தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க.. தேர்தல் ஜூரம் பற்றிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், வித்தியாசமான – ஆச்சரியமான – தேர்தல் நடைமுறை உள்ள சில பகுதிகளையும் மக்களைப் பற்றியும் பார்ப்போம்.
இந்தியாவுக்குள் தங்களை தனியாக ஒதுக்கிக்கொண்டு, தனி நாடாக.. தனி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் மக்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்?
உண்மைதான்.
மலானா என்ற பகுதிதான் அது. இது இந்தியாவுக்குள் இருந்தாலும், இங்கே வசிக்கும் மக்கள், தங்களுக்கென்று தனிச் சட்டங்களை, தேர்தலை வைத்திருக்கிறார்கள்.
அவர்களது வித்தியாசமான தேர்தல் முறை, பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான தகவல்கள் பல உள்ளன.
அதற்கு முன், அந்த மலானா பிரதேசம் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்கு எளிதாக தெரியும்படி கூறுவதானால், இமாசல பிரதேசத்தில் உள்ள குலு மணாலி சுற்றுலாதலத்துக்கு அருகே இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் குலு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதுதான் இந்த மலானா கிராமம்.
இந்தப் பகுதிக்கு நட்சத்திர ஜொலிப்பும் உண்டு. ஆம், இந்த ஊர் அடங்கியுள்ள நாடாளுமன்றத் (மண்டி) தொகுதியின் எம்.பி., பிரபல நடிகை கங்கனா ரனாவத்.
இந்த மலானா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் சுமார் 9000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கே சுமார் 350 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை இரண்டாயிரத்துக்கும் குறைவுதான்.
ஆனால், அவர்களது பழக்கவழங்கள், உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறது.
இந்த கிராமத்து மக்கள், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிப்பார்கள்தான்.
ஆனால், அதெல்லாம் சும்மா என்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்துவது, தனி நாடாளுமன்றத் தேர்தல்!
இவர்களது நாடாளுமன்றத்திலும் இரு சபைகள் உண்டு. கீழ் சபையில் குடும்பத்துக்கு ஒருவர் என சுமார் 350 பேர் இருக்கிறார்கள்.
இவர்கள் கூடி, மேல் சபைக்கு 11 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். வாக்குப்பதிவு உண்டு.
இந்த மேல் சபை உறுப்பினர்களில் ஒருவர், அவர்களது குலதெய்வத்தின் பிரதிநிதியாக இருப்பார்.
அவர்தான் தலைவர். அதாவது பிரதமர், குடியரசு தலைவர், சபாநாயகர், நீதிபதி.. எல்லாமே!
மற்றபடி இந்த கிராமத்து மக்கள், நமது நாட்டின் சட்டதிட்டங்களைப் பொருட்படுத்துவதில்லை.
தங்களுக்குள் பிரச்சினை என்றாலும் காவல்துறையையோ, நீதிமன்றத்தையோ நாட மாட்டார்கள்.
தங்களது மேல்சபை உறுப்பினர்களையும் தலைவரையும் அழைத்து பிரச்சினையை சொல்வார்கள். அவர்கள் தீர்த்துவைப்பார்கள்.
இன்றும்கூட காவல்துறை இந்த கிராமத்தின் உள்ளே வர முடியாது.
இவர்களின் தோற்றம், பேசும் மொழியான ‘கனாஷி’ ஆகியவை சுற்றியுள்ள மற்ற கிராமங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இந்த மொழி உலகின் வேறு எங்கும் பேசப்படுவது இல்லை.
மலானா கிராமத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
வெளிநபர்கள் மலானா மக்களை அல்லது அவர்களின் கோவில்களை, சுவர்களைத் தொடக் கூடாது.
தெரியாமல் தொட்டுவிட்டால், அதற்குப் பரிகாரமாக ஒரு தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும்.
குலு மணாலி சுற்றுலா தலத்துக்கு அருகில் இந்த பகுதி இருப்பதால், பயணிகள் பலரும் இந்த கிராமத்தைப் பற்றி கேள்விப்பட்டு ஆர்வத்துடன் செல்கிறார்கள்.
அவர்களிடம் காவல்துறையினரே, கிராமக் கட்டுப்பாடுகளை எடுத்துச் சொல்லித்தான் அனுப்பும்.
அதையும் மீறி ஆர்வத்தில் அந்த ஊரின் வீடுகளையோ, வேறு கட்டிடத்தையோ, அவர்களது கோயிலையோ தொட்டுவிட்டால், பஞ்சாயத்துதான்.. அபராதம் செலுத்திவிட்டுத்தான் ஊரைவிட்டு வெளியே வர முடியும்.
ஆம்… நீங்கள் கடையில் ஏதேனும் வாங்கினால், பணத்தை அவர்கள் கையில் கொடுக்கக் கூடாது; தரையில் வைக்க வேண்டும். அவர்களும் பொருட்களைத் தரையிலேயே வைப்பார்கள்.
வெளியூர் மக்களிடம் என்று மட்டுமல்ல.. அக்கம்பக்கத்து கிராம மக்களையும்கூட இவர்கள் நெருங்க விடுவதில்லை.
அதே போல, சில குறிப்பிட்ட இடங்களை – முக்கியமாக – வழிபாட்டுத் தலங்களைப் படம் எடுக்கக் கூடாது.
ஆனால், மலானா கிராமம் இன்று உலகளவில் அறியப்படுகிறது.
அதற்குக் காரணம்.. அங்கு விளையும் உயர்தரமான கஞ்சா. இது ‘மலானா க்ரீம்’ என்று அழைக்கப்படுகிறது.
கஞ்சா பயிரிடக்கூடாது என அரசும் காவல்துறையும் எவ்வளவு சொன்னாலும் இவர்கள் கேட்பதில்லை.
“அது எங்கள் கடவுளின் பிரசாதம்” என்கிறார்கள்.
இவர்கள் கடவுளாக வணங்குவது ஜம்லு ரிஷியை. புராணங்களில் கூறப்படும் பரசுராமனின் தந்தையான ஜமதக்னி முனிவரைத்தான் இவர்கள் இப்படி கூறுகிறார்கள். (சப்தரிஷிகளில் ஒருவர்.)
இவர் இந்தப் பகுதிக்கு வந்து தவம் செய்ததாகவும், அங்கேயே தங்கி மக்களுக்கு வழிகாட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இப்போதும் அவர்தான் தங்கள் கிராமத்தை (பூசாரி மூலமாக) ஆள்கிறார் என இந்த மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
தங்களது ரிஷிக்கு படைக்கவே கஞ்சா பயிரிடுவதாகவும், இது தேவ பயிர் என்றும் கூறுகிறார்கள்.
காவல்துறை நடவடிக்கை எடுக்க வந்தால், ஊரே போர்க்களம் ஆகிவிடும்.
இந்தப் பகுதியை உள்ளடக்கிய மண்டி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யான நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில்கூட, “அந்த மக்களை மெல்ல மெல்ல நம் வழிக்குக் கொண்டு வரவேண்டும்” என பேசினார்.
அந்த கிராமத்துக்கு நிறைய கட்டமைப்பு வசதிகளை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், அந்த மக்கள் தனித்தே வாழ விரும்புகிறார்கள்.
இதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் விரும்புவது இல்லை.
இதற்கு முக்கியக் காரணம், உலகில் தாங்களே உயர்ந்தவர்கள், பிறர் தங்களை – தங்கள் பிள்ளைகளை – தொட்டுவிடக்கூடாது என்கிற எண்ணம்தான்.
ஆகவே, கல்வி அறிவு என்பது அரிது. இதனால், அரசுப் பணியில் இவர்கள் எவரும் இல்லை.
தங்கள் கிராமப் பகுதியில் விவசாயம் செய்வது, ஆடு மாடு வளர்ப்பது என்பதோடு வாழ்வாதாரத்தை வைத்துக்கொள்கிறார்கள்.
தவிர, சுற்றுலாப் பயணிகள் வருகையால் வருமானம் வரும். அவ்வளவுதான்.
இவர்களது விசித்திரமான பழக்கங்களில் ஒன்று…
இருவருக்கு இடையே பிரச்சினை என்றால், இரு தரப்புக்கும் தலா ஒரு ஆடு வழங்கப்படும்.
இரண்டு ஆடுகளின் காலிலும் லேசாக கத்தியால் வெட்டி, அதில் விஷம் வைப்பார்கள்.
எந்த ஆடு முதலில் இறக்கிறதோ, அந்தத் தரப்பினர்தான் தவறு செய்திருப்பார் என முடிவு செய்துவிடுகிறர்கள்.
இன்னொரு பக்கம், இவர்கள் தங்களை, மாவீரன் அலெக்சாண்டர் பரம்பரை என நம்புகிறார்கள்.
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்தபோது, காயமடைந்த சில வீரர்கள் இந்தக் கிராமத்தில் தங்கிவிட்டதாகவும், அவர்களே இவர்களின் முன்னோர்கள் என்பதும் இவர்களின் நம்பிக்கை.
இவர்களது தேர்தல் முறைக்கு மீண்டும் வருவோம்.
தங்களுக்கான நாடாளுமன்ற மேல் சபைக்கு உறுப்பினர்களை தேந்தெடுப்பதை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள்.
“உலகின் முதல் தேர்தல் எங்களுடையதுதான்.. நாங்கள்தான் முதல் குடியரசு” என்கிறார்கள்.
அந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி உள்ள அனைவருமே ஓட்டுப்போட்டுவிடுவார்கள். ஒருவர் கூட தவறவிடமாட்டார்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கும் வாக்களிப்பார்கள். ஆனால், தங்களது நாடாளுமன்றத் தேர்தல் அளவுக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. குறைந்த விழுக்காடுதான் வாக்குப்பதிவு ஆகிறது!
அடுத்தமுறை குலு மணாலி சென்றால், இந்த விசித்திர கிராமத்தை எட்டிப் பார்க்க மறக்காதீர்கள்! (ஆனால் எதையும் தொட்டுவிடாதீர்கள்!)