சஞ்சார் சாத்தி: பாதுகாக்கவா, ஒட்டுக் கேட்கவா?

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (SIR) அடுத்ததாக எதிர்க்கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது சஞ்சார் சாத்தி.

இந்தியாவில் இனி தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் சஞ்சார் சாத்தி செயலி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட, இதன் மூலம் பொதுமக்களை அரசு உளவு பார்க்க திட்டமிடுவதாக கூறி போர்க்குரல் எழுப்பியுள்ளன எதிர்க்கட்சிகள்.

சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?

சஞ்சார் சாத்தி என்பது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியாகும். திருடு போகும் செல்போன்களை கண்டறிவதற்கும், ஆன்லைன் மோசடிகளைப் பற்றி புகார் அளிப்பதற்கும் உதவும் வகையில், கடந்த ஜனவரி மாதம் இந்த செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவேற்றம் செய்து வைத்திருந்தால் நமது ஸ்மார்ட் போன் காணாமல் போனால் அதை அனைத்துத் தளங்களிலும் முடக்கலாம்.

மோசடி அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும் எண்கள் பற்றி இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம். செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை சரிபார்க்கவும் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.

கடந்த 11 மாதங்களில் மட்டும் இந்த செயலியை பயன்படுத்தி தொலைந்துபோன 7 லட்சத்துக்கும் மேற்பட்ட போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

கட்டாயமான சஞ்சார் சாத்தி

ஆரம்பத்தில் தேவைப்படுபவர்கள் மட்டும் சஞ்சார் சாத்தி செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும் என்று சொன்ன மத்திய அரசு, இப்போது இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்கவேண்டும் என்றும்,

ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகியுள்ள ஸ்மார்ட் போன்களிலும் இந்த செயலியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த செயலியை ஸ்மார்ட் போனில் இருந்து நீக்க முடியாத வகையில் பதிவேற்றுமாறும் ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதற்கு 90 நாள் அவகாசம் கொடுத்துள்ளதாகவும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் பிரச்சினையை கிளப்பியுள்ளது.

எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?

இனி தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி எம்பியான பிரியங்கா காந்தி, “அனைவருக்கும் தங்களது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கு தகவல்களை அனுப்பும் தனிநபர் உரிமை உண்டு.

இவை அனைத்தையும் அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை.

இந்த அரசு நாட்டை அனைத்து விதங்களிலும் சர்வாதிகார நாடாக மாற்றி வருகிறது.

மோசடிகளைப் பற்றி புகார் செய்வதற்கும், இந்திய குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் இடையில் மெல்லிய கோடுதான் உள்ளது.

மோசடிகளை தடுக்கிறேன் என்று சொல்லி குடிமக்களின் மொபைல் போன்களுக்குள் நுழையக் கூடாது” என்கிறார். அதே கருத்தை மற்ற எதிர்கட்சிகளும் வைத்துள்ளன.

வேண்டுமென்றால் நீக்கலாம்:

எதிர்கட்சிகளின் இந்த கலகக் குரலைத் தொடர்ந்து மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

“உங்களுக்கு இந்த செயலி வேண்டாம் என்றால் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டியது இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அதைச் செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை அறிமுகப்படுத்த வேண்டியது எங்களின் கடமை. ஆனால் இதை அவரவர் செல்போன்களில் வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதை அதை பயன்படுத்துவர்களே முடிவு செய்து கொள்ளலாம்”

– என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சின்ஹா கூறியுள்ளார்.

தேவைப்படாதவர்கள் அந்த செயலியை நீக்கலாம் என்றும் மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பு:

ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ஆப்பிள், மத்திய அரசின் இந்த உத்தரவைப் பின்பற்றப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற செயலிகள் ஐபோன்களின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும், உலக அளவில் இதுபோன்ற உத்தரவுகளை ஆப்பிள் நிறுவனம் செயல்படுத்துவதில்லை என்றும் மத்திய அரசுக்கு பதிலளிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் தயக்கம் ஆகியவற்றால், இந்த செயலியை வைத்து மத்திய அரசு தங்களை ஒட்டுக் கேட்குமோ என்ற சந்தேகம் ஒரு சிலரிடையே ஏற்பட்டுள்ளது.

அதனால் மக்களின் பாதுகாப்புக்காக இந்த செயலியை பதிவேற்றினாலும், அதனால் அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாது என்பதையும், அவர்கள் உளவு பார்க்கப்பட மாட்டார்கள் என்பதையும் விளக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

– பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment