கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 3
அதிர்ச்சி அளிக்கலாம்.
“பெரும் கல்விக் கூடத்தில் இப்படியா?“ என்கிற கேள்வியையும் எழுப்பலாம்.
ஆனாலும், இது பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த நிஜம்.
தொலைபேசியில் அழைத்தது அந்தப் பதற்றமான பெண் குரல்.
என் பெயரை தெரிந்து குறிப்பிட்டு விசாரித்த அந்தக் குரல், “எங்க இடத்துக்கு நீங்க நேரடியா வந்தீங்கன்னா.. பல விஷயங்களை நானும், சக மாணவிகளும் பகிர்ந்து கொள்ள ரெடியா இருக்கோம்.
மிக முக்கியமான விஷயம்ங்கறதுனால நீங்க மட்டும் வாங்க, போட்டோகிராஃபர் யாரையும் அழிச்சிட்டு வர வேண்டாம். எப்ப வருவீங்க சார்..” என்று கேட்டதும், மறுநாள் காலை 11 மணிக்கு அந்தக் கல்வி வளாகத்தின் ஒரு பகுதியில் சந்திப்பதற்கு முடிவானது.
மறுநாள் காலை மிகவும் விரிந்திருந்த அந்தப் பல்கலைக்கழக வளாகத்திற்குள்போய் அவர்கள் குறிப்பிட்டிருந்த அந்தப் பகுதிக்கு போனேன்.
அது மிகச்சிறிய ஹால். அதில் ஏறத்தாழ 15 மாணவிகள் வரை நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். எதிரே போடப்பட்டிருந்த சேரில் நான் உட்கார்ந்தேன். முதலில் என்னை போனில் அழைத்தப் பெண் பேச ஆரம்பித்தார்.
“சார், நாங்க சொல்லப் போறது சீரியஸான விஷயம். எங்க வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட விஷயம். அதனால ரொம்பவும் கவனமா இதை வெளியிடணும்” என்று சில நிபந்தனைகளுடன் பேச ஆரம்பித்தார்.
இங்கே கூடியிருக்கிற நாங்கள் எல்லோரும் பி.ஹெச்.டி ஆய்வு மாணவிகள். உங்களுக்கே தெரியும் ஆய்வு மாணவிகள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு நெறியாளரின் (Guide) கீழ் ஆய்வு செய்ய வேண்டியதிருக்கும்.
அப்படி எங்களுக்கு நியமிக்கப்பட்ட நெறியாளர்கள் நடந்துக்கிட்ட கொடுமையான விதத்தைப் பற்றித் தான் பேச வந்திருக்கோம்” என்றவர், நான் கையில் வைத்திருந்த என்னுடைய பையை ஓரமாக வைக்கச் சொன்னார்.
“நாங்க சொல்வதை நீங்க டேப் பண்ணக்கூடாது. அப்படி இருந்தால் தான் நாங்கள் வெளிப்படையாக பேச முடியும். சரியா?” என்றதும், நான் பையை அந்த அறையின் ஓரத்தில் வைத்துவிட்டு சேரில் அமர்ந்தபிறகு எதிரே இருந்த பெண்கள் ஒவ்வொருவராக மாறி மாறி பேச ஆரம்பித்தார்கள்.
தாங்கள் ஆய்வு செய்து வரும் துறையைப் பற்றிச் சொன்னார்கள்.
“நடந்ததையும் இப்ப நடந்துகிட்டிருப்பதையும் எப்படி ஆரம்பிக்கிறது என்று தான் தெரியல” என்று அவர்கள் சொன்னதும், “பதற்றப்படாமல் சொல்லுங்கள்” என்றேன்.
“எங்களோட ஆய்வுக்குத் தான் நெறியாளர்கள் நியமிக்கப்படறாங்க. அப்படி நியமிக்கப்படுகிற கைடுகளெல்லாம் இந்தத் துறையில் தேர்ச்சிப் பெற்று, நல்ல பொசிஷனில் இருக்கிறவங்க.
டாக்டரேட் வாங்குனவங்க. நல்ல அனுபவம் உள்ள அந்த கைடுங்க, எங்க விஷயத்துல நடந்துக்கிட்டதைத் தான் எங்களால ஜீரணிக்க முடியல.”
“அப்படி என்ன நடந்தது சொல்லுங்க.”
பெருமூச்சுடன் அவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஒருவித பதற்றம் இழையோடியது அவர்களது பேச்சில்.
“எல்லா கைடுகளையும் நாங்க குற்றம்சாட்டல. சில கைடுகள் எங்க ஆய்வைவிட எங்க உடல்மேல காட்டுற அத்துமீறலை எங்களால சகித்துக்கொள்ள முடியல.
எங்கள அவங்களோட சொந்தம் போல நினைக்க ஆரம்பிச்சுடுறாங்க. கைடுங்க சாப்பிட்டத் தட்டக் கழுவி வைக்கிறதுல இருந்து, எல்லாத்தையும் நாங்க பண்ணனும்.
கைடுங்க வெளியூருக்குப் போனா, கூடவே எங்களையும் அழைச்சிட்டுப் போறாங்க. அவங்க தங்குற ஓட்டல்ல நாங்களும் தங்கி ஆகணும். சொல்லவே கஷ்டமா இருக்கு, அவங்க விரும்புறபடி எல்லாம் நாங்க நடந்தாகணும்.
நாங்க சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். அவ்வளவு தூரம் பாடாய் படுத்துற கைடுகள் இங்கே இருக்குறாங்க. இந்தக் கொடுமையை எங்கக் குடும்பத்தைச் சேர்ந்தவங்கக்கிட்ட சொல்ல முடியல.
ஒரு டாக்டர் பட்டம் வாங்குறதுக்காக எவ்வளவு அவஸ்தைகளை எங்களைப் போன்ற ஆய்வு மாணவிகள் அனுபவிக்க வேண்டியிருக்கு பாருங்க.
எங்க உடலை அந்தளவுக்கு அவங்களோட தேவைக்குப் பயன்படுத்தும்போது நாங்க காட்டுற எதிர்ப்பு, பலன் இல்லாம போயிடுது.
நடந்ததை வெளியே சொன்னா, எனக்கு மட்டுமில்ல உனக்குதான் கேவலம், உன் வாழ்க்கையும் சீரழிந்து போயிடும். உன் குடும்பத்துல உள்ளவங்ககிட்ட சொன்னீனா அவங்க என்ன செய்வாங்க? நேரா இங்க வந்து, நீ இங்க படிக்க வேணாம்னு சொல்லி, உன்ன இங்க இருந்து அழைச்சிட்டு போயிடுவாங்க.
அப்புறம் நீ உன் பிராஜெக்ட்டையும் முடிக்க முடியாது. டாக்டரேட்டும் வாங்க முடியாது. அதனால வெளியில எதுவும் சொல்லாமல் நான் சொல்றத கேட்டுட்டு, பொறுப்பா நடந்துக்க.
அப்படி நடந்துக்கிட்டேனா உனக்கு நல்லபடியா டாக்டரேட் கிடைக்கும். மீறி வெளிய சொன்னா உனக்குதான் அசிங்கம் தெரிஞ்சுக்க”
இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தலையை குனிந்தபடி மெல்லிய விசும்பலோடு அழுதாள் அந்த இளம்பெண்.
இன்னொரு பெண் ஆரம்பித்தார்.
“இப்படி கைடுங்க நடந்துக்கிற விஷயங்கள்ல, நாங்க எங்களுக்குள்ள ஷேர் பண்ணி கொந்தளிச்சு எங்களுக்குள்ளேயே தான் பேசிக்குவோம். அதுல ஒரு கைடோட டார்ச்சர் தாங்க முடியாம, ஒரு ஆய்வு மாணவி தற்கொலை பண்ற அளவுக்கு போயிருக்காங்கனா… எந்த அளவுக்கு இங்கே கொடுமை நடந்துட்டு இருக்கின்றத நீங்க புரிஞ்சுக்கோங்க.”
இப்படி அடுத்தடுத்து பல குமுறல்கள் வெடித்தன.
“இதைவிட கொடுமை, ஒரு கைடு மாணவி அவளோட கைடுடன் வெளியூருக்குப் போயிட்டு தங்கிட்டு வந்தா. வந்த பிறகு, அங்க நடந்த கொடுமைய எங்ககிட்ட சொல்லி வாய்விட்டுக் கதறி அழுதா.
கூட இருக்கிற மாணவிகள்ன்றதுனால எங்ககிட்ட உடம்புல சில பகுதிகளைக் காட்டினாள். அதை பார்த்தபோது நாங்க அதிர்ந்தே போயிட்டோம்.
உடம்புல பல இடங்களில்ல ரத்த காயங்கள். சில இடங்கள்ல அந்த காயங்கள் ஆழமா பதிஞ்சு இருந்துச்சு. பார்த்ததும் நாங்க குமுறிட்டோம்.
அந்தப் பெண்ணோட அப்பாவுக்கு போன் பண்ணி நடந்ததைச் சொன்னோம். அவர் ஒரு அரசு அதிகாரி. உயர் பொறுப்பில் இருந்தார்.
உடனே எங்க ஹாஸ்டலுக்கு வந்து அவர் என்ன செஞ்சார் தெரியுமா?
தன்னுடைய பொண்ண சத்தம் போட்டுட்டு, “இதைப்பத்தி யாரும் பேச வேண்டாம், நானும் புகார் கொடுக்க விரும்பல, இங்கிருந்து இப்பவே எம்பொண்ணக் கூட்டிட்டு போயிடுறேன். அவ இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இவ்வளவுக் கொடுமையை அனுபவிச்சு டாக்டரேட் வாங்க வேண்டியது இல்லை” என்று வருத்தத்துடன் சொல்லிட்டு, அன்னைக்கே அந்த பொண்ண வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிட்டார்.
அந்தப் பொண்ணு மேல அவ்வளவு வன்மத்தைக் காட்டின அந்த கைடு மேலே எந்த ஆக்சனும் எடுக்கப் படல. எவ்வளவு கொடுமை பாருங்க.
இப்படித்தான் பல கைடுகள் கொடுமைப்படுத்துறாங்க. சம்பந்தப்பட்ட மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் புழுங்கிக்கிட்டு இருக்கோம்” என்று சில பெண்கள் குமுறியபோது, ஒரு இளம் பெண் குறுக்கிட்டுச் சொன்னார்.
“இந்தக் கொடுமைக்கு எல்லாம் உச்சமா, ஒரு பெண் வெளியே சொல்ல முடியாம உசுரையும் விட்டுட்டா. இப்படியெல்லாம் இங்க நடக்கிற கொடுமை தாங்க முடியாமதான். இது மீடியால வரணும்னு, உங்கள இங்க வரவைச்சு, நாங்க பேசுறதுனு நாங்க முடிவு பண்ணினோம். இப்ப பேசிட்டு இருக்கோம். எப்படியாவது இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டாகணும்” என்று சொல்லிவிட்டு, “எப்படி இந்தப் பிரச்சினை வெளியக் கொண்டு வருவீங்க..” என்று கேட்டபோது,
“இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் வெளிப்படையா சொல்றதுக்கு முன்வருவீங்களா?” என்று கேட்டதும், திரும்பவும் அந்த ஆய்வு மாணவிகள் மத்தியில் ஒரே கொந்தளிப்பு.
“எப்படி சார், நாங்க எங்கப் பேர வெளியிட்டு எங்கப் போட்டோவையும் போட்டு நடந்த கொடுமையைச் சொல்லணுமா? எப்படி சார் நாங்க அதைச் சொல்ல முடியும்?.. இதுக்காக ஒரு உசுரு போனது பத்தாதா?” என்று கேட்டபோது கனத்த மவுனம் நிலவியது.
சிறிது நேரம் கழித்து, “தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், இதை எப்படி நாங்க வெளியிட முடியும். யாரைக் குற்றம்சாற்றுகிறோமோ அவங்க சும்மா இருப்பாங்களா? சொல்லுங்க” என்று நான் கேட்டதும்,
என்னைப் பார்த்து, ”கொஞ்ச நேரம் நீங்க வெளியே இருங்கள்” என்று சொன்னவர்கள் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்.
அரை மணி நேரம் சங்கடமான மவுனத்துடன் அந்த ஹாலுக்கு வெளியே காத்திருந்தேன்.
சற்று நேர இடைவேளைக்குப் பிறகு என்னை ஹாலுக்குள் அழைத்தார்கள். என்னை முதலில் போனில் அழைத்த மாணவி கையில் வெள்ளை பேப்பர்கள் இருந்தன.
என்னிடம் நேரில் சொன்ன விஷயங்களையெல்லாம், நான்கு பக்கங்களுக்கு மேல் தமிழிலேயே எழுதி அதன் கீழ், அங்கிருந்த 15 ஆய்வு மாணவிகளும் கையெழுத்திட்டிருந்தார்கள். அதில் அன்றைய தேதியையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
நான் அந்த பேப்பரில் அவர்கள் எழுதிக்கொடுத்திருந்ததைப் படித்துக் கொண்டிருந்தபோது,
“இந்த ஆதாரம் போதுமா?, இதை வைத்து இங்கே நடந்து கொண்டிருக்கிற கொடுமைகளை வெளியே கொண்டு வர முடியுமா?” என்று அவர்கள் கேட்டபோது,
“நான் சென்னைக்குப் போய் பத்திரிகை ஆபிசுக்கு நேரடியாக எடுத்துச்சென்று வெளியிட முயற்சி செய்கிறேன். பார்ப்போம்” என்று சொன்னபோது, முழுக்க பதற்றம் பரவிய அந்த இளம்பெண்களின் முகங்களைப் பார்ப்பதற்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.
மனதுக்குள் மெல்லிய வலி புகுந்தது போல் இருந்தது.
அவர்களிடம் ஒரு வழியாக விடைபெற்று, சென்னைக்குப் போய், ஒன்றல்ல, இரண்டு பத்திரிகை அலுவலகங்களை அணுகி, ஆதாரங்களைக் காட்டி அந்த பிரச்சினைகளை வெளியே கொண்டு வர முயற்சித்தபோது, அதை வெளியிட அவர்கள் சம்மதிக்கவில்லை.
“பெரிய கல்வி நிறுவனத்தில் இப்படி எல்லாமா நடந்திருக்கும்? எல்லாம் மிகைப்படுத்தி சொல்லி இருக்காங்க. இதை எப்படி வெளியிடுவது?” என்கிற கேள்விகளோடு முடங்கிப்போனது அந்த ஆய்வு மாணவிகளின் கொடுமையும் நம்பிக்கையுடன் அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்த அந்த உருக்கமான வரிகளும்.
காலம் பெரும் திரைபோல கீழிறங்கினாலும், அன்றைக்குக் கேட்ட அந்த ஆய்வு மாணவிகளின் மென்குரல்களும் விசும்பல்களும் நினைவுவெளியில் இன்னும் கேட்கின்றன.
– மணா