கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு – 6
தமிழ்நாடு முழுக்கப் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் பரவிக்கிடப்பதற்குப் பின்னால், பல்வேறு சாதிய உணர்வுகளும் புறக்கணிப்புகளும் பின்புலத்தில் இருப்பதை தொலைக்காட்சித் தொடருக்காக நேரடியாகச் சென்று பார்த்தபோது, அதிர்ச்சிகரமாக உணர முடிந்தது.
“மதுரையில் 40 வருடங்களுக்கு முன்பு பிழைப்புத் தேடி தென்மாவட்டங்களிலிருந்து பல்வேறு தொழிலாளர்கள் இங்கு வந்தார்கள். வந்த அவர்கள், இங்குள்ள “பெரிய கோவில்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
புறக்கணிக்கப்பட்ட அவர்கள் தாங்கள் வாழும் தெருக்களிலோ, சாலையோரத்திலோ தங்களுக்கான கோவில்களை அமைத்துக் கொண்டார்கள். இதனால்தான் இங்கு ஏராளமான சிறு கோவில்கள் தோன்றி இருக்கின்றன”
– என்று மதுரையில் சிறு கோவில்கள் ஏராளமாக பெருகி இருப்பதன் பின்னணியை நம்மிடம் சொன்னார் மதுரையின் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர்.
அவர் சொன்னதில் தப்பில்லை.
மதுரையிலிலிருந்து சற்றுத் தள்ளி இருக்கிற கோவில் ஒன்றில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நுழைய இன்றும் அனுமதியில்லை.
கோவிலின் வெளிப்புறச் சுவரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டம் போட்ட மாதிரி ஒரு ஓட்டை இருக்கும். அந்த ஓட்டைக்கு வெளியே நின்றபடிதான் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே இருக்கிற சாமியை வழிபட முடியும்.
இதேமாதிரிதான் தமிழகத்தில், பரவலாக உள்ள பல கோவில்களின் நிலைமையும்.
கோவில்களுக்குள் நுழையவிடாதது மட்டுமல்ல, கோவில்களில் நடக்கும் திருவிழாவில்கூட அவர்கள் பங்கேற்பதைத் தடுக்கின்ற கட்டுப்பாடுகள் இன்றும் நிலவுகின்றன.
கோவில் தேர் எந்தெந்த தெருக்கள் வழியாக வரவேண்டும் என்பதில்கூட சாதியக் கண்ணோட்டம் இருக்கிறது. அத்தகைய மேலோங்கிய சாதிய உணர்வுகள் இப்போதும் உயிரூட்டமாக இருக்கின்றன.
சபரிமலை மட்டுமல்ல இந்தக் கோவில்களுக்குள்ளும் பெண்கள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதையும் நேரடியாக உணர முடிந்தது.
அப்படிப் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினர் தங்களுக்கென்று கோவில்களை உருவாக்கி தாங்கள் வழிபட்ட சாமிகளை உள்ளே வைத்திருந்தார்கள். அதற்கென்று திருவிழாக்களையும் நடத்தினார்கள்.
அதேசமயம் அப்படித் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உருவாக்கிய கோவிலுக்குள் மற்ற சமூகத்தினர் பரவலாக நுழைவதில்லையே தவிர, அவர்கள் நுழைய வேண்டாம் என்று எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள எதார்த்தம்தான்.
வெவ்வேறு மலைப்பகுதிகளிலுள்ள தொல் பழங்குடிகள் வழிபடும் கோவில்களிலும் கூட மற்ற சமூகத்தினர் நுழையக்கூடாது என்கின்ற தடைகள் இல்லை.
சாதி, சமூக உளவியல் பற்றி ஆய்வு செய்கிறவர்கள் கவனம் கொள்ள வேண்டிய நிகழ்வுகள் இவை.
அதேசமயம் பெருதெய்வங்கள் என்று சொல்லப்படுகிற கோவில்கள் சார்ந்து நிறைய சடங்குகள், விரதங்கள் இருப்பதைப் போலவே வெகுமக்களின் சாமிகளுக்கும், கோவில்களுக்கும் சில சடங்கு முறைகள் இருக்கின்றன.
மென்மையான மனம் கொண்ட வாசகர்களுக்குக் கீழே விவரிக்கப்படும் காட்சிகள் சற்றே அதிர்ச்சி அளிக்கலாம். அதைக் கருத்தில் கொண்டு அடுத்தடுத்த பாராக்களை கவனத்துடன் வாசிக்கவும்.
இத்தகைய விரதங்கள், சடங்குகள் சற்றே கெடுபிடியாகவும் இருக்கின்றன. திறந்த வெளியில் கல் வடிவத்திலோ, சில இடங்களில் மரப்பெட்டி வடிவத்திலோ, மண்ணிலான சிலைகளாகவோ, இவர்கள் வழிபடும் சாமிகள் இருந்தாலும், இந்தக் கோவிலில் உள்ள சாமிகளை தங்களுக்கு மிகவும் நெருக்கமான சொந்தத்தைப் போல சுற்றியுள்ள மக்கள் கருதுவதை நேரில் பார்க்க முடிந்தது.
நெல்லைக்கு அருகிலுள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு எதிரே நின்று வயதான மூதாட்டி ஒருவர், படு ஆக்ரோஷமான வார்த்தைகளை அள்ளி இரைத்துக் கொண்டிருந்தார்.
“என்னை ஏன் இந்த நிலைமையில் வச்சிருக்க?” என்பதுதான் அந்தக் கடுமையான வசவுகளின் மையம்.
அவரிடம் ஏன் இந்த அளவுக்கு பேசுகிறீர்கள் என்று கேட்டபோது, அந்த வயதான மூதாட்டிச் சொன்னது, “எங்க சொந்தக்காரங்களான இவங்க கிட்டச் சொல்லாம, யார் கிட்ட சொல்லுவோம்? எங்களுக்கு நல்லது பண்ற இவங்ககிட்ட தானே எங்களுக்கு கெட்டது நடந்தாலும் சொல்ல முடியும். திட்டவும் முடியும். அப்படித்தான் இன்னைக்கு திட்டிக்கிட்டிருக்கேன்”.
இப்படிப்பட்ட நெருக்கம்தான் பல கிராமங்களில் உள்ள பெண்களிடம் நிலவுகிறது. இதே ஈடுபாடுதான் அவர்களை நீண்ட நாள் விரதம் இருக்க வைக்கிறது. தன்னை வருத்திக் கொண்டு நாக்கில் அலகு குத்த வைக்கிறது.
புதுவைக்கு அருகில், நாங்கள் ஒரு கோவில் திருவிழாவிற்கு கேமரா குழுவினருடன் போயிருந்தபோது, இப்படி நாக்கின் ஊடாக அலகு குத்தப்படுவதை குளோசப்பில் கேமரா வழியாக பார்த்தபோது, அதிர்ச்சிகரமாக இருந்தது.
அதைப்போலவே முதுகில் உள்ள தோளில் இரும்புக் கொக்கிகளை மாட்டிக்கொண்டு மேலே உள்ள கம்புகளில் தொங்கிக்கொண்டு வரும் சடங்கு, உடம்பை மிகவும் வருத்திய நிலையில் நடக்கிறது.
அப்படிப்பட்ட நிகழ்வை நேரடியாக கேமரா வழியாகப் படம்பிடிக்க முயற்சித்தபோது அங்கிருந்தவர்கள், “தாராளமாக படம் பிடிங்க” என்றார்கள்.
எங்களுக்கு நேரெதிரே ஒருவரின் முதுகில் இரும்புக் கொக்கிக் குத்தப்பட்டு தோளின் உள்ளே புகுந்து அந்த வளையம் வெளிவந்தபோது, பரவிய ரத்தம் எங்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால், குத்தப்பட்ட நபர், அந்த அம்மனின் பெயரைச் சொல்லி, வலியை இயல்பாக தாங்கிக் கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த எங்களால் தான் தாங்க முடியவில்லை.
இதைவிட பயங்கரமானது என்றுதான் சொல்லவேண்டும்.
வடதமிழகத்தில் ஒரு கோவிலில் நள்ளிரவில் நடைபெற்ற ‘மயானக் கொள்ளை’ என்ற நிகழ்விற்கு எங்களை அழைத்திருந்தார்கள்.
நள்ளிரவு நேரம். சுற்றிலும் பெருந்திரளான கூட்டம்.
அதற்கிடையில், இடுப்பில் அரை ஆடையுடன் உடம்பில் முழுக்கத் திருநீறு பூசியபடி, நீண்ட வீச்சரிவாளுடன் ஆடியபடியே வந்தார் அந்தக் கோவில் பூசாரி.
சுற்றியுள்ளவர்கள் சாமி பேரைச் சொல்லிக் கத்தினார்கள். முன்னால், இருவருடைய பிடிகளுக்குள் பலமாக கத்தியபடி இருந்தது ஒரு பன்றி.
அந்தப் பன்றியைத் தூக்கி, அதன் கழுத்தின் கீழ்ப் பகுதியில் கத்தியால் கீறி பீச்சியடிக்கப்பட்ட ரத்தத்தை பூசாரி குடித்தபோது, அந்தக் காட்சியை படம்பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன் உள்ளிட்ட சிலருக்கு மயக்கம் வராத நிலை. அந்தளவுக்கு நெஞ்சை உலுக்கியது அந்தக் குருதி மயமான காட்சி.
இதைப்போலவே தீக்குழி இறங்கிய அனுபவத்தையும் தீச்சட்டியை ஏந்தியக் கைகளோடு இறங்கிய அனுபவத்தையும் நேரடியாகப் படம்பிடித்தபோது, நாம் தான் பதற வேண்டியிருந்தது.
வேப்பிலை ஏந்திய கையோடு அனல்விட்டு எரியும் தீச்சட்டியைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தவரை நெருங்கியபோது,
“இந்தாங்க சட்டியைத் தொட்டுப்பாருங்க” என்று என்னுடைய கையில் அந்த அக்னிச்சட்டி திணிக்கப்பட்ட ஒரு சில விநாடிகளுக்குள் அந்த அக்னிச் சூடு என் கையில் பரவி, “சட்டி சுட்டதடா, கை விட்டதடா” என்கிற டி.எம்.எஸ்ஸின் பாடலுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எதிர்வினை ஆற்றி முகத்தில் காட்டியிருந்த முகபாவத்தை நானும் கைகளுக்கு ஊடாக, சூடாக உணர முடிந்தது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கோவில் திருவிழாவின்போது, இதைவிட பதறவே வைத்துவிட்டது அங்கு பார்த்த இன்னொரு சடங்கு.
கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக மேலாடை அணியாத இளைஞர்கள் சிறு சங்கிலியால் பிணைக்கப்பட்ட கத்தியால் தங்களது முதுகில் அடித்தபடி ஊர்வலமாக வந்தபோது, அருகில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரத்தம் சிதறியடித்தது.
அதை நெருக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய சட்டையின் மீதும் அந்த ரத்தத் துளிகள் வந்து விழுந்தன.
இது ஒரு ரகம் என்றால், மதுரை மாவட்டத்திலுள்ள சேடப்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவிற்கு போயிருந்தேன்.
ஏற்கனவே தஞ்சை மாவட்டத்திலுள்ள சில கோவில்களில் வேண்டிக்கொண்டு பாடை கட்டிக் கொண்டு, (பாடைகட்டி திருவிழா) படுத்தபடி போவது ஒரு சடங்காக நிகழ்வதை பார்த்திருக்கிறேன் என்றாலும், இங்கு பார்த்த காட்சி, சடங்குமுறையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.
அந்தக் கோவிலின் எதிரே நீண்ட மணல் பரப்பில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டிருந்தன. ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கான குழிகள்.
இளம் சிறுவர்களை அந்தக் குழிகளுக்கு அருகில் அழைத்து வந்தார்கள். சட்டை இல்லாமல் நெற்றியில் குங்குமம் அணிந்தபடி வந்த அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களின் பின்னிருந்தார்கள்.
மேலச் சத்தம் பின்னணியில் கேட்க வரிசையாக அந்தச் சிறுவர்கள் குழிக்குள் இறக்கப்பட்டார்கள்.
இறக்கப்பட்டதும் அந்தக் குழிகளை பக்கத்தில் இருந்த மண்ணால் மூடினார்கள். சில நிமிடங்களுக்குள் அந்த சிறுவர்களை வெளியே எடுத்தார்கள். அப்படி எடுத்தபோது. சில குழந்தைகள் மயக்கமடைந்திருந்தன.
மூக்கைச் சுற்றி துணிக்கட்டியிருந்தாலும் கூட அந்த குழந்தைகள் மயக்கம் அடைவதும் நடந்து கொண்டிருந்ததை நேரடியாக பார்த்தபோது அந்தக் காட்சி கதிகலங்க வைப்பதாக இருந்தது.
கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக நடந்துவந்த இந்தச் சடங்கு ஊடகத்தின் வழியே வெளிவந்தபிறகு நிறுத்தப்பட்டிருப்பது ஒரு விதத்தில் ஆறுதலைத் தருகிறது.
மேலே தெரிவித்த பல காட்சிகளை தொலைக்காட்சி வழியே ஒளிபரப்ப முடியவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
– தொடரும்
- எழுத்தாளர் மணா