்கள் கூறும் கருத்தை மதித்து கேட்டு, அதற்குப் பதில் கூற உங்களின் உளவியலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அந்த மாற்றம் உளவியல் மாற்றம், அது ஒரு பெருமாற்றம், அந்த மாற்றத்தை நம் உளவியலில் கொண்டுவர வேண்டும். அது சாதாரண மாற்றம் இல்லை.
அதை வலிந்து நம் உள்ளத்திலே கொண்டுவர வேண்டும். அதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
அடுத்த ஒரு நிகழ்வில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் புதிதாகப் பணிக்குச் செல்வதற்கு முன் நேருவைச் சந்தித்தனர்.
அப்பொழுது ஒரு கேள்வியை நேரு அவர்கள் முன் வைத்தார். எது முன்னேற்றம்? எது மேம்பாடு? என்று கேட்டார்.
ஒவ்வொருவராக, மேம்பாடு என்பது கட்டமைப்பை உருவாக்குதல், வாழ்வாதாரத்தை பாதுகாத்து, பொருளாதாரத்தை வளர்த்தல், அறிவியல், தொழில் நுட்பம் வளர்த்தல் என பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர்.
கடைசியாக ஒருவர் நேருவிடம் அதே கேள்வியை வைத்தார். உடனே நேரு அதற்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார். முன்னேற்றம் என்பது ஒரு சிந்தனை (கான்சியஸ்னஸ்) என்றார்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் சிந்தனைச் சூழலில் வருவதுதான். அது ஒரு உணர்வு, அது ஒரு உளவியல். சுதந்திர நாட்டுக்குத் தேவையான ஒரு உளவியல் உருவாக்கப்படல் வேண்டும்.
அடிப்படை மாற்றத்திற்கான ஒரு உளவியல் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் மேம்பாடு, முன்னேற்றம்.
அடிமையாக இருந்து வாழ்ந்த மக்களிடமிருந்த அடிமை உளவியலிலிருந்து சுதந்திரத்திற்கான பொறுப்பு ஏற்கும் உளவியலை உருவாக்க வேண்டும் என்று விளக்கினார்.
அடுத்து ஒரு உரையாடல் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் நடந்தது. அந்த நேரத்தில் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருந்தவர்கள் பெரும் நிலச்சுவான்தார்கள், உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்.
கிராமங்கள் அப்போது அவர்களின் ஆதிக்கத்தில்தான் இருந்தது. அந்தப் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் “நம் மக்கள் சுதந்திரமான நாட்டில் வாழ்கிறார்கள்.
இங்கு யார் மேலும் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது, செலுத்தவும் கூடாது.
எனவே பொதுமக்கள் குறிப்பாக சாதாண ஏழை எளிய மக்கள் நாம் சுதந்திர நாட்டில் வாழ்கிறோம்,
நமக்கு சமத்துவம் இருக்கிறது என்ற உணர்வில் அவர்கள் வாழ அவர்களைத் தயார் செய்ய வேண்டும்.
அடுத்து நாம் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு செவி சாய்த்துக் கேட்டு அதற்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வினை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்”.
அது மட்டுமல்ல நாம் யாரையும் மேய்க்க வேண்டியதில்லை. நாம் யாரையும் ஆள வேண்டியதில்லை.
அவர்கள் பொறுப்புமிக்கவர்களாக மாறும்போது, கிராமத்தை மேம்படுத்த அவர்கள் பங்கேற்பார்கள், பொறுப்பெடுத்துக் கொள்வார்கள். எனவே கிராமத்திலோ, நகரத்திலோ மக்களுக்குத் தேவை வழிகாட்டும் தலைமைதான்” என்று விளக்கினார்.
அவர் உருவாக்க எண்ணிய இந்தியாவின் உளவியல் என்பது சுதந்திரற்கான, சமத்துவத்திற்கான, பொறுப்புக்கான உளவியல். அந்த உளவியலை உருவாக்கத்தான் தன் கடைசி மூச்சுவரை உழைத்தார்.
மேற்கூறியவைகள் ஒருசில உதாரணங்கள்தான். நாம் இன்று கேட்க வேண்டிய கேள்வி, அவர் உருவாக்க எண்ணிய உளவியல் இன்றுவரை உருவாக்கப்பட்டதா என்பதுதான்.