குற்றங்களுக்கு வயதில்லை…!

மணா

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு: தொடர் – 1

நீண்ட காலமாகிவிட்டாலும் மறக்க முடியவில்லை மதுரையில் சந்தித்த ‘மைனர்’ ஜெயில் அனுபவத்தை.

அப்போது, நான் ஜீனியர் விகடனுக்காக மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள சிறார் சீர்திருத்த இல்லத்தில் (மைனர் ஜெயில்) உள்ள சிறுவர்களைச் சந்திக்க சிறைத்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தேன். உடனே கிடைத்தது அனுமதி.

காலை நேரம். அங்கு நான் சென்றபோது, ஒரே மாதிரி சீருடை அணிந்த சிறுவர்கள் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். நான் போனதும் பலரையும் ஒரே ஹாலுக்கு வரச் சொன்னார்கள் அதிகாரிகள்.

அந்த ஹாலில் பலரும் அமர்ந்ததும் சிறுவர்கள் ஒவ்வொருவராக தாங்கள் அந்த இல்லத்திற்கு எப்படி வந்தோம் என்பதை விவரித்தார்கள்.

எட்டு வயது துவங்கி பல வயதுகளில் சிறுவர்கள் வெவ்வேறு குற்றங்களைச் சுமந்தபடி அங்கிருந்தார்கள்.

அதிலும் 8 வயது பையனை எது குற்றவாளியாக்கிருக்கும்?

லாரிகளுக்குப் போடக்கூடிய டுயூபில் கள்ளச்சாராயத்தை தலையில் சுமந்து கடத்திவந்தபோது, மாட்டியிருக்கிறான் அந்த 8 வயது சிறுவன்.

யாரோ பெருங்குற்றங்கள் செய்ய, அதை கடத்திய குற்றத்திற்காக கைதான அந்தச் சிறுவனின் முகத்தில், இன்னும் குழந்தைத்தனம் மிஞ்சியிருந்தது.

நான் சில கேள்விகளைக் கேட்டபோது, பதிலுக்கு அந்தச் சிறுவனால், சிறு புன்னகையை மட்டுமே பதிலாக தர முடிந்தது. 

“உன்னை சொந்தக்காரர்கள் வந்து இங்கு பார்ப்பார்களா?” என்று கேட்டபோது, “தாத்தா மட்டும் எப்போதாவது வருவார்” என்றார்  தலைகுனிந்தபடி.

இதேமாதிரிதான் அங்கிருந்த பல சிறுவர்களின் அனுபவங்கள்.

சிலர், பிறருக்காக நகைகளையும், பர்சுகளையும் திருடி மாட்டியிருந்தார்கள்.

சிலர், சினிமா கவர்ச்சியில் சில சிறுமிகளிடம் அத்துமீறியிருந்தார்கள். 

14 வயதான ஒரே ஒரு சிறுவன் மட்டும் கொலைக் குற்றத்தைச் சுமந்தபடி, அங்கு இருந்தான்.

அவனை சுலபமாக பேச வைக்க முடியவில்லை. பக்கத்தில் நின்ற அதிகாரிகள்தான் அவனுக்காகப் பேசினார்கள். 

குற்றவுணர்வு அந்த வயதுக்கான முகத் தோற்றத்தையே மாற்றியபடி இருந்தது. பார்வையில் கூட உஷ்ணம் தெரிந்தது. 

முறைத்தபடியே, என்னிடம், “ஏன் இதையெல்லாம் கேட்குறீங்க” என்று கடுமையாகவே கேட்டுவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.

அதற்குள் மதிய நேரம் வந்துவிட, அதிகாரிகள் என்னையும் அங்கேயே சாப்பிடச் சொன்னார்கள்.

சாப்பாட்டு பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு வரும்போது, முள்ளங்கி சாம்பாரின் மனம் கமகமத்தது.

தரையில், அமர்ந்து அந்த சிறுவர்களோடு சேர்ந்து சாப்பிட்டபோது, அதற்குள் என்னை தனித்துக் கேலி பண்ணும் அளவுக்கு நெருக்கமாகி இருந்தார்கள், சில சிறுவர்கள்.

அவர்களில் பலருக்கும் மென்மையாகவும் அன்பாகவும் அவர்களிடம் பேசுவது பிடித்திருந்தது. சில சிறுவர்கள் தொட்டுப் பேசுவதில் ஆர்வம் காட்டினார்கள்.

குற்றங்கள் அவர்கள்மேல் படிய வைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் குற்றங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகில் தனித்துவமாய் இருந்தார்கள் அந்த பிஞ்சுக் குற்றவாளிகள்.

அந்த வளாகத்தைவிட்டு வெளியே வரும்போது, சிறுவர்கள் சிலர் என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அந்த 8 வயது சிறுவன் நைஸாக என்னை கிள்ளியபோது ஆச்சர்யமாக இருந்தது. 

ஒரு சிறுவன் என்னிடம் பேச எத்தனித்தபோது, நான் கீழே குனிந்து காது கொடுத்தேன்.

அந்தச் சிறுவன் கேட்டான், “திரும்பவும் எப்பண்ணா வருவீங்க?”.

குழந்தைத்தனமான குரலில் சிறுவன் கேட்டபோது மனம் ஈரம் பட்டிருந்தது. கனத்த மனதுடன் வெளியே வந்தேன். 

அடுத்த வார ஜீனியர் விகடன் வார இதழில் கவர் ஸ்டோரியாக இந்தக் கட்டுரை ‘பிஞ்சுக் குற்றவாளிகளுடன் சில மணி நேரம்’ என்கிற தலைப்பில் வெளிவந்திருந்தது.

அதை வாசித்துவிட்டு நெகிழ்ந்து பாராட்டியவர்களில் ஒருவர் இயக்குநர் கே.பாலசந்தர்.

அவர் அப்போது தயாரித்துக் கொண்டிருந்த சிந்து பைரவியின் ஒரு காட்சியில், அந்த கவர் ஸ்டோரி வந்த ஜீனியர் விகடனின் அட்டைப்படத்தில் வந்திருந்த காட்சிப்படுத்தி இருந்தார்.

இப்போதும், தரையில் அமர்ந்து அரட்டை அடித்தபடி சாப்பிட்ட சிறுவர்களையும் அந்த முள்ளங்கி சாம்பாரின் அழுத்தமான வாசனையும் மறக்க முடியவில்லை.

****

இதேமாதிரி சிறையில், ஆயுள் தண்டனையை நிறைவேற்றிவிட்டு வெளியே வந்தவர்களுக்காக ஒரு புணர்வாழ்வு சங்கத்தை உருவாக்கியிருந்தார்கள்

இதுவும் மதுரையில்தான்.

அங்கு போனபோது, நடுத்தர மற்றும் முதிர்ந்த வயதுகளில் பல்வேறு நபர்களைச் சந்தித்துப் பேசினேன்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்துச் சிறைகளில் ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்திருந்தார்கள்.

பக்கத்திலிருந்த சிறு புல்வெளியில் அவர்களில் பத்து பேரோடும் அமர்ந்து பேசினேன். 

ஒவ்வொருவரின் பேச்சிலும் பெருமூச்சுப் படிந்திருந்தது. சில சமயங்களில் அவர்களுடைய குரல் தடுமாறியது. சிலர் அவர்கள் செய்த குற்றங்களை மறுபடியும் நினைவூட்டிச் சொல்லும்போது வாய் கோணி அழுதார்கள்.

தென் மாவட்ட கிராமமொன்றில், எதோ ஒரு வேகத்தில், மனைவியையும் தன் எட்டுவயது பெண் குழந்தையையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, சரணடைந்து ஆயுள் தண்டனையையும் அனுபவித்துவிட்டு வந்தவரிடம் பேசியபோது, அந்தக் குற்றத்தை நினைவு கூறும்போது முகமெல்லாம் பதற்றமாகி இருந்தது. 

“அன்னைக்கு நான் அப்படிச் செஞ்சிருக்கக் கூடாதுங்க, வீட்ல எனக்கும் மனைவிக்குமிடையில், தொடர்ந்து சண்டை. நான் குடிச்சப் பாவத்திற்கு அவ என்ன செய்வான்னு இப்ப நான் யோசிக்கிறேன், அன்னைக்கு நா யோசிக்கல.

அதுவும் கள்ளச் சாராயத்தைக் குடிச்சிட்டு வீட்டுக்குள்ள வந்து காசு கேட்டதும் அவளை அரைஞ்சேன். அவ பதிலுக்கு அசிங்கமாக கத்தினாள். கையில கிடைச்ச பாத்திரத்தைத் தூக்கி எறிஞ்சா.

எங்க சண்டையை தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த எங்களோட எட்டு வயசுக் குழந்தை கௌரி பரிதாபமா பாத்துக்கிட்டு இருந்துச்சு.

ஆனால்,  இன்னைக்கு எனக்குத் தெரிகிற அந்தப் பரிதாபம் அன்னைக்கு எனக்கு தெரியாமப் போச்சே. என்ன ஒரு மடத்தனம் பண்ணியிருக்கே பாருங்க” என்று சொன்னபடி நரைத்த தனது தலையைச் சட்டென்று கைகளால் வேகமாக அடித்துக் கொண்டார்.

அடுப்படிப் பக்கத்தில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு அவளை வெட்டினதோட விடாம, அந்தக் குழந்தையையும் வெட்டினப்போ, என் குழந்தைப் பார்த்த பார்வை இன்னைக்கு வரைக்கும் என்னய கொன்னுக்கிட்டே இருக்கு.

இதுக்காகவே எனக்குத் தூக்குத் தண்டனை கொடுத்திருக்கலாம். ஆனால், என்னமோ குறைச்சு ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க.

போதை தலைக்கேறிய நேரத்துல செஞ்ச பாவத்த… என்னாலயே இப்ப மன்னிக்க முடியல. மத்தவங்கள என்ன சொல்ல முடியும்?

சிறையிலிருந்தபோது சொந்தக்காரங்க  யாரும் பார்க்க வரல. அவங்களுடைய கோவம் நியாயமா தான் எனக்குத் தோணுது.

ஒரு வழியா வெளிய வந்தப்போ, ஊரில் இருக்குற என்னோட சொந்தக்காரங்க யாருமே என்னை மதிக்கல.

கொஞ்ச நாள் நடைபிணம் மாதிரி இருந்தேன். இப்போ அந்த ஊரை விட்டு வெளியேறி மதுரையில ஒரு தனியார் கம்பெனியில நைட் வாட்ச்மேனா வேலை பாக்குறேன்” என்று குரல் உதற அவர் சொன்னேபோது, பக்கத்தில் இருந்தவர்கள் அவரது முதுகைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்த முயற்சித்தார்கள்.

குமைந்தபடி தலைக்குனிந்திருந்தவரிடம், “இப்பவும் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கா?” என்ற கேள்வியை நான் கேட்டதும், பொங்கி எழுந்துவிட்டார்.

“எப்படி சார் அந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கலா நீங்க? என்னால பொறுத்துக்கவே முடியல. அந்தப் பழக்கத்துக்கு நான் கொடுத்த விலை போதாதா? இன்னும் என் உயிரைத்தான் கொடுத்தாகணும்.” என்று குமுறலோடு அழுதவரை சாந்தப்படுத்த நேரமாயிற்று.

எப்போதோ தான் செய்த குற்றத்திற்காக, அவரை சந்தித்த அந்த நேரத்தில், அனைவருக்கும் முன்னாலும், சிறு குழந்தையைப்போல தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் அந்த முதியவர்.

காலம் எப்படியெல்லாம் மனிதர்களைக் கனிய வைத்திருக்கிறது, பாருங்கள்!

– (மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை இதே தொடரில் சந்திப்போம்.)

Comments (0)
Add Comment