நடமாடும் நூலகர் ராதாமணியின் மகத்தான சேவை!

கேரள மாநிலம், வயநாட்டைச் சேர்ந்த 60 வயதான பெண் ராதாமணி அங்குள்ள கிராமத்துப் பொது நூலகத்தில் பணியாற்றியவர்.
 
கொஞ்சம் காட்டுப் பகுதியில் மலைப் பிரதேசத்தின் அருகே அமைந்துள்ள கிராமம் அது. அந்த நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள்.
 
ஆனால், பெயரளவுக்குத்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்களே தவிர, புத்தகங்களைப் படிப்பதற்கு அந்த நூலகத்துக்கு எவரும் வருவதே இல்லை. காரணம், பணி நெருக்கடிகள், பல்வேறு குடும்பச் சூழ்நிலைகள்!
 
அப்போதுதான் அந்த நூலகத்தில் பணி செய்து வந்த ராதாமணிக்கு அந்த வித்தியாசமான யோசனை தோன்றியது.
 
நடமாடும் நூலகம்.
 
ஆம். தானே ஒரு நடமாடும் நூலகமாக மாற முடிவு செய்தார்.
 
அடுத்த நாளே ராதாமணி, தான் பணி செய்த நூலகத்திலிருந்து தேடித்தேடி ஒரு சில புத்தகங்களைத் தேர்வு செய்தார். கையில் ஒரு கட்டை பை. அதில் கட்டுக்கட்டாய் விதம் விதமான புத்தகங்கள்.
 
பொதுமக்களின் வீடுகளைத் தேடி தினம்தோறும் நான்கு கிலோமீட்டர் தூரம், ஆள் நடமாட்டம் கூட இல்லாத காட்டுவழியில் நடந்தே செல்ல ஆரம்பித்தார்.
 
அந்த ஊரிலுள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பிய புத்தகங்களை வீடு தேடிச் சென்று கொடுக்க ஆரம்பித்தார் இந்த ராதாமணி.
 
இதற்குக் கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே. வாங்கிய புத்தகங்களைப் படித்துவிட்டு ஒரு வாரத்துக்குள் திரும்பக் கொடுத்துவிட வேண்டும்.
 
எல்லா பெண்களுமே ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்கள். நாளுக்கு நாள் நடமாடும் நூலகரான ராதாமணியின் வாசகர்கள் எண்ணிக்கைக் கூடியது. ராதாமணியின் ஆர்வமும் கூடியது.
 
அந்தப் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கும் இந்தப் புத்தகங்களை படிக்கக் கொடுத்தார் ராதாமணி.
 
பழங்குடியின குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. ஏனெனில் அவர்கள் வாழ்நாளில் இப்படிப்பட்ட புத்தகங்களைப் பார்த்ததே இல்லை.
 
ராதாமணியின் பள்ளிப் படிப்பு என்னவோ, பத்தாம் வகுப்பு வரையில்தான். அவரது கணவர் ஒரு சிறிய கடை வைத்திருக்கிறார். மகன் ஆட்டோ ஓட்டுகிறார். 
 
சுமார் பத்து வருடங்களாக தன்னந்தனி ஆளாக கட்டைப் பையை கையில் தூக்கிக்கொண்டு, காடு மேடு என்று பார்க்காமல் அலுக்காமல் சலிக்காமல், இங்கே உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று, வீடுவீடாக புத்தகங்களோடு புன்னகையையும் சேர்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ராதாமணி.
 
இவரது இந்த மகத்தான சேவையை அறிந்த அனைவரும் அவரை மனதாரப் பாராட்டுகிறார்கள்.
 
ஆனால், ராதாமணியோ, “இல்லைங்க சார், நான்தான் எங்கள் நூலக உறுப்பினர்களை பாராட்ட வேண்டும். அவர்கள்தான், நான் கொடுக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து முடித்துவிட்டு, இதுவரை நான் கேள்விப்பட்டே இருக்காத பல புதிய புத்தகங்களின் பெயர்களை வாங்கித் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்.
 
நானும் எங்கள் லைப்ரரி மூலமாக அந்தப் புத்தகங்களை வாங்கி விடுகிறேன். சொல்லப்போனால் முதல் ஆளாக அவற்றை படித்தும் விடுகிறேன்.
 
ஏனென்றால் சின்ன வயதில் இருந்தே எதையாவது படிப்பது என்றால், எனக்கு எக்கச்சக்க ஆர்வம்.
 
எந்தப் புத்தகம் அல்லது எந்தக் காகிதம் என் கையில் கிடைத்தாலும், அதை படித்து முடித்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பேன்.
 
படிப்பதில் இவ்வளவு ஆர்வம் உள்ள எனக்கு, இதுவரை நான் கேள்விப்பட்டிராத புதிய புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு, இப்படி ஒரு அருமையான வாய்ப்பு எங்கள் நூலக உறுப்பினர்கள் மூலமாகத்தானே கிடைக்கிறது?”
 
இப்போது இந்த நூலக உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வீடு தேடி தினமும் வரும் ராதாமணியை, அவர்களது குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவராகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
 
சிரித்துக்கொண்டே ராதாமணி தொடர்ந்து சொல்கிறார்.
 
“நாம் எதை இந்த உலகத்திற்குக் கொடுக்கிறோமோ, அது நமக்கு நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும்.
 
நான் இந்த மக்களுக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் இந்தப் புத்தகங்கள் மூலமாகக் கொடுக்கிறேன். அவர்களும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டு பலமடங்கு பாசத்தையும் மனநிறைவையும் எனக்கு திரும்பக் கொடுக்கிறார்கள்.”
 
ஆம். ராதாமணி சொல்வது உண்மைதான்.
 
நாம் எதை இந்த உலகத்திற்குக் கொடுக்கிறோமோ, அது நமக்கு நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும்.
 
வாழ்க நடமாடும் நூலகர் ராதாமணியின் சேவை. வளரட்டும் இந்த உலகத்தில் நல்ல உள்ளங்களின் நற்பணிகள்!
 
– ஐான் துரை அசிர் செல்லையா (John Durai Asir Chelliah)
 
Images: the better india
Comments (0)
Add Comment