தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்!

சவால்களும் தீர்வுகளும்

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை, கடந்த நவம்பர் 20, 1989 அன்று ஐநாவின் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையாகும்.

இது உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இனம், மதம், திறன்கள், பாலினம் போன்ற வேறுபாடின்றி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உடன்படிக்கை, டிசம்பர் 11, 1992 ஆம் ஆண்டு இந்திய அரசால் ஏற்புறுதி (ratify) செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உத்தரவாதம் செய்வது இந்திய அரசின் கடமையாகும்.

இதற்காக பல்வேறு சட்டங்கள், திட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக கூடிக் கொண்டே செல்கிறது என்பதை சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில், குறிப்பாக தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது.

இந்தத் தரவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இது ஒரு பகுதி மட்டுமே; முழுமையல்ல. உண்மையில் பதிவு செய்யப்படாத குற்றங்கள் ஏராளமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பொதுவாக, சமூக விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், குழந்தைகள் மீதான குற்றங்கள் பல சமயங்களில் புகார் செய்யப்படுவதில்லை.

காவல்துறையிடம் நம்பிக்கை இல்லாமை, பழிவாங்கும் அச்சம், நீதி கிடைப்பதில் தாமதம், தேவையற்ற அலைச்சல், அதனால் ஏற்படும் மன உளைச்சல், சமூக நாணம், குற்றங்களை மறைக்கும் பண்பாடு போன்றவை புகார் செய்யாமல் விடப்படுவதற்கான முக்கிய காரணங்கள்.

சில மாநிலங்களில், காவல்துறை குழந்தைகளின் புகார்களை ஏற்க மறுப்பது, வழக்குகளை குறைவாகப் பதிவு செய்வது போன்ற நடைமுறைகள் பரவலாக உள்ளன. இதனால் குற்றம் நடந்தாலும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் அது இடம்பெறாது.

பாலியல் வன்முறை அல்லது குடும்ப வன்முறை போன்ற வழக்குகள் சமூகத்தில் “மரியாதை இழப்பு” என்று கருதப்படுவதால், குடும்பங்களே புகார் செய்யாமல் இருக்கின்றன.

இதனால் உண்மையான நிலை வெளியில் தெரியாமல், புள்ளிவிவரங்களில் குறைவாகப் பதிவாகிறது. இதையும் தாண்டி, குழந்தைகளுக்கெதிரானக் குற்றங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன.

இந்தியாவில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2018 ஆம் ஆண்டு 141764 ஆக இருந்தது, 2023 ஆம் ஆண்டு 25.1 சதவீதம் உயர்ந்து 177335 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 4155 ஆக இருந்தது 67.7 சதவீதம் உயர்ந்து 6968 ஆக உள்ளது. இந்தியாவின் சராசரியை விட இரு மடங்குக்கு மேல் உயர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

2019 ஆம் ஆண்டுத் தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டு கோவிட் பேரிடர் காலங்களில், இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 13.2 சதவீதம் குறைந்திருந்த பொழுதிலும், தமிழகத்தைப் பொறுத்தளவு 4.8 சதவீத அளவு குற்றங்கள் உயர்ந்திருக்கின்றன.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக தினசரி 486 வழக்குகள் பதியப்படுகின்றன; 511 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்; தமிழகத்தில் தினசரி 19.1 வழக்குகள்; 21.4 குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், 55 சதவீதம் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், 45 சதவீதம் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழும் பதியப்பட்டுள்ளது; முறையே 56 சதவீதம் மற்றும் 44 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்தில், 29 சதவீதம் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், 71 சதவீதம் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களில் பதியப்பட்டுள்ளது; முறையே 34 சதவீதம் மற்றும் 66 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தமிழகத்தில் உள்ளூர் மற்றும் சிறப்பு சட்டங்களின் கீழ் அதிக வழக்குகள் பதியப்பட்டு இருப்பதையும் மற்றும் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற விகிதம் 39.9 (ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு) தமிழகத்தில் இது 33.7 ஆக இருக்கிறது.

குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் உத்தரபிரதேசம், பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களை விட, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகத்தின் குற்ற விகிதம் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

குழந்தைகள் சார்ந்த சிறப்பு சட்டங்களின் அடிப்படையில், தேசிய சராசரி குற்ற விகிதத்தை (17.4) விட, தமிழ்நாட்டில் 36 சதவீதம் அதிகமாக இருக்கிறது.

இது தமிழகத்தில் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் என்று காரணம் சொல்லி எளிதில் கடந்து செல்ல முடியாது.

ஏனெனில், பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஒப்பீட்டளவில், தமிழகத்தில் குறைவாகவே குற்றங்கள் பதிவாகியுள்ளன.

பெரும்பான்மையான குழந்தைத் திருமண வழக்குகள் பதியப்படுவதில்லை. தமிழக சுகாதாரத்துறையின் தரவுகளுக்கும் பதிவான வழக்குகளுக்குமிடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது.

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 174 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதைக் காட்டுகிறது.

குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் 56 வழக்குகள் பதியப்பெற்று 149 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் ஐந்தாம் இடத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில் 64.3 சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தமிழ்நாடு 93.7 சதவீதத்துடன் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது; மிசோரம் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.

காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 49.9% இது தேசிய சராசரியை விட 55 சதவீதம் அதிகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது.

தண்டனை விகிதம் தேசிய சராசரியாக 2021 ஆம் ஆண்டு 33.5; 2022-ல் 33.6 மற்றும் 2023-ல் 28.5 ஆக உள்ளது. இதுவே தமிழ் நாட்டில் முறையே 26.5, 31.3 மற்றும் 27.5 ஆக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய சராசரி விட தண்டனை விகிதம் தமிழகத்தில் குறைவாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இந்தத் தரவுகள், மாநிலத்தின் குழந்தைகள் பாதுகாப்பு கட்டமைப்பிலுள்ள தோல்விகள் மற்றும் இடைவெளிகளை ஆராயத் துண்டுகின்றன.

குழந்தைகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன.

சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 107 – இன் படி, அனைத்துக் காவல் நிலையங்களிலும், குழந்தை நலக் காவல் அலுவலர் (CWPO) நியமிக்கப்பட வேண்டும்.

சிறப்புச் சிறார் காவல் பிரிவு ((SJPU) அமைக்கப்பட வேண்டும். இது எதுவும் நடைமுறையில் இல்லை.

கிராம அளவிலான குழந்தைகள் நல மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்டு இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவே இருக்கினறன.

இந்த அமைப்புகள் அனைத்திற்கும் உரிய நிதி ஒதுக்கி, பயிற்சி கொடுத்து, முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, முறையாக கண்காணிக்க வேண்டியது அவசியம்

இந்த அரசு பதவியேற்று நான்காண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தை அமைத்துள்ளது.

குழந்தைகள் சார்ந்த முக்கிய சட்டங்களைக் கண்காணிக்க வேண்டிய கடமை இந்த அமைப்பிற்கு உண்டு.

கேரளாவில் ஆணையத்திற்கு ஆண்டிற்கு குறைந்தது ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஏறக்குறைய 40 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு ஆண்டிற்கு 8 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்படுகிறது. போதிய உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், குழந்தை உரிமைகள் ஆணையத்திற்கு, தலைவர் மட்டுமே முழுநேரம்; மற்ற உறுப்பினர்கள் அனைவரும் பகுதி நேரமாக உள்ளனர். குறைவான நிதி; குறைவான பணியாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

இது ஆணையம் துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே இப்படித்தான் அமைக்கப்பட்டு செய்யப்படாமல் இருக்கிறது.

அதே தவறு மீண்டும் செய்யப்பட்டுள்ளதால், ஆணையம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பே இல்லை.

உடனடியாக, உறுப்பினர்களை முழு நேரமாக்கி, போதிய நிதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லையெனில், குழந்தைகளுக்கதிரான குற்றங்கள் மிகவும் அதிகரிக்கும் ஆபத்துகள் உள்ளன.

தமிழ்நாட்டில், மற்ற மாநிலங்களைவிட பல்வேறு சிறப்பு நலத் திட்டங்கள் குழந்தைகளுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

அதே நேரத்தில், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவது, சட்டங்களின் மட்டுப்படுத்தப்பட்ட செயலாக்கத்தையும், பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் உள்ள விரிசலைகளையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறது.

குழந்தைகளின் பாதுகாப்பு ஒரு தனிப்பட்ட துறையின் பொறுப்பு அல்ல; காவல்துறை, பள்ளிகள், சமூகநலத் துறை, நீதித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் என அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டிய கூட்டுப்பொறுப்பு.

தரவுகள் காட்டும் உண்மை, “காவல்” என்ற ஒரு கோட்டைக் கடந்துபோய், சமூக அளவிலான விழிப்புணர்வு, தடுப்பு, கண்காணிப்பு மற்றும் துரிதமான நீதி வழங்கல் ஆகியவை அவசரமாக வலுப்படுத்தப்பட வேண்டிய நிலையை வெளிப்படுத்துகிறது.

குழந்தைகள் பாதுகாப்பு கட்டமைப்பு வலுவாக இல்லை என்றால், ஒரு சமூகத்தின் எதிர்காலமே அபாயத்தில் ஆழ்த்தப்படுகிறது.

எனவே, நீடித்த கொள்கைகள், அதிக நிதி முதலீடு, தரமான மனிதவள நியமனம், உண்மையான கண்காணிப்பு முறை, மற்றும் குழந்தை நேய அணுகுமுறை ஆகியவை முழு சீர்திருத்தத்தின் மையமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு செயல்பட்டால் மட்டுமே, தமிழ்நாட்டை குழந்தைகள் நிம்மதியாக வாழும், பாதுகாப்பான மாநிலமாக மாற்ற முடியும்.

முனைவர் பாலமுருகன் பழனியாண்டி, மனித உரிமை செயற்பாட்டாளர்.

Comments (0)
Add Comment