2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக – பாஜக கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இதனால் உரிய நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார்.
இந்நிலையில் திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் இன்று வருகை தந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இதனையடுத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தேமுதிக இடம் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “முதல்முறையாக தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது.
இன்று முதலமைச்சரை சந்தித்துக் கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை அளித்துவிட்டோம். இந்தக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்” எனக் கூறினார்.
“இந்தக் கூட்டணி 2016-ல் அமைந்திருக்க வேண்டியது. பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி அப்போது கூறியிருந்தார், அது இப்போது நிகழ்ந்திருக்கிறது” எனவும் கூறினார்.
தேமுதிக நிர்வாகிகளும் திமுக கூட்டணியை விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த், “இந்தக் கூட்டணியில் தேமுதிக எத்தனை இடத்தில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது, ஒரு குழு அமைக்கப்பட்டு, அது இரண்டு கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பிறகு, முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்றும் கூறினார்.
திமுக – தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி மீது மாறாத அன்பு கொண்டவர் என விஜயகாந்த்தை குறிப்பிட்டுள்ளார்.
“எனது அன்பு நண்பர் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.