வாசிப்பை மறக்கும் இந்தியர்கள்!?

இங்கிலாந்து வரை போன பஞ்சாயத்து

காப்பியங்கள், நீதி நூல்கள், புராணக் கதைகள் என்று எழுத்துடனும் இலக்கியத்துடனும் கலந்த வாழ்க்கை இந்தியர்களுடையது.

வடக்கே ராமாயணம், மகாபாரதம் என்று ஆரம்பித்து தெற்கே திருக்குறள், கம்பராமாயணம் வரை இந்தியர்களின் வாழ்வு இலக்கியத்தால் நிறைந்தது.

ஆனால், அப்படி இலக்கியங்களோடு இணைந்து வாழ்ந்த இந்தியர்கள் இப்போது படிப்பதே குறைந்துவிட்டது என்று குறைபட்டிருக்கிறது இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாளிதழான கார்டியன்.

இந்தியர்களின் வாசிப்புப் பழக்கம் குறைந்தது தொடர்பான ஒரு நீண்ட கட்டுரையையும் இது வெளியிட்டுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் சுயசரிதை நூலைப் பற்றிய வருத்தத்துக்குரிய ஒரு விஷயத்தை இதற்கு உதாரணமாக கட்டுரையில் சொல்லியிருக்கிறது கார்டியன்.

இந்தியாவில் ஒரு காலத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்த பிஷன் சிங் பேடி, பிற்காலத்தில் தன் சுயசரிதையைப் புத்தகமாக போட்டிருக்கிறார்.

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரரின் சுயசரிதைப் புத்தகம் குறைந்தது 1 லட்சம் பிரதிகளாவது விற்றிருக்க வேண்டாமா?…

ஆனால், அவை வெறும் 3,000 பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. பதிப்பாளர் இதைச் சொன்னதும், பிஷன்சிங் பேடியால் நம்ப முடியவில்லை.

தன் பந்துவீச்சைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வரும் நிலையில், தன் வாழ்க்கை கதையைப் படிக்க வெறும் 3,000 வாசகர்கள் மட்டுமே விரும்புகிறார்கள் என்பதை அவரால் அத்தனை எளிதாக ஏற்க முடியவில்லை.

இதுபற்றி அந்த பதிப்பாளர் சொன்னதை இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பிட்டிருக்கிறார்கள்.

பிஷன் சிங் பேடியின் வாழ்க்கைக் கதையைப் படிக்க ஆட்கள் இல்லை என்பதல்ல இங்கே விஷயம். இந்தியர்களிடையே படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது என்பதுதான் கவலையுடன் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

எங்கோ இங்கிலாந்தில் உள்ள கார்டியன் பத்திரிகை சொன்னதை வைத்து, இந்தியர்கள் படிப்பதில்லை என்று சொல்வதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா? சரி, அப்படியென்றால் இந்த விஷயத்தைப் பற்றி நம்மவர்கள் சொல்வதைக் கேட்போம்…

இந்தியர்களின் வாசிப்பு பழக்கத்தைப் பற்றிய ஆய்வு ஒன்றை Time use survey (TUS) என்ற அமைப்பு மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் டெக்கான் ஹெரால்ட் என்ற நாளிதழில் வெளியாகி உள்ளது.

2019-ம் ஆண்டில் 5.4 சதவீதம் பேர் பொழுதுபோக்குக்காக புத்தகங்களைப் படிப்பதாகச் சொல்லியிருந்த நிலையில், 2024-ம் ஆண்டு இது வெறும் 4 சதவீதமாக குறைந்துள்ளது என இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

கழுத்தை நெரிக்கும் கல்வி முறை, வேலைப் பளு, நிலையில்லாத வேலை, சமூக ஊடகங்கள் மற்றும் களைப்பு ஆகியவை இதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

இந்தியர்களின் வாசிப்புப் பழக்கம் பெரிய அளவில் குறைந்ததில் கொரோனாவுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிவிட, வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள் ஆகியவை அதிகரிக்க, எல்லோரும் வலைதளத்துக்கு அடிமையாகி நிற்கிறார்கள்.

சின்னக் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரின் கரங்களிலும் ஸ்மார்ட் போன்களும், ஆண்டிராய்ட் போன்களும் சேர, அதுவரை புத்தகங்களை கெட்டியாக பிடித்திருந்த கரங்கள், அவற்றை தூக்கிப் போட்டன.

முன்பெல்லாம் நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்பவர்கள் பயணக் களைப்பு தெரியாமல் இருக்க ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ புத்தகங்களை வாங்குவார்கள்.

ஆனால், இப்போது அன்லிமிடட் டேட்டாக்களின் உதவியால், செல்போன்களின் திரைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளன. புத்தகக் கடைகள் காற்று வாங்குகின்றன.

இப்படி ஒரு பக்கம் தொழில்நுட்பம் மக்களின் கைகளிலிருந்து புத்தகங்களை பிடுங்க, மறுபக்கம் படிப்பு மற்றும் வேலைச் சுமைகள் அவர்களைப் புத்தகங்களிடமிருந்து வெகு தூரத்துக்கு விரட்டி விடுகிறது.

தமிழ் செம்மொழி என்று நாம் சொன்னாலும், தமிழகத்தில் இருக்கும் பல தனியார் பள்ளிகளே தமிழில் பேசுவதைத் தரக்குறைவான செயலாகப் பார்க்கிறது.

அதனால், சிறுவயதிலேயே அவர்கள் தமிழ்ப் புத்தகங்களில் இருந்து தள்ளி நிற்கிறார்கள்.

தமிழ் மட்டுமல்ல… இந்தி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய மொழிகள் அனைத்துக்கும் இதே நிலைதான்.

தாய்மொழியில் படிக்காத குழந்தைகள் ஆங்கிலத்திலாவது படிக்கிறார்களா என்றால், அதற்கும் அவர்களுக்கு நேரமில்லை.

பள்ளி, டியூஷன் என்று அதற்கே முழு நேரத்தையும் ஒதுக்குகிறார்கள். அதற்குகூட ஆன்லைன் டியூஷன்கள் வந்துவிட்டன.

குழந்தைகளுக்குத்தான் இந்த நிலை என்றால் பெரியவர்களின் நிலை அதைவிட மோசம்.

வேலை நிலைக்க வேண்டுமானால் நீண்ட நேரம் உழைப்பதும், மேற்கொண்டு துறை ரீதியாக படிக்கவுமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

இதனால் ஓய்வாகக் கிடைக்கும் நேரத்தையும் படித்துக் கழிக்க அவர்கள் விரும்பவில்லை.

அதற்கு பதிலாக யுடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் என்று சில நிமிடங்கள் மேய்வதில் கிடைக்கும் சுகத்துக்கு அவர்கள் அடிமையாகிறார்கள். புத்தகங்களை வாங்க காசு கொடுக்க வேண்டும்.

ஆனால், ஷார்ட்ஸ், ரீல்ஸ் பார்க்க பணம் செலுத்த வேண்டாம் என்பதும் அவர்கள் புத்தகங்களை ஒதுக்கக் காரணமாகி இருக்கிறது.

நேரமின்மை, சமூக ஊடகங்கள், பொருளாதாரம் என எல்லாமாக சேர்ந்து வாசிக்காத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறது.

கதைகளோடும், காப்பியங்களோடும் வாழ்ந்த இந்தியா இன்று இன்ஸ்டா பக்கங்களில் முகம் புதைத்து கிடக்கிறது.

இது உண்மையாகவே வேதனை தரும் விஷயம் என்பது இங்கிலாந்துக்காரனுக்கு தெரிந்திருக்கிறது. நம் மக்களுக்கு எப்போது புரியும் என்றுதான் தெரியவில்லை?

– பி.எம். சுதிர்

Comments (0)
Add Comment