நூல் விமர்சனம்:
* சனாதனத்தின் பெயரால், வர்ணாசிரமத்தின் பெயரால் – மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து, சுயமரியாதையை இழந்து, ஆதிக்க சாதிகளுக்கு அடிமை போல் வாழ்ந்த காலத்தில், அவர்களின் உரிமைகளை காப்பாற்ற உருவானதே ‘திராவிட இயக்கம்’!
* ஒரு நூறாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனீயத்தால் தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு வாழ்ந்து வந்தார்கள்!
அந்த சூழலில் பார்ப்பனரல்லாதார் இயக்கமாக தோன்றிய நீதிக்கட்சி முதலாக பின்னர் அதனோடு பயணித்த சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் பின்னர் உருவான திராவிடர் கழகம், அதன் கிளையாகப் பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய மொத்தத்தையும் ஒரே அடையாளமாக காட்டுவது தான் – திராவிட இயக்கம்!
* திராவிட இயக்கம் இன்று மிகப்பெரிய ஆலமரமாக விரிந்து, பரந்து உறுதியாக நிற்கின்ற நிழல் தரும் மரமாக காட்சியளிக்கிறது.
அந்த மரத்தின் வேர்களாக, தங்கள் வியர்வையையும் உதிரத்தையும் தந்த செயல் வீரர்கள் பற்றி இன்று அந்த மரத்தின் நிழலை அனுபவிக்கும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது மிக அவசியம் எனக் கருதி, இந்த அற்புதமான நூலை எழுதியுள்ளார் திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு.
அவர் ஒரு வாழும் திராவிட என்சைக்கிளோப்பீடியா என்பதை நாடறியும்!
* நூலில் முப்பத்தைந்து திராவிட இயக்க ஆளுமைகள் பற்றிய விரிவான தகவல்கள், அவர்களது தொண்டு, சாதனைகள், அர்ப்பணிப்புகள் பற்றிய தகவல் களஞ்சியமாக இந்த படைப்பு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது !
* திராவிட இயக்க ஆளுமைகளில் முதனிலைத் தலைவர்களாக ஐம்பெரும் ஆளுமைகளை நூலாசிரியர் பட்டியலிட்டு அடையாளப்படுத்தியுள்ளார்.
அவர்களைப் பற்றிய விவரங்களில் இருந்து சில தகவல்களையும் மற்ற முப்பது ஆளுமைகளின் பெயர்களைப் பட்டியலிட்டும் இந்த அறிமுகவுரையை உங்களுக்கு வழங்குகின்றேன்!
பார்ப்பனர்களின் வளர்ச்சிக்கு 63 நாயன்மார்கள் முக்கியமென்றால் பார்ப்பனரல்லாதார் மக்களுக்கு இந்த 5 பேராளுமைகளின் தொண்டு மிகப்பெரிய கொடையாகும்!
1) திராவிட இயக்கத்தின் விடிவெள்ளி – டாக்டர் சி. நடேசனார் (1875 – 1937)
* நீதிக்கட்சி உருவாவதற்கு முன்பே 1912ல் ‘திராவிடர் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவி நடத்தி வந்தவர்.
பார்ப்பனரல்லாத மாணவர்களுக்காக சென்னை திருவல்லிக்கேணியில் ‘திராவிடர் இல்லம்’ என்ற விடுதியை முதன் முதலில் நடத்தியவர்.
இந்த விடுதியிலிருந்து பயன்பெற்று வெளிவந்த மாணவர்களில் ஒருவர் தான் இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக இருந்த – சர். ஆர். கே. சண்முகம் செட்டியார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!
* நடேசனாரின் தொடர் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் இயக்கமான ‘நீதிக்கட்சி’ உருவானது. 1920 முதல் 1937 வரை தொடர்ந்து மெட்ராஸ் மாகாண சட்டசபையில் உறுப்பினராக இருந்தார்.
இவர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த முக்கியமான தீர்மானம் தான் – சென்னை பல்கலைக்கழகத்தில் தாய் மொழிப் படிப்பை அறிமுகப்படுத்துவதற்கு காரணமாக இருந்தது!
* டாக்டர் நடேசனார் தனது வாழ்நாளில் எந்த பதவியையும் அடையவும் இல்லை. அதற்காக முயற்சி செய்யவும் இல்லை. இவர் போன்ற தியாகிகளை தமிழகம் என்றும் மறக்கலாகாது!
2) நீதிக்கட்சியின் தந்தை – பிட்டி . தியாகராயர் (1852 – 1925)
* பிட்டி என்பது அவரது குடும்பப் பெயர். வெள்ளுடை வேந்தர் என்பது அவரை குறித்தப் பெயர்!
* பார்ப்பனரல்லாதார் கட்சி பற்றிய பிரகடனத்தை முதன் முதலில் சென்னை மயிலாப்பூரில் 1916ல் அறிவித்தார்.
பின்னர் சென்னை வேப்பேரி எத்திராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள் ஏறத்தாழ 25 பார்ப்பனரல்லாத தலைவர்களின் கூட்டம் நடந்தது. அதுவே நீதிக்கட்சி தோன்ற காரணமானது!
* தியாகராயரின் தியாகம் பற்றி அண்ணா கூறியது – அவர் விரும்பி இருந்தால் சென்னையிலேயே பெரும்பாலான இடங்களைச் சொந்தமாக வாங்கி இருக்க முடியும்.
தியாகராயர் பெரிய செல்வந்தர். பணம் படைத்தவர். வணிகத்தின் மூலம் பல லட்சங்களை ஈட்டியிருக்கலாம். ஆனால் அவர் தம்முடைய சமூகத் தொண்டை பெரிதாக மதித்தார்!
* அவரது பெயரிலுள்ள சென்னையின் இன்றைய தி.நகர் என்ற தியாகராயர் நகரில் வலம் வரும் ஒவ்வொரு தமிழரும் திராவிடத்தின் முக்கியமான இந்த வேரை நினைவில் கொள்ள வேண்டும்!
3) திராவிடர் இயக்கத்தின் தளபதி – டாக்டர் டி. எம். நாயர் (1868 – 1919)
* தாரவாட் மாதவன் நாயர் (டி.எம். நாயர்) 1894ல் இங்கிலாந்தில் மருத்துவப் பட்டம் பெற்று (ENT மருத்துவர்) 1897ல் சென்னையில் புகழ்பெற்ற மருத்துவரானார்.
* 1915ம் ஆண்டு டில்லி இம்பீரியல் சட்டமன்ற உறுப்பினர்க்கான தேர்தலில் சென்னை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நல்வாய்ப்பை பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் இழந்தார்.
பின்னர் நடேசனார், தியாகராயர் இருவரோடும் இணைந்து பார்ப்பனரல்லாதார் இயக்கமான – தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சியை தோற்றுவித்தார்!
* மாண்டேகு – செம்ஸ்போர்டு குழுவில் பார்ப்பனரல்லாதாரின் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டி தனது சொந்த செலவில் லண்டனுக்கு சென்றார்.
அங்கு உடல் நலம் கெட்டதால் லண்டனிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மருத்துவமனையிலேயே குழுவினர் வந்து சந்திக்கும் முன்னர் மரணமடைந்தார்.
இங்கிலாந்திலும் தமிழகத்திலும் அவரது மறைவுச் செய்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது!
அறிஞர் அண்ணா டி.எம். நாயரை ‘திராவிட லெனின்’ என்று அழைத்ததை நினைவு கூறுகின்றேன்!
4) திராவிட இயக்கத்தின் கருத்தாளர் – ஈ.வெ. ராமசாமிப் பெரியார் (1879 – 1973)
* பெரியாரை ‘பெரியார்’ என்ற அடைமொழியோடு முதன் முதலில் அழைத்தவர் – நாகர்கோவில் வழக்கறிஞர் பி.சிதம்பரம் பிள்ளை.
1938ல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அவருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினார்கள் !
* பெரியார் வைக்கத்தில் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் பின்னாளில் திருவாங்கூரில் ‘முதல் கோயில் நுழைவு’ ஏற்படக் காரணமாக அமைந்தது என்பது வரலாற்றில் புதைந்து கிடக்கும் செய்தியாக நூலாசிரியர் தெரிவிக்கின்றார்!
* பெரியாரின் தனித்துவ சிறப்புக் குணமாக நூலாசிரியர் கூறுவது –
“யார் ஆட்சியில் இருந்தாலும், அவரது கொள்கைக்கு ஆதரவாகவும், கீழ்த்தட்டு மக்களின் இழிவுகளை ஒழிப்பதற்கும், அவர்களது நல்வாழ்விற்கு நன்மை கிடைப்பதாக தோன்றினாலும் அதற்கு ஆதரவாக உடனே தனது நிலையை மாற்றிக் கொள்வார்.
இந்த அடிப்படையில் தான் அவர் ஆளும் கட்சியை ஆதரிப்பதும் – எதிர்ப்பதும்”!
5) திராவிடர் இயக்கத்தின் அரசியல் சித்தாந்தவாதி – அறிஞர் அண்ணா (1909 – 1969)
* பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, பெரியாரோடு பயணித்து, பெரியாரின் திராவிடர் கழகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்து, பெரியாரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவர் அண்ணா!
* அண்ணாவின் மூன்று தெளிவான கொள்கைகளாக கருதப்பட வேண்டியவை :
தி.மு.கழகத்திற்கும் பெரியாரே தலைவர்!
திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி!
தி.மு.கழகம் என்பது திராவிடர் கழகத்தின் கிளை!
* அறிஞர் அண்ணாவின் மிகப்பெரிய சாதனைகளாக நூலாசிரியர் கருதுவது :
எந்த ராஜாஜியால் 1937ல் திராவிடர் இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியை இழந்தோமோ அந்த ராஜாஜியை தன் பக்கத்தே அமர வைத்துக் கொண்டு 1967ல் காங்கிரசை வீழ்த்தி – திராவிடர் இயக்க ஆட்சியை மீண்டும் நிறுவியது!
பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் கட்சி அமைத்து செயல்படுத்த எண்ணிய முதல் தலைவராக விளங்கியது!
* நூலில் காணப்படும் முப்பத்தைந்து ஆளுமைகளில் முதல் ஐவரைப் பற்றிய விவரங்களை அறிந்தோம். மீதமுள்ள முப்பது ஆளுமைகள் யார் யார் என விளக்கும் பட்டியல்:
6) புரட்சிக் கவிஞர் – பாரதிதாசன் (1891 – 1964)
7) பனகால் அரசர் – பி. ராமராய நிங்கார் (1866 – 1928)
8) தமிழவேள் – பி. டி. ராசன் (1892 – 1974)
9) அஞ்சா நெஞ்சன் – பட்டுக்கோட்டை அழகர் சாமி (1898 – 1949)
10) பெரியார் பெருந் தொண்டர் – மாயவரம் சி. நடராசன் (1902 – 1937)
11) வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வழங்கியவர் – எஸ். முத்தையா முதலியார் (1883 – 1953)
12) நீதிக்கட்சியின் மூளை – சர். ஏ. ராமசாமி முதலியார் (1887 – 1976)
13) திராவிட ரத்தினம் – சர். ஏ. டி. பன்னீர் செல்வம் (1888 – 1940)
14) திராவிட இயக்க முதல் நாவலாசிரியர் – புலவர் எஸ். எஸ். அருணகிரி நாதர் (1895 – 1974)
15) எழுத்துச் சீர்திருத்த வழிகாட்டி – பா. வே. மாணிக்க நாயக்கர் (1871 – 1931)
16) பாண்டி மண்டலத் தளபதி – ஊ. பு. அ. சௌந்தர பாண்டியனார் (1893 – 1953)
17) திராவிட மணி – சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் (1892 – 1953)
18) வைக்கம் போராட்டத்தின் மற்றொரு வீரர் – கோவை. அ. அய்யாமுத்து (1898 – 1975)
19) தனித்தமிழ் இயக்கத் தந்தை – மறைமலையடிகள் (1876 – 1950)
20) தமிழ்த் தென்றல் – திரு. வி. கலியாண சுந்தரனார் (1883 – 1953)
21) பெண்ணுரிமைப் பெருமாட்டி – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் (1883 – 1962)
22) பெண்ணுரிமை விடிவெள்ளி – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886 – 1968)
23) வீரத்தமிழ் அன்னை – டாக்டர் எஸ். தருமாம்பாள் (1890 – 1959)
24) சிந்தனை சிற்பி – ம. சிங்கார வேலர் (1860 – 1946)
25) தாழ்த்தப்பட்டோர் உரிமைக் காவலர் – இரட்டை மலை சீனிவாசன் (1860 – 1946)
26) சுயமரியாதைச் சுடரொளி – கைவல்ய சாமியார் (1877 – 1953)
27) சுயமரியாதைச் சீயம் – சிவகங்கை ராமச்சந்திரன் (1884 – 1933)
28) முத்தமிழ் காவலர் – கி. ஆ. பெ. விசுவநாதம் (1899 – 1994)
29) பெரியாரின் தொடக்கக் காலத் தோழர் – சாமி. சிதம்பரனார் (1900 – 1961)
30) பகுத்தறிவுச் சுடரொளி – குத்தூசி குருசாமி (1906 – 1965)
31) சமதர்ம சூறாவளி – ப. ஜீவானந்தம் (1907 – 1963)
32) சண்டே அப்சர்வர் ஆசிரியர் – பி. பாலசுப்பிரமணியம் (1900 – 1958)
33) பெரியாரின் வலது கரம் – எஸ். ராமநாதன் (1895 – 1970)
34) ஒரிசா மாநிலத்தின் சர். அனிப்பூ. பரசுராம பாத்ரோ (1875 – 1949)
35) திராவிட இயக்கப் பத்திரிக்கையாளர் – டி. ஏ. வி. நாதன் (1903 – 1962)
திராவிட இயக்க வேர்களை அறிந்துகொள்ள அவர்களின் பேர்களை அறிந்து கொள்வது முக்கியமென கருதியே இந்த நீண்ட பட்டியல்!
* இப்படிப்பட்ட சிறந்த ஒரு ஆவண நூலை, இன்றைய மிகத் தேவையான வரலாற்று பெட்டகத்தை நமக்கு சிறப்பாக வழங்கிய நூலாசிரியர் க. திருநாவுக்கரசு அய்யா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் வணக்கங்களும்!
ஒவ்வொரு திராவிடரின் இல்லத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணம் இது!
****
திராவிட இயக்க வேர்கள்!
க. திருநாவுக்கரசு
தளபதி பதிப்பகம்
முதற் பதிப்பு 1991
பக்கங்கள் 456
விலை: ரூ.550/-
– பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.