சமீப காலமாக நமது இந்தியாவின் அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஒரு சமூக மேம்பாட்டு அமைப்பின் மூலம் எடுத்துச் சென்று இந்திய குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று என மாணவர்களிடம் உரையாற்றி வருகின்றேன்.
இது ஒரு மக்கள் சாசனம். ஆனால், இது மக்களிடம் 75 ஆண்டைக் கடந்த நிலையிலும் சென்று அடையவில்லை என்பதை அறிந்து, ‘நல்லோர் வட்டம்’ அமைப்பின் மூலம் இந்தப் பணியை ஓர் சமூக இயக்கமாக முன்னெடுத்துள்ளோம்.
பலர் இந்திய அரசமைப்புச் சாசனத்தைப் புரிந்து கொள்வது கடினமானது. அந்த அளவுக்கு அது விசாலமானது, சட்ட வல்லுனர்களின் உதவி இல்லாது புரிந்துகொள்வது கடினம் என்று படித்தவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
‘நம் அரசமைப்புச் சாசனம் எதற்காக உருவாக்கப்பட்டது, அது இந்திய நாட்டையும் சமூகத்தையும் எப்படி உருவாக்க திட்டமிட்டுள்ளது’ என்பதை முகப்புரையை படித்தாலே மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
முதலில் ஒரு கிராமப் பஞ்சாயத்தில் சுமார் நூற்று ஐம்பது மகளிர் மத்தியில் நம் அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை விளக்கினோம். அதன் பின்னூட்டத்தில் பெண்கள் பல கேள்விகளை எங்கள் முன் வைத்தார்கள்.
அதில் ஒரு முக்கியக் கேள்வி, நம் தலைவர்கள் அரசமைப்புச் சாசனத்தின் மூலம் உருவாக்க வேண்டிய இந்தியா எங்கே என்பதுதான் அது. அந்தக் கேள்வி எங்களை இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது.
அடுத்து சாதாரண நிலையில் எழுதப் படிக்கத் தெரிந்த சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தபோது, இதை எந்த இடத்திலும் எவருக்கும் கொண்டு சேர்த்து இதை புரிய வைக்க முடியும் என்பதை உணர முடிந்தது.
அந்தப் பெண்கள் கேட்ட கேள்விகள்தான் நமக்கு பெரு நம்பிக்கையை உருவாக்கியது.
எப்படி ஓர் உயர்வான நாட்டை உருவாக்க நம் அரசமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர்கள் எண்ணினார்களோ அந்த அடையாளங்களுடன் இன்று இந்தியாவும் இந்திய சமூகமும் இருக்கின்றனவா என்பதுதான் இன்றுள்ள மையக்கேள்வி?
இந்தக் கேள்வி சாதாரண மக்களிடமிருந்து வந்தவுடன் ஒன்றை எங்களால் அனுமானிக்க முடிந்தது. முறையாக நம் அரசமைப்புச் சாசனத்தை மக்களிடம் எடுத்துச் சென்றால் மக்கள் அனைவரும் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்பார்கள்.
இந்த 78 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஏன் அரசமைப்புச் சாசனம் கூறிய இந்தியாவை உருவாக்க முடியவில்லை என்ற கேள்விதான் அது.
இதுதான் மையப்புள்ளி நம் செயலுக்கு என புரிந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடம் கொண்டு செல்வோம் என முடிவெடுத்து, கல்லூரி ஆசிரியர்களிடம் பேசியபோது அவர்களிடமிருந்து ஒர் உண்மையைக் கண்டுபிடித்தேன்.
ஒரு கல்லூரி பேராசிரியை கூறினார், ஐயா, நீங்கள் அரசியல் அறிவியல்துறை பேராசிரியர், எனவே இதைப் பற்றி ஆழமாக எளிமையாக இதை விளக்குகின்றீர்கள்.
உங்கள் உரையைக் கேட்கும்போது எங்களுக்குப் புரிகின்றது. ஆனால் அதையே என்னால் வகுப்பறையில் மாணவர்களிடம் விளக்கமாக கூற முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்றார்.
எங்களைப் போன்றவர்கள் மாணவர்களிடம் எடுத்துச் செல்ல எதாவது ஒரு சிறிய விளக்கக் கையேடு இருந்தால் வசதியாக இருக்கும்” என்றார்.
அவர் அத்துடன் நிற்கவில்லை, எங்கள் கல்லூரியில் வெள்ளிக்கிழமைதோரும் காலையில் அரசமைப்புச் சாசன முகப்புரையை ஆங்கிலத்தில் நாங்கள் உறுதி மொழி ஏற்றுக்கொள்வதுபோல் படிப்போம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு சடங்கு மட்டும்தான் என்றும் கூறினார்.
அவர் கூறியவுடன் எனக்கு ஒரு புத்தகம் ஞாபகத்திற்கு வந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் “மக்களாட்சி ஓர் அறிமுகம்” என்ற நூலை பெர்னாடு கிரிக் என்பவர் எழுதி பதிப்பித்திருந்தது.
மக்களாட்சி பற்றி புரிந்துகொள்ள இது ஒரு அறிமுகக் கையேடு என்று குறிப்பிட்டிருந்தார் அந்த நூலில்.
இதுபோன்று ஏன் நாம் ஒன்று நூலைத் தயார் செய்யக்கூடாது என எண்ணி ‘அரசமைப்புச் சாசன முகப்புரை: ஓர் எளிய அறிமுகம்’ என்ற சிறு நூல் ஒன்றை எழுதி முடித்தேன்.
இதேபோல் பள்ளி மாணவர்களிடம் பணி செய்யும் ஓர் அமைப்பு ஒரு விழிப்புணர்வுக்கான கையேட்டை தயார் செய்து அந்த கையேட்டின் வெளியிட்டு விழாவுக்கு என்னையும் அழைத்திருந்தனர்.
என்னுடன் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் வந்திருந்தார் சிறப்பு விருந்தினராக.
அந்த நிகழ்வில் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் என அனைத்து இடங்களிலும் மாணவர்களிடம் அரசமைப்புச் சாசனம் பற்றி விழிப்புணர்வு உருவாக்க முனைய வேண்டும் என்று கூறிவிட்டு,
ஒவ்வொரு கிராமசபையிலும் இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க திட்டமிட வேண்டும் என்று ஒரு கருத்தை என் உரையில் முன் வைத்தேன்.
எனக்குப் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதி பேசும்போது, “மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஓர் விழிப்புணர்வு தேவைப்படுகிறது அதையும் சேர்த்து செய்ய வேண்டும்” என்றார்.
இதே கருத்தை புதுடெல்லியில் ஒரு கருத்தரங்கில் உபேந்திர பக்ஷி என்ற சட்டக் கல்வியின் நிபுணரிடம் பேசும்போது கூறினார், இதை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரை செய்தோம், சேர்த்தார்கள்.
ஆனால், அதனால் பெரிய விளைவு ஒன்றும் எற்படவில்லை. இதற்குத் தீர்வு குடிமக்களுக்கான குடிமைப்பண்பு வளர்க்கும் கல்வி என பள்ளி கல்லூரி என அனைத்து இடங்களிலும் ஓர் இயக்கம்போல் செய்தால்தான் முடியும் என விளக்கினார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பத்துக் கல்லூரிகள் இரண்டு பல்கலைக் கழகங்களில் அரசமைப்புச் சாசனமும் மக்களாட்சியும் என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றினேன்.
ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தது 200 அல்லது 300 அதிகபட்சம் 500 மாணவர்கள் பங்கேற்றார்கள்.
என்னுடைய உரை முடிந்தவுடன் ஒரு சமூக இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரு உரையாடலை நடத்துவார் என் உரையை வைத்து.
அப்பொழுது சில மாணவர்கள் கூறிய கருத்துக்களை இங்கு பதிவிடுவது, நாம் எங்கு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என எண்ணி பதிவிடுகிறேன்.
ஒரு மாணவர் கூறினார், இப்படி ஒரு சாசனம் இருப்பதே இன்றுதான் நான் கேள்விப்படுகிறேன் என்று. அவர் மூன்றாமாண்டு இளங்கலை படிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஒருவர் கூறினார், அரசமைப்புச் சாசனத்திற்கும் பொதுமக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது சட்ட வல்லுனர்களுக்கான நூல் என்றுதான் எண்ணி இருந்தேன்.
இன்றுதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் இந்த நாட்டையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதில் உயர்த்துவதில் எவ்வளவு பொறுப்பு இருக்கிறது என உணர்ந்தேன் என்றார்.
அடுத்து ஒருவர் இதுவரை மக்களாட்சியும் குடியாட்சியும் ஒன்று என்றுதான் எண்ணியிருந்தேன், இன்றுதான் இரண்டும் வேறு வேறு என புரிந்து கொண்டேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து இதுவரை அரசமைப்புச் சாசனத்தை அரசாங்கம்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். இன்றுதான் நமக்கும் குடிமக்களாக அதில் ஒரு பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன் என்றார் மற்றொரு மாணவர்.
இந்த முன்னெடுப்பின் நோக்கமே மாணவர்கள் மூலமாக சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வை அரசமைப்புச்சாசனம் பற்றி உருவாக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால், மாணவர்களிடம் இதை எடுத்துச் செல்லும்போதுதான் இதில் எவ்வளவு சவால்கள் உள்ளன என்பதை அறிய முடிந்தது.
என்னுடைய இல்லத்திற்கு வண்ணம் பூச ஒரு சில ஆட்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் இளைஞர்.
எப்போதும் பணியில் இருக்கும்போது அலைபேசியில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சற்று வித்தியாசமாகத் தெரிந்தார்.
அவரிடம் நலம் விசாரித்து, இந்த இளைய வயதில் படிக்காமல் ஏன் வண்ணம் அடிக்க கூலி வேலைக்கு வந்தீர்கள் என்றேன்.
உடனே அவர் ஐயா, நான் ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிரிப்பிள் இ படிக்கிறேன்.
என் தந்தையும் வண்ணம் பூசும் வேலைதான் செய்கிறார். அவருடன் நான்கு ஐந்து நாள் பணிக்கு வந்தால் தீபாவளிக்கு என் தந்தைக்கு செலவைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என எண்ணி வந்தேன் என்றார்.
உங்கள் எதிர்காலம் பற்றி எதாவது குறிக்கோள் உண்டா என்றேன். எதாவது படித்து வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் படிக்கிறேன். அதே நேரத்தில் இந்தக் கல்வி மூலம் அதற்கான நம்பிக்கை தெரியவில்லை.
ஊரில் நிறைய பட்டதாரிகள், வேலை இல்லாமல் இருக்கின்றனர். இந்தச் சூழலில்தான் இதைப்புரிந்து கொண்டு நான் வண்ணம் பூச கூலி வேலைக்கு வருகிறேன் என்றார்.
அவரிடம் அரசமைப்புச் சாசனம் பற்றி எதாவது தெரியுமா எனக் கேட்டேன். ஐயா, நான் பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன்.
எனக்கு எப்படி ஐயா தெரியும் என்றார். உடனே நீங்கள் பள்ளியில் படிக்கும்போது ஆறாவது வகுப்பில் கற்றுத் தரவில்லையா என்றேன். ஆறாவது வகுப்பில் கற்றுத் தந்தார்களா இல்லையா என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை.
அப்படியே கற்றுத் தந்திருந்தாலும் அது இன்று எப்படி ஞாபகத்திற்கு வரும்.
போன செமஸ்டரில் படித்ததே மறந்து போய்விட்டது, 6வது வகுப்பில் படித்தது எப்படி ஞாபகத்திற்கு வரும் என்று கேட்டார்.
அந்த இளைஞர் ஒரு கிருத்துவர். அவரிடம் கேட்டேன், உங்களிடம் புதிய ஏற்பாடு உள்ளதா என்றேன். ஆம் இருக்கிறது என்றார். எதற்காக என்றேன்.
ஞாயிறு தோறும் தேவாலயத்திற்குச் செல்லும்போது அதை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு கிருத்துவருக்கு அது ஒரு அத்தியாவசியத் தேவை என்றார்.
ஒரு இந்தியக் குடிமகனாக வாழ அரசமைப்புச் சாசனம் தேவை இல்லையா என்றேன். புரியவில்லை.
அப்படி எவரும் இதுவரை என்னிடம் கூறவில்லையே. அரசமைப்புச் சாசனம் என்பது ஒரு சட்ட நூல். அது நீதிமன்றத்திற்குத் தேவை என்பதுதான் எனது புரிதல்.
ஆனால் இப்பொழுது நீங்கள் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நூல் என்கிறீர்கள்.
இதை பள்ளியிலும் கூறவில்லை, கல்லூரியிலும் கூறவில்லை, எந்த அரசியல் கட்சித் தலைவரும் கூறவில்லை. நீங்கள் தான் இதைப்பற்றிக் கேட்கிறீர்கள் என்றார்.
என்னிடமிருந்த அரசமைப்புச் சாசன முகப்புரை பிரதி ஒன்றை அவரிடம் மதிய உணவுக்காக சென்றபோது கொடுத்துப் படிக்கக் கூறினேன்.
உணவுக்குப்பின் படித்துவிட்டு வந்து, அந்த முகப்புரையில் உள்ளதுபோலவா இந்தியா இருக்கிறது என என்னிடம் கேட்டார். நீங்களே எண்ணிப் பாருங்கள் என்றேன். உடனே என்னிடம் கூறினார்.
இந்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் கல்வியாளர்கள் எவருமே ஏன் இதை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன் என்றார். என்ன புரிந்து கொண்டீர்கள் என்றேன்.
இந்த சாசனத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் இதைப்பற்றி எவரும் பேசுவது கிடையாது என்றார்.
இதை ஏன் நீங்கள் செய்கின்றீர்கள் என்றார்.
வேறு யாரும் செய்யவில்லை, ஆகையால் நான் செய்கிறேன் என்றேன். முடிந்தால் எங்கள் கல்லூரிக்கு வாருங்கள் என்றார், வருகிறேன் என்றேன்.
நம் குடிமக்களை நாம் அரசியல் அறியாமையில் வைத்து அரசியல் கட்சிகள் செய்வதுதான் அரசியல் என்று நம்ப வைத்துள்ளோம்.
எனவே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க அரசமைப்புச் சாசனத்தை மக்களிடம் கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம்.