தாய்மொழியைப் போற்றி புவிப்பந்தம் காப்போம்!

உலகத் தாய்மொழி தினம்: பிப்ரவரி – 21

மொழி என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இடையேயான உரையாடலுக்கு மட்டும் வழிவகுப்பதில்லை.

அந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலமாகப் பகிரப்படும் தகவல்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துகிற பணியையும் அது நிகழ்த்துகிறது.

மண் வளம் தொடங்கி வானிலை, சூழலியல் சார்ந்த பல விஷயங்களை அந்தந்த வட்டாரத்திற்கேற்பப் பதிவு செய்வதில் மொழிகளின் பங்கு அளப்பரியது.

அப்படிப்பட்ட மொழிகள் ஒரு சிலரால் மட்டுமே பேசப்படுவதாக இருக்கின்றன. அவற்றில் பல இன்றும் அழியும் தருவாயில் உள்ளன என்பது வேதனைக்குரிய விஷயம்.

மொழி எனும் சுரங்கம்!

உலகில் தற்போது 7,150க்கும் மேற்பட்ட மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் கிட்டத்தட்ட 3,000க்கும் மேற்பட்டவை அழியும் தருவாயில் உள்ளன.

கடந்த நூற்றாண்டில் சுமார் 400 மொழிகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. போலவே, 21ஆம் நூற்றாண்டின் முடிவில் இப்போதிருப்பவற்றில் 50 முதல் 90% மொழிகள் அழிந்துவிடக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக, இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிந்துபோவதாகச் சொல்லப்படுகிறது.

அவற்றில் பல, முறையாகப் பதிவு செய்யப்படாமலும் கல்வி அங்கீகாரம் பெறாமலும் விடுபட்டுப் போகின்றன.

பப்புவா நியூ கினியா, இந்தோனேஷியா நாடுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. சுமார் ஆயிரம் பேர் வரை பேசுகிற மொழிகள் இவற்றில் கணிசம்.

தற்போது உலகில் முதன்மையாகப் பேசப்படும் 20 மொழிகளை மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

மீதமுள்ள மொழிகளில் பல சுமார் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்தத்தக்கதாகவே உள்ளன.

மனிதனின் பரிணாம வளர்ச்சியால் ஒரு மொழி உருவாவதும் இன்னொரு மொழியோடு இரண்டறக் கலப்பதும் அழிவதும் இயல்பாக நிகழ்வதுதான்.

ஆனால், கடந்த நான்கு நூற்றாண்டுகளில் பிரிட்டன், டச்சு, போர்ச்சுக்கீசிய படையெடுப்புகள் மற்றும் காலனிமயமாக்கத்தின் விளைவாகப் பல பழங்குடியின மொழிகள் முற்றாக அழிந்தன.

ஆதிக்க மனப்பான்மையோடு அந்த மொழிகளைப் புகுத்தியதால் தனித்துவமான கலாசாரத்தைக் கொண்ட சிறுபான்மையின மொழிகள் அருகிப் போயின. இன்று அந்தப் பணியை உலகமயமாக்கம் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. பாடல்கள், பாரம்பரிய வழக்கங்கள், உலகை அணுகுகிற விதம், அடையாளம், அறிவு, கலாசாரப் பதிவுகள் எனப் பல விஷயங்கள் ஒரு மொழியில் பொதிந்திருக்கின்றன.

முக்கியமாக தாவரங்கள், விலங்குகள், சூழலியல் சார்ந்த தகவல்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேறுபடும்.

உலகம் முழுக்கப் பேசப்படுகிற மொழிகளில் அந்தப் பிரத்யேகத் தகவல்கள் நிச்சயம் இராது.

அதனால், அவற்றைப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

உலகமே ஒரு சிறு பந்து என்றாக்கிவிட்ட தொழில்நுட்ப முன்னேற்ற யுகத்தில் அதனைக் கட்டாயம் செயல்படுத்தியாக வேண்டும்.

எப்படிப் பாதுகாக்கலாம்?

ஒருமுகமாகக் காண்கிற, உரையாடுகிற, சிந்திக்கிற வாய்ப்பை எதிர்காலத் தலைமுறையினருக்குத் தரப் போகிறோமா அல்லது பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு சூழலை அடுத்தடுத்து உருவாக்குகிற வல்லமையை வழங்கப் போகிறோமா?

இந்தக் கேள்விக்கான பதில், இந்த உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் நோக்கி நாம் நகர வேண்டும் என்பதுவே.

கிட்டத்தட்ட இந்த நோக்கிலேயே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று ‘சர்வதேச தாய் மொழி தினம்’ கொண்டாடப்படுகிறது.

1952ஆம் ஆண்டு இதே நாளன்று, அப்போது பாகிஸ்தான் ஆட்சிக்குட்பட்ட பங்களாதேஷில் பெங்காலி மொழிக்கான அங்கீகாரம் வேண்டிப் போராட்டம் நடத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐ.நா.வில் இதற்கான தீர்மானம் 2007ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கடுத்த ஆண்டு முதல் இத்தினம் பின்பற்றப்பட்டு வருகிறது.

‘பன்மொழிக் கல்வியில் இளையோரின் குரல்’ என்பது இந்தாண்டுக்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

அழிந்து வரும் மொழிகளைக் காக்கக் கல்வியே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பள்ளிகளில் குழந்தைகள் தங்களது பூர்விக மொழியைக் கற்றுக்கொள்கிற வாய்ப்பினை நியூசிலாந்து, வேல்ஸ், பராகுவே உள்ளிட்ட நாடுகள் அளித்து வருகின்றன.

சிறுபான்மை மொழிகளுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம், கல்வித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், ஊடகங்களில் வட்டார மொழியைப் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுதல்,

அவற்றைப் பேசுகிற மக்களுக்குச் சிறப்பான வாழ்வுச்சூழலை அமைத்துத் தருதல், அவர்களது மொழியை ஆவணப்படுத்துதல் போன்றவற்றோடு அந்த மொழிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் திட்டங்கள், மொபைல்போன் பயன்பாடுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.

சிறுபான்மை மொழியினரோடு அவர்களது மொழியில் வாழ்த்தினைப் பகிர்வது, அவர்களது உரையைக் கேட்பது, அவர்களது கதைகளையும் கலைப்படைப்புகளையும் பொதுவெளிக்குக் கொணர்வது,

நவீனத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி அம்மொழிகளை அழியாமல் காப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வது, அவர்களது வாழ்வியலைப் பலரும் அறியும் வகையில் செய்வது எனப் பலவற்றின் மூலமாக அவற்றைப் பாதுகாத்திட முயற்சிக்கலாம்.

தமிழ்நாட்டில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளோடு உருது, சௌராஷ்டிரா, பெங்காலி மற்றும் இருளா, தோடா, கோத்தா, படகா போன்ற பழங்குடியின மொழிகளும் பேசப்படுகின்றன.

தமிழ் மொழியைச் சுமார் 96.2% பேர் பேசுகின்றனர். உலகம் முழுக்க இது 1.06%ஆக உள்ளது.

தமிழில் பேசுவதும் எழுதுவதும் நவீனமில்லை என்கிற சிந்தனை சிலரிடத்தில் இன்று வேர் பிடித்திருக்கிறது.

தங்களது தேவைகளுக்கு மட்டும் அதனைப் பயன்படுத்தினால் போதுமானது என்கிற சிந்தனை வெகுசிலரிடத்தில் காண முடிகிறது.

இவர்களுக்கு மத்தியில் தாய்மொழியைப் போற்றும் வகையில், அதன் சிறப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் வகையில் செயல்பட்டாக வேண்டிய பொறுப்பு நமக்குண்டு.

கூடவே, சிறுபான்மையின மொழிகளை அறிந்து, அவற்றுக்குத் தோள் கொடுக்க வேண்டியதும் இன்றைய தேவையாக உள்ளது.

தாய்மொழி போற்றுவோம்; இந்த புவியோடு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் பந்தம் காப்போம்!

  • சரோ
Comments (0)
Add Comment