பாலசந்தர் கண்கலங்கிய தருணம்!

கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு – 4

தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ என்று அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்களை நான் முதலில் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது.

அப்போது பெரும் சிக்கலான மனநிலையில் இருந்தார் பாலசந்தர்.

பிரபல நடிகரின் தந்தை, பாலசந்தரைப் பற்றி மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்த செய்திகள் அப்போது மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

மகனின் படம் ஒன்றை ‘பைரசி’ முறையில், பாலசந்தர் எடுத்துவெளியிட்டதாக கடுமையான புகார் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

மீடியாவில், அந்தப் பிரச்சனை பெரியளவுக்குப் பேசப்பட்டாலும், திரை உலகத்தினர் மத்தியில், சலசலப்பை ஏற்படுத்தினாலும் கூட, இயக்குநர் பாலசந்தர் தரப்பில் அந்தப் புகாருக்கான பதில் வரவில்லை.

அப்போது, குமுதம் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நண்பர் சுதாங்கனும் பாலசந்தரின் மகன் கைலாசமும் தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

சென்னையில், குறிப்பிட்ட இடத்திற்கு பாலசந்தரைச் சந்திக்க வரச் சொன்னார்கள். 

சென்னை புறநகர் பகுதியில் தனித்து இருந்த பங்களாவின் மாடியிலிருந்தார் பாலசந்தர்.

கைலாசம் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால், “அப்பாவிடம் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். அவர் மனம் திறந்து பேச விரும்புகிறார். நாங்கள் உங்களை மேலே விட்டுவிட்டு வந்துவிடுகிறோம். நீங்கள் அப்பாவிடம் பேசிக் கொள்ளுங்கள்” என்று சொன்னபடி,

மாடியிலிருந்த பெரிய அறைக்கு அழைத்துச் சென்று, அங்கே அமர்ந்ததும் பாலசந்தரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, அவர்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள்.

அந்த மாடி அறையில், சற்று நேரம் கனத்த மவுனம் நிலவியது. 

சுழல் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த பாலசந்தரின் முகம் மிகவும் உணர்வு வயப்பட்டதை வெளிப்படுத்தியது.

நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மிகவும் பதற்றத்துடன் பேச ஆரம்பித்தார்.

“இதுவரை திரையுலகில் நான் சம்பாதித்து வைத்திருந்த பேரை எல்லாம், தற்போது என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு கீழிறக்கியதைப் போலிருக்கிறது.

ஆனால், இதுவரையிலும் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் இருந்த நான், இப்போது, பதிலளிக்க விரும்புகிறேன். அதற்காக தான் உங்களை இங்கு வரச்சொன்னேன். பேசலாமா?” என்றவர் சுமார் 2 மணி நேரம் பேசினார். 

எதிரே அமர்ந்திருந்த நான் சின்ன டேப் ரிக்கார்டருடன் அவ்வப்போது சிறு சிறு கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு, அமைதியாக அவரின் பதற்றம் பரவிய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 

தன்னுடைய தரப்பு விளக்கத்தை மிகவும் வலிமையான, அதேசமயம் மிகைப்படுத்தாத சொற்களின் மூலம் வெளிப்படுத்தினார்.

பேச்சிற்கிடையே, சற்று நேரம் அமைதியாக இருந்தபடி அவர் கண்கலங்கியதைப் பார்த்தபோது சங்கடமாக இருந்தது.

எந்த வார்த்தையைச் சொல்லி, அவரை ஆறுதல்படுத்துவது என்று தெரியவில்லை. 

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு, “இதுக்கு என்ன தலைப்பு வைச்சுக்கலாம் சார்..” என்று கேட்டார், அதே பதற்றத்துடன்.

“நீங்களே சொல்லுங்க சார்” என்று நான் சொன்னபோது, அவர் சொன்ன பதில், 

“இதைவிட நான் ஹார்ட் அட்டாக்கில் போயிருக்கலாம்னு… தலைப்பு போட்ருங்க சார்” 

“இதையா தலைப்பா போடச் சொல்றீங்க?” என்று கேட்டபோது

“இதையே தலைப்பா போடுங்க சார்… இதுதான் பொருத்தமா இருக்கும்” என்று சொல்லிவிட்டு எழுந்தவர் எனது கைகளைப் பற்றிக் கொண்டார்.

“நான் என் மனசில் இருந்ததையெல்லாம் கொட்டியிருக்கேன். நீங்க கவனமா தொகுத்து எழுதுவீங்கன்னு நம்புறேன், பார்ப்போம்” என்று சொன்னபடி விடை கொடுத்தார்.

அடுத்த சில தினங்களுக்கு பின் குமுதம் இதழில் கவர் ஸ்டோரியாக அந்தச் சந்திப்பு வெளிவந்திருந்தது.

இதழ் வெளிவந்த அன்று காலை நேரத்தில் எனது வீட்டுத் தொலைபேசியில் அழைத்திருந்தார் பாலசந்தர்.

“அன்னைக்கு நான் பேசினதை மிகவும் சரியா கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே என் உணர்ச்சியைக் காட்டுறபடி வெளியிட்டிருக்கீங்க. இதுக்கு நான் உங்களுக்கும் நன்றி தெரிவிக்கணும். உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய கைலாசத்திற்கும் நன்றியைத் தெரிவிக்கணும்.

அவன் மூலமா எனக்கு ஒரு நல்ல பிரெண்ட் கிடைச்சமாதிரி இருக்கு. இப்ப நான் நேர நம்ம முதலமைச்சர் கலைஞரைப் பார்க்கப் போறேன். அப்ப இந்தக் கட்டுரையை அவர்கிட்ட காமிச்சா போதும், இதுக்குமேல நான் சொல்றதுக்கு எதுவுமே இல்லை”.

மீண்டும் நன்றி சொன்னார் பாலசந்தர்.

அதன்பிறகு சென்னையில் அவருடைய வீட்டில் பலமுறை சந்தித்திருக்கிறேன். எதிர்நீச்சல் என்கின்ற தலைப்பில், அப்போது நாங்கள் தொடரை ஆரம்பித்தபோது, முதலில் நான் பேட்டி எடுத்தது கே.பாலசந்தரிடம்தான்.

தன்னுடைய ஊரிலிருந்து கிளம்பி வந்து தேனாம்பேட்டையில் உள்ள ஏஜிஎஸ் ஆபிசில் பணியாற்றியபடி நாடகங்கள் போட ஆரம்பித்து, மிகவும் சிரமப்பட்ட நிலையில், தமிழ்த் திரைப்பட உலகிற்குள் நுழைவதற்குள் தான் பட்ட பாட்டை லாவகமான மொழியில், சற்றே கிண்டல் கலந்த தொனியில் சொல்லிக் கொண்டு வந்தார்.

பிரபல நடிகர் ஒருவரின் பெயரைச் சொல்லி, “அவரிடம் ஒரு சினிமாவிற்கான கதையை நான் சொல்லப் போனபோது அவர், விமான நிலையத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.

என்னையும் காரில் ஏறச் சொன்னார். காரும் நகர்ந்தபோதே என்னை கதை சொல்லச் சொன்னார். நானும் சொல்ல ஆரம்பித்தேன். அவர் நான் சொன்ன கதையை சரிவர கவனிக்கிறாரா? என்று கூட எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட முக பாவத்துடன் இருந்தார் அந்த நடிகர்.

கதையை நான் முழுக்கச் சொல்லி முடிப்பதற்குள் விமான நிலையம் வந்துவிட்டது. 

என்னை கீழிறக்கிவிட்டுவிட்டு அவர் விமான நிலையத்திற்குள் போய்விட்டார். கதை சொல்லப் போன நான், கூனிக்குறுகிப் போன மாதிரி உணர்ந்தேன். 

என்னை அப்போது அலட்சியப்படுத்திய இதே நடிகரை வைத்து, பல படங்களை இயக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்ய, அதன்படியே நான் திரை உலகிற்குள் புகுந்து இயக்குநராகி, அதே நடிகரை வைத்து பல படங்களை இயக்கினேன். 

காலம் எப்படியெல்லாம் எனக்கு கை கொடுத்திருக்கிறது பாருங்கள்.

என்ன அவமானங்களைச் சந்தித்தாலும், தன் உழைப்பின்மீது தீவிர நம்பிக்கை ஒருவன் வைத்திருந்தால், அவன் எப்படியாவது எந்தவிதமான கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல், கண்டிப்பாக முன்னேறியே தீருவான். 

இதுதான் வாழ்க்கை என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது ‘எதிர்நீச்சல்’.

இதே தலைப்பில் தான் நான் நாகேஷை ஹீரோவாக போட்டு, ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கினேன். 

அந்தப் படத்தில் ஒரு பாட்டு வரும், ‘வெற்றி வேண்டுமா? போட்டு பாரடா எதிர்நீச்சல்’ என்கிற அந்த வரி எனக்கு மட்டுமல்ல, தன்னுடைய உழைப்பை தீவிரமாக நம்புகிற எவருக்குமே பொருந்தும்” என்று சொன்னபடி லேசான புன்னகையுடன் அந்தப் பேட்டியை நிறைவு செய்தார் பாலசந்தர்.

மறுமுறை அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தபோது, வீட்டிலிருந்த நூலகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தபோது, அவற்றிற்கு இடையே வைத்திருந்த சில புத்தகங்களைச் சுட்டிக்காட்டி, “உங்க புத்தகங்களையும் இங்கே அடுக்கி வைச்சிருக்கேன் பாருங்க” என்று சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.

“எம்.ஆர்.ராதா பத்தி நீங்க ஒரு புத்தகம் எழுதி வெளிவந்ததாகக் கேள்விப்பட்டேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஆர்.ராதா. ஊரிலிருந்தபோது, அவர் நடத்திய நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.

மிகவும் ஷார்ஃப்பாக இருக்கும் அவருடைய நாடகத்தின் வசனங்கள். கடுமையான எதிர்ப்புக்கு இடையிலும், தன்னுடைய நாடகங்களையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய கலைஞர். அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்புறீங்களா” என்று அவர் கேட்டதும், மறுநாளே அவருக்கு “எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்” என்ற அந்தப் புத்தகத்தை அனுப்பி வைத்தேன்.

இரண்டு நாட்கள் கழிந்ததும் என்னுடைய அலுவலக முகவரிக்கு அவரிடமிருந்து கடிதம் வந்திருந்தது. அவரே கைப்பட எழுதியிருந்தார். அந்த நூலைப் பற்றியும் ராதாவைப் பற்றியும் பெருமையுடன் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு புத்தகத்தை அனுப்பியதும் அதை உடனடியாக வாசித்துவிட்டு கடிதம் மூலமாக அவர் எதிர்வினை ஆற்றிய விதம் பிடித்திருந்தது. 

தான் செய்யும் வேலையில், அவர் காட்டும் அளவுகடந்த ஈடுபாடு எப்பவுமே வியப்பை ஏற்படுத்துகிறபடி இருக்கும். இதைப் பல சந்தர்ப்பங்களில், அவர் அருகிலிருந்தபோது உணர்ந்திருக்கிறேன். 

விஜய் டிவிக்காக ‘கமல் 50’ என்கிற தொடருக்காக நான் பணியாற்றியபோது, கேமரா குழுவினருடன் அவரது வீட்டிற்குப் போயிருந்தேன். 

வீட்டிலிருந்த அவருடைய அறையில், ஒரு பெரிய மேஜைக்குப் பின்னால், ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே அவரது முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் விழுகிறபடி ஒரு ஃபோக்கஸ் லைட்டை வைத்திருந்தார்.

தனக்கு எதிரே கேமராவை எந்தக் கோணத்தில் வைக்க வேண்டும் என்பதை எந்தளவுக்கு தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையெல்லாம், துல்லியமாகச் சொன்ன அவர், தனக்கு எதிரே கமலைப் பற்றி தான் கொடுக்கவிருந்த பேட்டிக்கான குறிப்புகளையும் முன்னால், தயாராக வைத்திருந்தார். 

அதையெல்லாம், எதிரே இருந்து கவனித்துக் கொண்டிருந்த நான், “இந்தளவுக்கு பெர்பெக்ஃஷன் வேணுமா சார்” என்று கேட்டபோது, மெல்லிய சிரிப்புடன் பாலசந்தர் சொன்ன பதில்,

“இப்படி ஒரு பெர்பெஃக்ஷன் இல்லையென்றால் பாலசந்தரும் இல்லை”.

– மணா

Comments (0)
Add Comment