இந்தியாவில் இதுவரை இல்லாத வரலாறாக மரங்களை வெட்டும் அரசை எதிர்த்து, ஒரு மாநில மக்கள் முழுவதும் ஒன்றாகத் திரண்டு போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக தமிழக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு இணையாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
ராஜஸ்தானைப் பொறுத்தவரை, அது பாலைவனங்களால் நிறைந்த மாநிலம். அதனாலேயே அங்கு வெப்பமும் அதிகம்.
இந்த வெப்பத்தில் இருந்து ராஜஸ்தான் மக்களைக் காக்கும் மரமாக வன்னி மரங்கள் இருந்திருக்கின்றன.
வறண்ட பகுதியிலும் செழித்து வளரும் மரமாக வன்னி மரங்கள் இருப்பதால், அம்மாநில மக்களின் ஜீவ நாடியாக வன்னி மரங்கள் இருந்திருக்கின்றன.
இந்த வன்னி மரங்களில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் ‘சங்ரி’ (ராஜஸ்தான் மக்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள்) எனப்படும் காய்கள் காய்க்கின்றன.
புரதச்சத்து மிகுந்த இந்த காய்களை சமைத்து உண்ணலாம்.
உடனடியாக சமைத்து உண்ணாதவர்கள் இந்தக் காய்களை வெயிலில் உலர வைத்து சேமித்து வைக்கிறார்கள்.
காய்கறிகள் கிடைக்காத கோடைக் காலங்களில் இவற்றை ஊறவைத்து தயிர் அல்லது மசாலாக்களுடன் சேர்த்து ‘கெர் சங்ரி’ எனப்படும் உணவாக சாப்பிடுகிறார்கள்.
இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் இலைகள்தான் கால்நடைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது.
இப்படி தங்களுக்கும், கால்நடைகளுக்கும் உணவாகவும், நிழலாகவும் தங்களுக்கு உதவும் வன்னி மரங்களை தங்களுக்கு கிடைத்த கற்பகவிருட்சமாக வணங்குகிறார்கள் ராஜஸ்தானிய மக்கள்.
இந்தியாவில், குறிப்பாக ராஜஸ்தானில் தொழில் வளர்ச்சி பெருகப் பெருக, வன்னி மரங்களை அழித்து சுரங்கங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தானிய பாரம்பரியத்துக்காக குரல் கொடுப்பவர்களால் இதை ஏற்க முடியவில்லை.
வன்னி மரங்களை வெட்டுவதை எதிர்த்து அவர்கள் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் அதிகரித்து வரும் சூர்யசக்தி மின் நிலையங்களுக்காக மரங்களை வெட்டும் மாநில அரசின் நடவடிக்கை ஏற்கெனவே உள்ளூர் மக்களின் கோபத்துக்கு காரணமாக இருந்த நிலையில்,
இப்போது புதிதாக பிகானீர் பகுதியில் சூரியசக்தி மின் நிலையத்தை அமைக்க, நூற்றுக்கணக்கான வன்னி மரங்களை வெட்ட மாநில அரசு அனுமதி கொடுத்ததும் கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கடைகளை அடைத்தும், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் முதலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதற்கு மாநில அரசு அசைந்து கொடுக்காத நிலையில், பிகானீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை முதல் 450 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 50 துறவிகளும் அடங்குவர்.
அவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்களும் பிகானீர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட, அந்த இடமே போர்க்கோலம் பூண்டுள்ளது.
பிகானீர் மாவட்டத்தில் ஆரம்பித்த இந்த போராட்டம், இப்போது மாநிலம் முழுவதும் பற்றி எரிகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வசுந்தரா ராஜே, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருப்பது மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் சிக்கலை அதிகரித்துள்ளது.
மக்களின் போராட்டத்தை ஒடுக்க என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறது.
உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாதே என்பதற்காக போராட்டம் நடக்கும் இடத்துக்கு அருகில் 75 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை அமைத்துள்ளது.
போராட்டத்தைக் கைவிட மக்கள் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்.
இனி வன்னி மரங்களை வெட்டுவதற்கு எதிராக மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.
இயந்திரமயமான வாழ்க்கையை வாழும் இந்த காலத்திலும் மரங்களைக் காக்க போர்க் குரல் எழுப்பியுள்ள ராஜஸ்தானிய மக்களின் போராட்டம் வெல்ல வாழ்த்துவோம்.
– பி.எம். சுதிர்.