அறவாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பெருவிழா!

டாக்டர் க. பழனித்துரை
“கடந்த நேரமும் நடந்த தூரமும்” என்பது புத்தகத்தின் தலைப்பு. அதை எழுதியது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிநாயகம் சிவராஜ் பாட்டீல் அவர்கள்.
 
தன் 80 அகவையில் அடியெடுத்து வைத்தபோது தன் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என ஒரு சிறிய குழு அவரைப் பார்க்கச் சென்றபோது கூறினார்.
 
அந்தக் குழுவில் நானும் ஈரோட்டு மருத்துவர் ஜீவானந்தமும் மதுரை சோக்கோ அறக்கட்டளை அறங்காவலர் மகபூப் பாட்ஷாவுடன் இருந்தோம்.
 
அந்த முடிவைக் கூறியபோது உடனே மகபூப் பாட்ஷா ”ஐயா, அதை உடனே செய்யுங்கள், அதை நான் தமிழில் கொண்டு வருகிறேன்” எனக் கூறினார்.
 
ஆனால், அந்தப் புத்தகம் தமிழில் வந்து இன்று வெளியிடும்போது மகத்தான மனிதர் பாட்ஷா நம்மிடம் இல்லை.
 
அவர் கொடுத்த வாக்கினை நீதிநாயகம் சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளையின் அறங்காவலர் செல்வக்கோமதி நிறைவேற்றியது ஒரு அறச்செயலாக நம்மால் பார்க்க முடிந்தது. 
 
இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் வந்து சிறப்பித்து புத்தகத்தை வெளியிட்டு,
 
அந்த புத்தகத்தில் உள்ள இயல்கள் ஒவ்வொன்றிலும் ஆசிரியர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை,  ஒரு திரைப்படம் திரையிடப்படுவதைப்போல் சுவைபட அவருக்கே உரிய பாணியில் விளக்கி அனைவரையும் தன் பேச்சில் இணைத்து வைத்திருந்தார்.
 
மாட்டு வண்டியில் பயணித்து தன் பள்ளிப் படிப்பை தாய் மொழியில் படித்து உச்சநீதிமன்றம் வரை உயர்ந்த உன்னத வரலாற்றை நூல் ஆசிரியர் விவரித்து இருந்ததை,
 
உணர்வு பூர்வமாக உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு பெருந்திரளாக வந்திருந்த வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கியது நிகழ்வின் முத்தாய்ப்பாக இருந்தது.
 
அவருடைய ஒட்டுமொத்த உரையும் தமிழர்களின் அறவாழ்வு பற்றியதாகவே இருந்தது. அந்த உரை முழுதும் ஒரு அறக்கல்வியாக உணர முடிந்தது.
 
அந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்று தலைமை உரையாற்றிய ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம், நீதிநாயகம் சிவராஜ் பாட்டீலுடன் சென்னையில் பணியாற்றியபோது பெற்றுக்கொண்டது என்ன என்பதை விளக்கும்போது,
 
எவ்வளவு உயர்ந்த பண்புகளைக் கொண்ட மாமனிதராக அந்தப் பதவியில் இருந்தார், அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தார் என்பதை நம்மால் உணர முடிந்தது.
 
தனக்கு வழிகாட்டி, தன்னை பக்குவப்படுத்திய குருநாதர் சிவராஜ் பாட்டீல் என்று புகழாரம் சூட்டினார்.
 
அத்துடன் அறம் சார்ந்த வாழ்க்கையை எந்த இடத்திலும் எந்தப் பதவியிலும் சமன்மை நிலையில் செயல்படத் தேவையான பக்குவத்தைப் பெற்ற மாமனிதர் நீதிநாயகம் சிவராஜ் பாட்டீல்.
 
இவர் போன்றவர்கள் பல்லாண்டு வாழ்ந்து இந்த சிக்கலான சூழலில் வாழும் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டி தன் உரையை நிறைவு செய்தார். 
 
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் முனைவர் ஜெயச்சந்திரன் வாழ்த்துரை வழங்கும்போது, தன்னை உற்சாகமூட்டி என் தொழிலை நேர்மையாக அறம் சார்ந்து செயல்பட என்னைச் செதுக்கியவர் நீதியரசர் சிவராஜ் பாட்டீல்.
 
அதேபோல் இங்கு வந்துள்ள மகாதேவன் தனக்கு எப்படியெல்லாம் உதவினார் என்பதையும் விளக்கி, இளைஞர்கள் அறம்சார்ந்த வாழ்க்கை வாழ வழிகாட்டும் மனிதர்கள் இங்கு இருப்பவர்கள் என்று கோடிட்டுக் காட்டி நிறைவு செய்தார். 
 
விழாவில் வாழ்த்துரை வழங்க வந்த 80 வயதைக் கடந்த மாபெரும் இலக்கியவாதியும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற பொன்னீலன் பேசும்போது,
 
“தான் இந்த நூலை முழுவதும் படித்து விட்டேன். தன் வாழ்வில் தான் தன் செயலாலே மாமனிதராக உயர்வதற்கு ஒரு மனிதன் எவ்வளவு சவால்களைச் சமாளிக்க வேண்டியுள்ளது.
 
அதை எப்படி நிகழ்த்துவது என்பதை தன் அனுபவத்தை நூலாசிரியர் வடித்துத் தந்துள்ளார்.
 
அதை இன்றைய தலைமுறை படிக்க வேண்டும். படிப்பது மட்டுமல்ல அதைப் பின்பற்ற வேண்டும்.
 
அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்திகள் என்பது அவருக்குப் புகழ் சேர்க்க அல்ல, இளைஞர்களாகிய நீங்கள் பின்பற்றுவதற்கு” என்று பேசி நிறைவு செய்து கொண்டார். 
 
அடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி லட்சுமி மேனன், “இந்த நூல் ஒரு சிறந்த இலக்கியம்.
 
ஒரு மாமனிதனின் வாழ்க்கையைப் பேசும் இலக்கியம் ஒவ்வொரு மனிதரின் மனதைத் தொடும் வகையில் எழுதி வழிகாட்டியிருப்பது ஒரு மாபெரும் சமூகச் செயல்பாடு” என்று கூறி நிறைவு செய்து கொண்டார்.
 
கடைசியாக ஏற்புரையை வழங்கிய நீதியரசர் சிவராஜ் பாட்டீல், தான் ஏன் இதை எழுதினேன் என்பதை விளக்கினார்.
 
“என் சுய சரிதையைக் கூறுவதற்காக எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆவணம் அல்ல. இது என் வாழ்க்கையில், பணியில் நான் எதிர்கொண்ட சவால்களை அறம் சார்ந்து எதிர்கொண்டு சமாளித்ததை இன்றைய தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்ற அடிப்படையில் எழுதினேன்” என்றார்.
 
“எந்தப் பதவிக்கு வந்தாலும் அது இறைவனால் நமக்கு மக்களுக்கு நியாயமாக பணி செய்யக் கொடுத்த பொறுப்பு என எண்ணி, அந்தப் பொறுப்பினை தர்ம சிந்தனையுடன், நேர்மையுடன்,
 
அர்ப்பணிப்புடன் செய்திட்டால் வாழ்வு உயரும் மலரும் என்பதை தன் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாகக் கோடிட்டு விளக்கியது மிகச் சிறப்பாக இருந்தது. 
 
நாம் நம்மைப் பாதுகாக்க நமக்கு நம் மனச்சாட்சியே போதுமானது. எந்த நேரத்திலும் எளிமையாக, நிதானமாக இருந்து நம் பணிகளை நேர்மையுடன் செய்வது என்பது ஒரு தவ வாழ்க்கை.
 
நம் பணியில் நேர்மையுடன் செயல்படும்போது நாம் மனிதப் பண்பில் உயர்வதை நம்மால் உணர முடியும். நான் எங்கு சென்றாலும் அனைவரையும் அரவணைத்துச் செயல்பட எனக்கு இருந்த பக்குவம் உதவியது.
 
நாம் நல்லவராக, பொறுப்புடன் நேர்மையுடன் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்யும்போது நாம் மனிதத்துவத்தில் உயர்வதை மேம்படுவதை ஒவ்வொரு நாளும் உணர முடியும்.
 
நாம் மனிதாபிமானத்துடன் அனைவரையும் மக்களை மதித்து நடத்த கற்றுக்கொள்ள வேண்டும். மனிதப் பண்புகளை வளர்த்துக் கொண்டு செயல்படும்போது நாம் மலர்வோம். 
 
நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் நாம் கொடுக்கக்கூடிய தீர்ப்பில் ஒருவருக்குத்தான் மகிழ்ச்சி தரமுடியும். மற்ற தரப்புக்கு நாம் செய்த பணியில் உள்ள நேர்மையை கண்டு நிம்மதியைத் தரவேண்டும்.
 
எந்த இடத்திலும் நிதானம் இழக்காமல், அறம் தொய்வடையாமல் நீதியை நிலைநாட்ட அனைத்து முறைமைகளையும் கடைப்பிடித்து நாம் தீர்ப்பெழுத வேண்டும்.
 
அது ஒரு அறப்பணி அதைச் செய்வதில் நமக்கு ஒரு பெருமை வேண்டும் எனக் கூறினார். 
 
நான் 80வது அகவையில் அடி எடுத்து வைத்தபோது எனக்கு ஒரு விழா எடுத்தனர். அதில் என்னை பலரும் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
 
நான் அந்த விழாவிலும் கூறினேன் எனக்கு இரண்டு மட்டும்தான் வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
 
ஒன்று நான் நலமுடன் வாழவேண்டும். வாழ்கின்ற நாள்வரை நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும்.
 
இரண்டு அப்படி வாழும்போது அது சமூகத்திற்கான வாழ்வாக வாழவேண்டும் அதற்கு இறையருள் வேண்டும் என்று கூறினேன்.
 
அதையே இங்கும் கூறுகிறேன் என்று கூறி, என் நூலை தமிழ்ப்படுத்த முயற்சி மேற்கொண்ட சிவராஜ் பட்டீல் அறக்கட்டளை அறங்காவலர் செல்வக்கோமதிக்கு தன் நெஞ்சார்ந்த நன்றியினை உணர்வுபூர்வமாகக் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.
 
இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் அறம், அறம் சார்ந்த பணி, எளிமை, நெஞ்சுறுதி, மக்களை மதித்துப் போற்றும் பண்பு என ஒட்டுமொத்த அறக்கல்வியாகவே அந்த நிகழ்வு அமைந்திருந்தது. 
 
இதையும் கடந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் தங்களுக்கு கிடைத்த ஆன்மீக வழிகாட்டல்தான் தங்களை இந்த இடத்திற்குக் கொண்டு சேர்த்தது என்பதைப் பதிவு செய்தது ஒரு சிறப்பைச் சேர்த்தது இந்த நிகழ்வுக்கு.
 
நேர்மையற்று சுயநலத்தோடு செல்வம் சேர்க்கும் வாழ்வியலில் தோய்ந்திருக்கும் இந்தச் சூழலில் இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அனைவரும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தார்கள்.
 
அது நேர்மையாக வாழ்வது எளிதுதான் அது ஒரு மனிதனை உயர்த்தும் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் தந்தனர். 
 
இந்த புத்தக வெளியிட்டு விழா மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கத்தில் மிக நேர்த்தியாக, அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் இருந்தது அனைவருக்கும் உற்சாகத்தை ஊட்டியது.
 
அது மட்டுமல்ல அரங்கத்தில் இடமில்லாமல் இருநூறு பேர் குறிப்பாக இளைஞர்கள் வெளியில் நின்று நிகழ்வை கவனித்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வின் சிறப்பை விளம்பியது.
 
இந்த நிகழ்வில் ஒரே ஒரு குறை, அருமை நண்பர் எளிமையின் சிகரம், சோக்கோ அறக்கட்டளையின் அறங்காவலர் பாட்ஷா இல்லை என்பதுதான்.
 
அந்தக் குறையை அவர் இருந்தால் எப்படிச் செயல்படுவாரோ அப்படியே செல்வக்கோமதி செயல்பட்டு அந்த விழாவைச் சிறப்பாக நடத்தியது பாட்ஷாவுக்கு செய்யும் அஞ்சலியாகவே இருந்தது.
Comments (0)
Add Comment