விவசாயத்தை முன்னிலைப்படுத்திய பொருளாதார அறிஞர்!

இந்தியப் பொருளாதார நிபுணராக இருந்த ஜே.சி.குமரப்பா மகாத்மா காந்தியின் நெருங்கிய தோழமைச் செயல்பாட்டாளர். கிராமப்புறப் பொருளாதார மேம்பாட்டுக் கோட்பாடுகளின் முன்னோடியாக குமரப்பா கருதப்படுகிறார்.

இவர் காந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கோட்பாடுகளை உருவாக்கினார். பொருளாதாரச் சிந்தனைப் பள்ளியில் ‘காந்தியப் பொருளாதாரம்’ என்ற சொல்லை உருவாக்கியவர்.

இந்தியக் கிராமப்புறம் பற்றிய சிந்தனையின் முன்னணி செயல்பாட்டாராகவும், பொருளாதார நீதி மற்றும் சுற்றுச்சூழல் சிந்தையினை உடையவராகவும் இருந்த இவர், வேளாண் பொருளாதார அமைப்பிற்கு அரசு பாரபட்சம்யின்றி அவற்றை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார்.

குமரப்பா உள்ளூர் மக்களின் நுகர்வுக்குத் தேவையானதை உள்ளூரிலே உற்பத்தி செய்யப்படவேண்டும் என்றார் மற்றும் சுயச்சார்பு, தன்னிறைவு ஆகியவற்றை வலியுறுத்தினார்.

குமரப்பா ‘முதலாளித்துவம்’, ‘சோசலிசம்’ என்ற இருவேறுபாட்டை நிராகரித்தார், ஆனால் இரண்டின் பண்புகளும் இந்தியாவிற்குத் தேவையானது என்று நம்பினார்.

அரசு மற்றும் சந்தை அடிப்படையிலான உற்பத்திக்கு இடையில் ஒரு அர்த்தமுள்ள நிலையினை கடைபிடிக்கவேண்டியுள்ளது என்றார்.

தொழில்களை மையப்படுத்துவதன் வழியாகத் தொழில்முனைவோர்கள் கொள்கைகளில் தங்கள் செல்வாக்கைச் செலுத்தும் நிலை உருவாகும் என்றார்.

வேளாண் பொருளாதாரத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான பார்வைக்கு முக்கியத்துவம் வேண்டும் என்றும், இது மண் வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தவும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை நிறைவு செய்யவும் உதவும் என்றார்.

சுதந்திர இந்தியாவில் ஜே.சி. குமரப்பா தலைமையில் 1949-ம் ஆண்டு வேளாண் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளை வழங்கியது.

(அ) நிலச் சுவாந்தார்களால் ஏழை விவசாயிகள் சுரண்டப்படும் நிலையினை நீக்குதல்,

(ஆ) தன்னம்பிக்கை உணர்வை விவசாயிகளிடையே உருவாக்குதல்,

(இ) அரசுக்கும் உழவருக்கும் இடையிலான அனைத்து வகையான இடைத்தரகர்களையும் ஒழித்தல்,

(ஈ) வேளாண் விளைநிலத்தை உள்குத்தகைக்கு விடுவதையும், வேளாண் சாரா பயன்பாட்டிற்கு மாற்றுவதையும் தடை செய்தல்,

(உ) நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்துவதற்காக அர்ப்பணிப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட நிர்வாக இயந்திரத்தை அமைத்தல்.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் வேளாண் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்தது.

குமரப்பா பணத்தைப் பற்றி குறிப்பிடுகையில் “வாங்கும் சக்தியை மாற்றுவதற்கு, பணமும் கடன் தொகையும் மிஞ்ச முடியாதவை” என்றார்.

ஒரு நேர்மையான பொருளாதார பரிமாற்றம் “மனித மற்றும் தார்மீக மதிப்புகளின்” பரிமாற்றங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும், இவை பணப் பரிவர்த்தனையில் இயல்பாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதில்லை என்றும் கூறினார்.

மனிதன் வெறும் செல்வத்தை உருவாக்கும் முகவர் மட்டுமல்ல, அடிப்படையில் அரசியல், சமூக, தார்மீக மற்றும் ஆன்மீகப் பொறுப்புகளைக் கொண்ட சமூகத்தின் உறுப்பினர் என்பதில் குமரப்பா தெளிவாக இருந்தார்.

– பேராசிரியர் பு. அன்பழகன்

நன்றி : புக் டே

Comments (0)
Add Comment