முத்துக்குமாரை எப்படி நினைவு கூர்கிறோம்?

2009 – ஜனவரி 29-ம் தேதி சென்னையின் மையப் பகுதியில், சாஸ்திரி பவனுக்கு முன்னால், சில முழக்கங்களை முன்வைத்தபடி ஈழம் குறித்த சில கோரிக்கைகள் அடங்கிய நகல்களை வீசி எறிந்துவிட்டு, தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு, பெரும் கனவுகளுடன் உயிரிழந்த முத்துக்குமார் மறைந்த நாள்.

சட்டென்று மறந்துவிட முடியுமா அந்த நாளை. எந்த உடலை ‘துருப்புச் சீட்’டாகப் பயன்படுத்தச் சொன்னாரோ அந்த உடல் சென்னை, கொளத்தூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்தபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். பல்வேறு இயக்கத் தலைவர்களும் நிறைந்திருந்தார்கள். 

மயானம் நோக்கிய அவரது இறுதி யாத்திரையில் ஏகப்பட்ட கூட்டம். முத்துக்குமாரின் உடல் பேசிய பேச்சுக்களை சாமானியமாக மறக்க முடியவில்லை.

அதுபோலவே முத்துக்குமார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த, ‘பெண்ணே நீ’ பத்திரிகையின் பொங்கல் மலருக்காக என்னிடம் கட்டுரைக் கேட்டுத் தொலைபேசியில் பேசினார் முத்துக்குமார்.

நான் அனுப்பியிருந்த அந்தக் கட்டுரை குறித்து சுருக்கமாக சில வார்த்தைகளைப் பேசிவிட்டு வாழ்த்துத் தெரிவித்த அந்தக் குரல் இன்னும் நினைவில் இருக்கிறது. தற்போது அவர் மறைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.

‘மொழிப்போர் தியாகிகள்’ குறித்து பேசிவருகிற நாம், ஈழத்தில் பெரும் இன அழிப்பு நடப்பதற்கு முன்பே, அது குறித்து எச்சரித்து தன்னுடலை எரித்துக் கொண்ட முத்துக்குமாரை நாம் எப்படி நினைவில் வைத்திருக்கிறோம்?

அவர் மறைந்தது சென்னை  நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ‘ஹாடோஸ்’ சாலையில். எப்போதோ ஆண்ட ஆங்கிலேயரின் பெயர், அந்தச் சாலைக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

அவர் தன்னை எரித்துக் கொண்ட வளாகத்திற்குப் பின்னிருப்பது ‘சாஸ்திரி பவன்’. 

மொழிப் போராட்டம் நடந்தபோது, அதுகுறித்த உத்தரவுகளைப் பிறப்பித்த பிரதமர் சாஸ்திரியின் பெயர் எதிரிலுள்ள கட்டடத்திற்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

அதேசமயம் தமிழினத்தின் துயரைத் தன்னுயிரைப் போலக் கருதி தீயிட்டுக் கொளுத்திக் கொண்ட, முத்துக்குமாரின் பெயர் அந்த சாலைக்கு சூட்டப்பட்டிருக்க வேண்டாமா?

யார் யாருடைய பெயர்களையோ சாலைகளுக்கும் கட்டடங்களுக்கும் சூட்டி நினைவுகூர்கிற நாம், முத்துக்குமாரின் பெயரை, அவர் தன் உயிரை விட்ட, கட்டடம் அமைந்திருக்கிற ‘ஹாடோஸ்’ சாலைக்கு சூட்டப்பட வேண்டும் என்பது, அவரை இன்றும் நேசிக்கிற தமிழ் உணர்வாளர்களின் எளிய கோரிக்கை.

அவரது நினைவு நாளையொட்டி (ஜனவரி – 29) இந்தக் கோரிக்கையை ஆட்சியாளர்களின் கவனத்திற்கும், தமிழ் அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டு செல்கிறோம்.

தமிழ் உணர்வை மட்டுமே உயிரினும் மேலானதாகக் கருதிய முத்துக்குமாரை எதாவது ஒரு செயல்வடிவில் நினைவில் கூர்வோம். 

  • மணா
Comments (0)
Add Comment