ரூ. 500 கோடி செலவில் ஜனநாயகன் திரைப்படம் எடுத்துள்ளார்களாம். தன் கடைசி படத்தின் மூலம் தன் அரசியலையும் வெளிப்படுத்தியுள்ள விஜய்க்கு மத்திய அரசின் தணிக்கை துறையால் சோதனை.
சோதனையை எதிர்கொள்வதில் தான் சாதனை வெளிப்படும். தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை மண்ணாக்கிக் கொண்டிருக்கும் விஜய் குறித்து ஒரு அலசல்;
திரைப்படத்தின் வழியே அரசியல் பேச நினைத்தால் ஆள்பவர்கள் அதை லேசில் அனுமதிக்கமாட்டார்கள்.
எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வந்தபோது அவர் எத்தனை மிரட்டல்களை சந்தித்தார், வன்முறைகளை எதிர்கொண்டார். அதை மீறி எப்படிக் களம் கண்டு திரைப்படத்தை வெளியிட்டார் என்பது வரலாறு.
அப்படி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது தான் அவர் நிழல் நாயகன் மட்டுமல்ல. நிஜ நாயகனும் கூட என மக்கள் நம்பத் தொடங்கினர்.
தற்போது ஜனநாயகனை ஏன் தடுத்தார்களாம்?
இந்துக்கள் மனதைப் புண்படுத்தும்படி படம் எடுத்திருப்பதாக புகாராம்…!
தணிக்கை துறை அவ்விதம் சொல்லவில்லையே? 50க்கும் மேற்பட்ட இடங்களில் அரசியல் ரீதியான வசனங்களை நீக்கினார்கள். பிரச்சினைக்குரியதென்று சில காட்சிகளை Blaked out செய்தார்கள்.
மேலும் திருத்தம் சொன்னார்கள். அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. பிறகு யார் புகார் தந்தார்கள்? படமே வெளிவராத நிலையில் எப்படி புகார் வந்தது?
அரசியலுக்கு வரும் நான் எப்படி அவ்விதம் எடுப்பேன்? எனக் கேட்க வேண்டாமா விஜய்?
“அதிக இந்துக்கள் என்னை நேசிக்கிறார்கள். ஓட்டு போட காத்திருக்கிறார்கள். நான் எப்படி இந்துக்களின் மனதைப் புண்படுத்தும்படி திரைப்படம் எடுப்பேன், நடிப்பேன்.
பாஜக மத ரீதியாக என்னை ஒடுக்கப் பார்க்கிறது. நான் அனைவருக்குமானவன்” என விஜய் பேசி இருந்தால் அதன் விளைவாக அவருக்கு ஆதரவு பெருகி இருக்கும்.
திரை பிம்பம் மட்டுமே தன்னைக் காப்பாற்றி கரை சேர்க்கும் என விஜய் நம்புகிறார் போலும்.
திரைப்படங்களில் பாதிக்கப்படும் மக்களுக்காக வந்து முதல் குரல் கொடுப்பவர்! எத்தனை பெரிய அரசியல் வில்லன்களையும் வீழ்த்தும் வல்லமை பெற்றவர்.
அதன் மூலம் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தவர் விஜய்! என்பதெல்லாம் அவர் அரசியலுக்கு வருவதற்கான ராஜபாட்டையை உருவாக்கி தந்திருக்கிறது என்னவோ உண்மை தான்.
ஆனால், அதுவே விஜய்யை அரியசனத்தில் அமர வைக்க போதுமானதில்லை. இதை அவர் உணராத வரை அவருக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை.
இப்படியாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் விஜய் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
‘தலைவா’ என்ற ஒரு படம் ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது எடுத்தார். தலைவா தலைப்பினூடே ‘டைம் டூ லீட்’ என்ற வாசகம் வைக்கப்பட்டது.
இதை அறிந்த ஜெயலலிதா அந்தப் படம் வெளியாகவிடாமல் தடுத்தார்.
ஜெயலலிதாவின் விருப்பமின்மையை மீறி படத்தை வெளியிட்டால் என்ன விளைவுகளை சந்திக்க நேருமோ…? என்ற அச்சத்தில் தியேட்டர் முதலாளிகள் பின் வாங்கிவிட்டனர்.
மற்ற மாநிலங்களில் வெளியான தலைவா தமிழகத்தில் மட்டும் வெளியாகாத நிலை உருவானது.
அப்போதும் இப்படித்தான் அந்த சவாலை எதிர்கொள்ள முடியாமல் அமைதி காத்து ஜெயலலிதாவை சந்திக்க கொட நாடுக்கு தந்தையுடன் சென்று அப்பாயிண்ட்மெண்ட்க்காக காத்திருந்தார் விஜய்.
கடைசி வரை அவரால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. ஆனால், அவருக்கு டைம் டூ லீட் என்ற வாசகத்தை நீக்கும்படி கட்டளை வந்தது. அந்த கட்டளைக்கு பணிந்து அதை நீக்கினார். படம் திரையிட அனுமதிக்கப்பட்டது.
விஜய் என்ன செய்திருக்க வேண்டும்? ஜெயலலிதாவின் அதிகார அழுத்ததை அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். டைம் டூ லீட் என்ற வாசகத்திற்கு ஏற்ப ஜெயலலிதாவின் அதிகாரத்தோடு மோதி தன் தலைமைத்துவத்தை காட்டி இருக்க வேண்டும்.
விஜய் கட்டளையிட்டால் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்த தயாராக இருந்தனர்.
அவர்களைத் திரட்டி களம் இறங்கி ஜனநாயக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளில் ஜெயலலிதவின் அரசியல் உள்நோக்கத்தை சொல்லி மக்களிடம் நியாயம் கேட்டிருக்க வேண்டும்.
அழுத குழந்தைக்கு தான் பால் கிடைக்கும் என்பார்கள். அடித்தால் கூட அழத் தெரியாமல் அடங்கி ஒடுங்கிப் போனால் எப்படி விஜய் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
கரூரில் ரோடு ஷோ நடத்தச் செல்கிறார். சென்ற இடத்தில் விபரீதம் நேர்கிறது. 41 பேர் மடிகின்றனர்.
எப்படி நடந்தது? ஏன் நடந்தது? நடந்த நேரத்தில் அதை எவ்வாறு எதிர்கொண்டு இருக்க வேண்டும்? என்ற சுய பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி அதை வெளிப்படுத்தி இருந்தால் அவன் தான் தலைவன்.
ஒரு இக்கட்டான நேரத்தில் மக்களைக் காப்பாற்றவும், மருத்துவமனையில் சேர்க்கவும் உதவி இருக்கலாம். எதையும் செய்யவில்லையே.
அவ்வளவு பெரிய வாகனத்தில் வந்த விஜய் தன்னுடைய ரசிகர்களை வைத்து பாதிக்கப்பட்ட மக்களை அள்ளிக் கொண்டு நல்ல தனியார் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை தந்திருந்தால் சிலராவது பிழைத்து இருப்பார்களே.
தன் கட்சி நிர்வாகிகளை பாதிக்கப்பட்டவர்களின் உடனிருந்து சிகிச்சைக்கு உதவ கட்டளை தந்திருக்கலாமே. அந்த சோதனைக்களம் என்பது விஜய்யின் தலைமைப் பண்பை நீரூபித்து காட்ட கிடைத்த ஒரு அரிய வாய்ப்பல்லவா?
தற்போதும் கூட விஜய் அரசியலுக்காகத் தான் ஜனநாயகன் படம் தடுக்கப்பட்டு இருக்கிறது என்பதும், அதை செய்தது பாஜக என்றும் சிறு குழந்தைக்கு கூடத் தெரியும்.
த.வெ.க வளர்ச்சியை பாஜக தடுக்கிறது. அழுத்துகிறது. என்னை எழுந்து கொள்ளவிடாமல் செய்கிறது என்ற உண்மையை பொதுவெளியில் போட்டு உடைத்து களம் கண்டு விஜய் மாஸ் காட்டினால் பாஜக அரசு பின் வாங்கி இருக்கும்.
தேர்தல் நேரத்தில் மக்களிடம், குறிப்பாக விஜய் ரசிகர்களிடம் கெட்ட பெயர் வாங்குவது தங்கள் வாக்கு வங்கியையும் பாதிக்கும் என அவர்கள் யோசித்திருப்பார்கள்.
அவர்களை அப்படி எண்ண வைப்பது தானே விஜய்யின் வெற்றியாக இருக்க முடியும்?
பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கி என்பது தமிழகத்தில் கணிசமாக உள்ளது. அந்த வாக்கு வங்கியை அப்படியே தன் பக்கம் திருப்ப விஜய்க்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு தான் இந்த ஜன நாயகனுக்கான தடை.
உண்மையில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தங்களுக்கான பாஜக எதிர்ப்பு வக்கு வங்கி விஜய்க்கு இந்த பிரச்சினையால் திசைமாறிவிடக் கூடாதே என்று தான் பதைபதைத்தனர்.
இந்த வாய்ப்பு ‘வாராது வந்த வரப்பிரசாதம்’ என்பதைக் கூட உணர முடியாதவராக விஜய் இருக்கிறார் என்பதே பரிதாபத்திற்குரியதாகும்.
ஜனநாயகன் படத்தை வெளியிட்டு அதன் மூலம் அவர் பெற நினைத்த வாக்கு வங்கியைவிட படத்தை தடுப்பதன் மூலம் தனக்கான வாக்கு வங்கியை தாறுமாறாக அவர் அதிகரிக்க செய்திருக்க முடியும்.
விஜய்யின் அனுபவமின்மை இந்த பொன்னான வாய்ப்பை புரிந்து கொள்ளும் மனநிலையைக் கூட அவருக்கு தரவில்லை.
500 கோடி முதலீடு, அதை வைத்து 500 கோடி லாபம் பார்ப்பதே முதல் இலக்கு. ஆகவே முள்ளில் விழுந்த சேலையை பக்குவமாக எடுக்கலாம் என வியாபாரியின் மனம் சிந்திக்கும். ஆனால், அரசியல் தலைவன், மக்கள் தலைவன் அப்படி யோசிக்க கூடாது.
விஜய் ஆர்பரித்து களம் கண்டால் 500 கோடிகள் என்ன? 5,000 கோடிகள் செலவழித்தாலும் கிடைக்காத மக்கள் ஆதரவை இந்தப் போராட்டக் களமும், இழப்புகளை ஏற்கத் துணிந்த அவரது அஞ்சாமையும் பெற்றுத் தந்திருக்கும்.
நிஜ வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது அதை எதிர்கொண்டு எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே நிஜ நாயகனாக மக்கள் மனதில் இடம் பெற முடியும். இல்லை என்னால் முடியாது என்றால் நிழல் நாயகனாகவே இருந்து மக்களை மகிழ்ச்சிபடுத்திவிட்டு போங்கள்.
உங்க பிரச்சினையையே உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் ஆட்சிக்கு வந்து மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்?
– சாவித்திரி கண்ணன், ‘அறம்’ இதழின் ஆசிரியர்.