என்னைப் பொறுத்தவரை 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தித் திணிப்பின் இரண்டாவது கட்டம் மொழித்திணிப்பின் மூன்றாவது கட்டம் என்றுதான் சொல்வேன்.
ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சமஸ்கிருத மொழி தமிழை ஆக்கிரமித்தது. அப்போது இருந்த தமிழறிஞர்கள் தமிழுக்காகப் போராடி வென்றார்கள்.
ஆனால், 1965-ம் ஆண்டு நடந்த போராட்டம்தான் தமிழ் மொழியின் மீதான தீவிரத்தை வெளிப்படுத்தியது.
1938-ல் நடந்த போராட்டம் என்பது ஆட்சி மொழிப் பிரச்சினையில்லை, காரணம் அப்போது ஆங்கிலேயன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது,1935-ம் ஆண்டுச் சட்டம் அமலில் இருந்தது.
இந்த நிலையில், 1936-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட எட்டு மாகாணங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ராஜாஜி முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.
1937-ல் இந்தியைப் பாட மொழியாக அறிவித்து, அதை 1938-ல் நடைமுறைப்படுத்தவும் செய்கிறார். அப்போது தமிழ் மக்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். அதில் வெற்றியும் பெற்றனர்.
1939-ல் உலகப் போர் நடைபெற்றபோது காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்து, கைமாறாக விடுதலையைக் கோரலாம் என முடிவு செய்திருந்தது.
ஆனால், நடந்தது வேறு. காங்கிரஸின் எதிர்ப்பார்ப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை ஆங்கில அரசு.
எட்டு மாகாணங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸை அழைத்து பேசவில்லை. அதனால் கோபமுற்ற காங்கிரஸ் ஆங்கில அரசிடமிருந்து கூட்டணியை வாபஸ் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில்தான் 1950-ல் எதற்கும் தகுதியில்லாத இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும் அதோடு ஆங்கிலமும் துணை ஆட்சிமொழியாக இருக்கும் என்று சட்டம் கொண்டுவரப்படுகிறது.
அதன்பின்பு 1963-ல் ஆட்சி மொழிகளின் சட்டம் அமலுக்கு வருகிறது. அதில் ஆங்கிலம் துணை மொழியாக இன்னும் சில காலம் நீடிக்கலாம் என்று அறிவிக்கின்றனர்.
அன்றைக்கு பிரதமராக இருந்த நேரு அவர்கள் இந்தி பேசத் தெரியாதவர். எனவே ஆங்கிலம் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக இருக்கும் என்றும், ஆங்கிலத்தை சட்டத்திலிருந்து நீக்கும் உரிமை, இந்தி பேசுகிறவர்களுக்கு இல்லை, இந்தி தவிர பிற மொழி பேசுகிறவர்கள் வேண்டும் என்றால் ஆங்கிலத்தை துணை ஆட்சி மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளட்டும் என்று அறிவித்தார்.
அப்போதுதான் அண்ணா அவர்கள், இந்தியை எதிர்த்து முன்பு நடந்த போராட்டத்தைவிட பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.
அதில் முக்கியமான இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒன்று அரசமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவைக் கொளுத்துவது. மற்றொன்று மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் கலைஞரின் பங்கெடுப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
1938-ல் நடந்த போராட்டத்தின் காரணமாக எங்களைப் போன்ற இளைஞர்கள் மத்தியில் கனன்று கொண்டிருந்த தீ 1965-ல் மீண்டும் இந்தித் திணிக்கப்பட்டபோது, பெரும் தணலாக வெடித்தது.
1962-ல் நான், சட்டக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தேன், முதன்முதலில் இசைக் கல்லூரியில் பேச்சுப் போட்டியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்துகொண்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் கட்சி வேறுபாடு இல்லாது, தமிழ் உணர்வால் ஒன்றிணைந்திருந்தனர்.
எனவே மாணவர்களுடைய உணர்வுபூர்வமான தமிழார்வத்தின் மீதான நம்பிக்கையினால் இந்தியை எதிர்த்துவிடலாம் என முடிவு செய்து, 1963-ம் ஆண்டு ராஜாஜி, அண்ணா, அப்துல் சமீது போன்றோரையெல்லாம் அழைத்து ஆட்சி மொழிக் கருத்தரங்கம் நடத்தினேன்.
அதன்பிறகு இப்போது (திமுக) கட்சியிலே முன்னணித் தலைவர்களாக இருக்கின்றவர்களெல்லாம் அப்போது மாணவர்களாக இருந்த சமயம். அவர்களை விடுதிகளிலும் கல்லூரிகளிலும் சந்தித்துப் போராட்டத்தைப் பற்றி பேசி ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தேன்.
ஒருங்கிணைந்த மாணவர்களைக் கொண்டு ‘இந்தி ஆதிக்க எதிர்ப்பு வல்லாண்மைக் குழு’வை உருவாக்கினேன். அதற்குத் தலைவராக மாநிலக் கல்லூரி மாணவரான எம்.எம்.ராஜனும் செயலாளராக சட்டக்கல்லூரி மாணவர் ரவிச்சந்திரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாணவர்களின் உணர்வுக் கொந்தளிப்பினால் போராட்டம் திடீரென எரிமலையாக வெடிக்கத் தொடங்கியது.
அதற்கு பெரியார், அண்ணா போன்றோரின் பேச்சாற்றலும் இன்னொரு காரணம் எனலாம். போராட்டத்தைக் கட்டுப்படுத்த பக்தவச்சலம் அரசால் முடியவில்லை. எனவே, ஆந்திரா, கேரளா, கர்நாடக போலிசாரின் உதவியை நாடியது.
அப்போதும் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் இராணுவத்தை அழைக்கிறார் பக்தவச்சலம்.
இராணுவ நடவடிக்கையினால் பலபேர் கொல்லப்படுகிற நிலை ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர். உலகத்தில் நாட்டுக்காக, இனத்திற்காக போராடி உயிர் துறந்திருக்கிறார்கள்.
ஆனால், மொழிக்காகப் போராடியது தமிழர்கள் மட்டும்தான். அந்தப் போராட்டம் என்பது கலைஞர் சொன்னதுபோல் அது மொழிப்புரட்சியாகத்தான் இருந்தது.
போராட்ட காலத்தில் மாணவர்களைப் பொது இடங்களில் சந்திப்பதென்பது முடியாதென்பதால் மக்கள் அதிகமாகப் புழங்கும் கோயில், பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் கல்லூரி மாணவர்த் தலைவர்களை மட்டும் அழைத்துப் பேசுவது வழக்கம்.
மாணவர்களின் போராட்ட எண்ணங்களைப் பார்த்து அண்ணா வியந்து போனார். என்னை அழைத்து ஒருமுறை பேசினார், ‘மாணவர்களுடைய எழுச்சி தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இதுபோதும்.
இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி சில தீய சக்திகள் அவர்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டால் பாதிப்பு உங்களுக்குத்தான். எனவே உங்களுடைய எதிர்காலத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள் இனிமேல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்றார்.
நான் சொல்ல நினைத்த அனைத்தையும் அவரே பேசியும் முடித்துவிட்டார்.
போராட்டத்தின் காரணமாக காங்கிரஸ் வீழ்ந்தது. அடுத்து அண்ணா ஆட்சிக்கு வந்தார். அப்போது ‘தமிழகத்தில் இனி இந்திக்கு இடமில்லை, தாய் மொழி தமிழ் எங்களுக்கு ஆட்சி மொழி, வெளியுலகத் தொடர்புக்கு ஆங்கிலம் இருக்கட்டும்’ என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால், அந்த நேரத்தில் மத்திய அரசு ஒரு தந்திர வேலை செய்தது. அதாவது மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றிக்கொண்டது. அதை எதிர்த்துப் போராடும் வலிமை நம்மிடம் இல்லாமல் போனது. விளைவு மாநிலம் முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அதேபோல் நமக்கு ஆங்கிலம் வந்தது பெரும் கேடு என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல நன்மைகள் நமக்கு வாய்த்திருக்கின்றன.
நாங்கள் மாணவர்களாக இருந்தபோது இருந்த மொழிப் பற்று இப்போது இல்லை என்பது உண்மைதான்.
காரணம் உலகமயமாதல் காரணமாக தங்களைக் காத்துக்கொள்ளவேண்டிய சூழலில் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலையின் காரணமாகவும்தான் மாணவர்களுக்கு மொழியின் மீதான பற்று குறைந்திருக்கிறது.
இப்போது அவரவர் தாய்மொயிலேயே இந்திய அரசின் ஆட்சிப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதலாம் என்கிற சட்டம் இருக்கிறது. எனவே இந்தி கற்காததால் எந்த இழப்பும் இல்லை என்பதுதான் உண்மை.
ஆரம்பத்தில் நம் முன்னோர்கள் சமஸ்கிருதத்தை எதிர்த்து வெற்றி கண்டார்கள். அது மத ரீதியான போர். பிறகு 1938-ல் நடந்தது ஆதிக்கப் போர் அதிலும் வெற்றி பெற்றோம். 1965-ல் நடந்த மொழிப் போரிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதுதான் வரலாறு.
– பத்திரிகையாளர் மணா தொகுத்த ‘உயிருக்கு நேர்’ நூலிலிருந்து ஒரு பகுதி.