எளிமை வேண்டும், ஆடம்பரம் கூடாது என்பார் எம்ஜிஆர்!

தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன்
“திரு. எம்.ஜி.ஆர் அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தேன்.
 
ஒரு நாள் அடையாரிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூசன் மாஸ்டராக இருந்த ஜே. சந்தான கிருஷ்ணனுடன் போயிருந்தேன். திரு.ஜி.சக்ரபாணி அவர்களின் மகன் எம்.சி. ராமமூர்த்திக்கும் இவர் தான் ஆசிரியர்.
 
“இங்கேதான் எம்.சி.ராமமூர்த்தியின் வீடு இருக்கிறது. அவனையும் பார்த்துவிட்டு போகலாம் வா” என்று என்னை எம்.ஜி.சக்ரபாணியின் வீட்டுக்கு அவர் அழைத்துச் சென்றார் சந்தான கிருஷ்ணன்.
 
திரு. எம்.ஜி.ஆர் அப்போது தனது சகோதரருடன் அடையார் காந்தி நகரில் வசித்து வந்தார்.
 
நாங்கள் ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது அந்த அறைக்குள் திடீரென எம்.ஜி.ஆர். வந்தார்.
 
அப்போது தான் நான் அவரை முதன்முதலாக பார்க்கிறேன்.
 
பொன்னிற மேனி, திறந்த மார்பு, இடுப்பில் வேஷ்டி. கருகருவென அடர்ந்து வளர்ந்திருந்த முடியை ஒரு டவலால் துவட்டியபடி வந்தார் அவர்.
 
“பையன் யார்” என்று என் ஆசிரியரிடம் கேட்டார்.
 
அவர் விவரம் சொன்னார்.
 
சொன்னதும், “நல்லா படிக்கிறியா?” என்றுக் கேட்டார்.
 
என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களை பார்க்கத்தான் அனுமதிப்பார்.
 
ப்ளட் அண்ட் சாண்ட், டயரென்பவர், டார்ஜான் மற்றும் எரோல் ஃப்ளின் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.
 
சற்றேறக்குறைய நடிக்கும் எம்.ஜி.ஆர் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் சாகசப் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது.
 
தமிழ்நாட்டின் எரோல் ஃப்ளின் என்றே எம்.ஜி.ஆரை நாங்கள் அழைப்போம்.
 
எனவே முதன் முறையாக அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர் அவர்களை பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்குப் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டது.
 
அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாகப் படத் தொழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் நெருக்கமாகிக் கொண்டிருந்தது.
 
அந்த சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார்.
 
எங்களை பார்க்கும்போதெல்லாம் நடிகர் அசோகன், “அண்ணண் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்களேன்” என்று என்னிடமும் என் சகோதரர்களிடம் சொல்லுவார்.
 
அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.
 
தொழில் ரீதியாக சின்னப்பா தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போவேன்.
 
அங்கே எம்.ஜி.ஆரும், அசோகனும் இருப்பார்கள். எம்.ஜி.ஆரோடு நான் நெருக்கமாக பழக தேவரும் அசோகனும் தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.
 
எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தபோது, எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம்.
 
தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம். அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் கோரிக்கையை ஏற்றார்.
 
‘அன்பே வா’ இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன்.
 
அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும் அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
 
“வசதியாக வாழ்வதில் தவறில்லை. அனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது” என்பார்.
 
இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும்போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் போகப் போகத்தான் அதன் அருமையையும் பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.
 
இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பழக்கங்களை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார், வருகிறார்.
 
தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தனது திரையுலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும் தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.
 
எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும் படிப்பையும் வளர்த்து கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் பேர்கள் உண்டு.
 
படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றை கடைபிடித்து வந்ததுதான் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.
 
இப்போதும் நானோ, அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரை ஒருவர் முதலாளி என்று சொல்லிக்கொள்ள போட்டி போடுவோம். பெரும்பாலும் அவர் முந்திக் கொண்டுவிடுவார்.
 
முதலமைச்சராக பதவி ஏற்றபோது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்க சென்றபோது, “இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி” என்று சொன்னேன்.
 
– 2017-ல் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து…
Comments (0)
Add Comment