சுதந்திரம் கிடைத்தபோது நாங்கள் எதிர்பார்த்தது வேறு, பிறகு நடந்தது வேறு, அப்போது மிராசுதார்கள், பழைய ஜமீன்தார்கள். வசதியானவர்கள்.
பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகத் தான் காங்கிரஸ் இருந்தது. இதை எதிர்த்து 1948-ல் நடந்த கல்கத்தா மாநாட்டில் குரல் கொடுத்தோம்.
இதையொட்டியும் தெலுங்கானாவில் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடந்ததையொட்டியும் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது.
எங்கும் பகிரங்கமாகக் கூட்டம் போட முடியாது. செயல்பட முடியாது. கட்சித் தடை செய்யப்பட்டதும் நாங்கள் தலைமறைவாகி விட்டோம்.
அங்கங்கே விவசாயத் தொழிலாளர்களின் வீடுகளில் தங்கியிருப்போம். வீட்டுக்கு வெளியே காவலுக்குத் தோழர்கள் இருப்பார்கள். இரவு நேரங்களில் மட்டுந்தான் வெளியே போவோம்.
போலீஸ் ஒருபுறம் எங்களைத் தேடிக்கொண்டு அலையும். பாலதண்டாயுதத்தை ஏர்வாடி கொண்டுபோய் வைத்திருந்தோம்.
அவர் ரொம்பவும் சிவப்பாக இருப்பார். உடனே மலையாளப் பெண் ஒருவரைத் தோழர்கள் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்றொரு பேச்சு கிளம்பிவிட்டது.
உடனே யோசித்து இரவு நேரத்தில் கூட்டம் அருகில் போட்டோம். எண்ணெய்ச் சட்டி விளக்கு வெளிச்சத்தில் அதைத் தெளிவுபடுத்தி விளக்கம் கொடுத்தோம்.
ஒரு வருஷத்திற்குப் பிறகு ஒரு நாள் இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன்.
கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தால் போலீஸ், கைது பண்ணிவிட்டார்கள். கைது பண்ணும்போது நான் தங்கியிருந்த அறைக்குள்ளேயே ஆட்டுரலுக்குள் இருந்து வெடிகுண்டுகளை எடுத்தார்கள்.
என்னைக் கைது செய்த உடனே என் கைகளைப் பின்னால் கட்டிவிட்டார்கள். வெடிகுண்டுகள் எடுத்ததும் உடனே என்னைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள்.
டோனாவூரிலிருந்து களக்காடு போகிற வழியில் உள்ள சாலையில் என்னைக் கொண்டு போய்க் கீழே கிடத்தினார்கள்.
“மேலே மலையைப் பார்றா… நேத்துத்தான் உங்க ஆட்கள் இரண்டு பேரை உருட்டிவிட்டோம்” என்று சொன்னபடியே என்னை மிதித்தார்கள் போலீசார்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் மறைந்திருக்கிற இடத்தைச் சொல்லச் சொல்லிச் சித்திரவதை செய்தார்கள். அப்போது நான் முகத்திலுள்ள மருவை மறைப்பதற்காக சவரம் செய்வதில்லை.
ஒரு போலீஸ் அதிகாரி எரிகிற சிகரெட்டாலேயே கீழே கிடந்த என் மீசையைப் பொசுக்கினார்.
வலி பொறுக்க முடியாத அளவுக்கு இருந்தும், நான் எதுவும் பேசவில்லை. அப்போது குறுக்கெழுத்துப் போட்டியில் வருவது போல, லேசில் புரிபடாத விதத்தில் எழுதி வைத்திருப்போம்.
கைப்பற்றிய எந்த ஆவணங்களிலிருந்தும் போலீசாரால் எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஒருநாள் முழுக்க சித்ரவதைகள் தொடர்ந்து பிறகுதான் நீதிமன்றத்திற்குக் கொண்டு போனார்கள். வெடிகுண்டுகள் வைத்திருந்ததற்காக சதி செய்ததாகப் பல வழக்குகள் என்மீது போடப்பட்டன.
****
எழுத்தாளர் மணாவின் ‘போராட்டமே வாழ்க்கை’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.
****
பேச – 8220063246