புரட்சியாளர் அம்பேத்கரின் அந்திம நாட்கள்!

1 டிசம்பர் 1956.

இன்று வழக்கத்தைவிட சற்று முன்பாக 7.15 மணிக்கெல்லாம் டாக்டர் பாபாசாகேப் எழுந்துவிட்டார்.

காலைக் கடன்களை முடித்துவிட்டு புத்தர் சிலை முன்பு சிறிது நேரம் நின்றுவிட்டு வராந்தாவில் நடந்தார். பின்பு சிறிது உடற்பயிற்சி, யோகாசனம் செய்தார்.

சூரிய வெளிச்சம் படும்படி போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து தேநீர் அருந்திகொண்டே அன்றைய செய்தித் தாள்களைப் புரட்டினார்.

சமையல் செய்யும் சுதாமாவை அழைத்தார், “இன்னொரு குவளை தேநீர், சர்க்கரை குறைவாக” என்றார்.

நானக் சந்த் ரட்டுவை தொலைபேசியில் அழைத்து, “கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக மதுரா சாலை செல்ல வேண்டும். ஆகவே நீங்கள் 1.30 மணிக்கு கண்காட்சி மைதானத்தின் வாசலில் காத்திருக்கவும்” என்றார்.

ரட்டுவின் அலுவலகம் மைதானத்திற்கு அருகிலிருந்ததால் பாபாசாகேப் வருவதற்கு முன்னதாகவே கண்காட்சி மைதானத்திற்கு வந்து சேர்ந்தார்.

ஏற்கனவே பாபாசாகேப்பின் வருகை தெரிந்திருந்ததால் அவர் கார் கண்காட்சி மைதானத்தை நெருங்கவும் அவரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் நேராக புத்திஸ்ட் ஆர்ட் கேலரிக்கு சென்றார்.

அங்கு அழகாக வரிசைப்படுத்தப்பட்டிருந்த வெவ்வேறு வகையான கலைப் பொருட்கள், ஓவியங்கள், படங்கள், சிலைகள், புத்தரின் வெவ்வேறு வடிவிலான பெரிதும் சிறிதுமான கலைநயம்மிக்க சிற்பங்கள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

ரட்டுவின் தோள்களில் கைகளைப் போட்டுகொண்டே ஒரு சுற்று நடந்து வந்தவர், மூலையில் ஒரு கனம் நின்று சற்று திரும்பி ஏக்கத்துடன் ஒரு பார்வை பார்த்து, “எனது புத்தர் மேலானவர், எனது புத்தர் மேலானவர்” என்றார்.

வெளியே வரும்போது சோகன் லால் சாஸ்த்திரி வணக்கம் சொன்னார். சாஸ்த்திரி அப்போதுதான் ஆர்ட் கேலரியை பார்த்துவிட்டு வெளியே வந்து பாபாசாகேப்பின் காரையும் அதில் சாய்ந்து நிற்கும் டிரைவர் காலுவையும் பார்த்துக்கொண்டு நின்றுருந்தார்.

பாபாசாகேப் சாஸ்த்திரியிடம் “நீங்களும் கண்காட்சி பார்க்கத்தான் வந்தீர்களா, அது சரி புத்திஸ்ட் ஆர்ட் கேலரியை பார்த்தீர்களா? ” என்றார்.

சாஸ்த்திரி, “அதைத்தான் ஆர்வத்துடன் முதலில் பார்த்தேன்”, என்றவர் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாபாசாகேப்பிடம்,

“எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. இங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்ட வெவ்வேறு நாட்டிலுள்ள புத்தரின் படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், சிலைகள் போன்றவற்றை பார்க்கும்போது வெவ்வேறு வடிவம் கொண்ட புத்தர்களைக் காண முடிகிறது.

இதில் எந்த முகம் உண்மையான புத்தரை பிரதிபலிக்கிறது என்று கூறமுடியுமா?” என்றார்.

பாபாசாகேப் சிரித்துகொண்டே, “இது மிகவும் சாதாரணமான கேள்வி. புத்த பகவான் மஹாபரிநிர்வாணமடைந்து 600 வருடங்கள் வரை புத்தரின் ஓவியமோ, சிலையோ கிடையாது.

இதற்கு பின்பே புத்த பகவானின் உருவத்தை வரைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஒருவர் தனது கற்பனையில் புத்தபகவானை வரைந்துள்ளார்.

அதன் பிறகு பெளத்த நாடுகள் முதலில் புத்த பகவானின் உருவப் படங்களையும் பின்பு சிலைகளையும், சிற்பங்களையும் உருவாக்கியுள்ளனர்.

அந்தந்த நாடுகளின் கலை, அழகியலுக்குத் தகுந்தாற் போல் வடிவமைத்துகொண்டனர்.

உதாரணமாக பெரிய மனிதர்கள் பெரிய காது வடித்திருப்பார்கள் என்பது பொதுவான புரிதல். இதை அடியொற்றி எல்லோருமே பெரிய காது வைத்த புத்தரை ஓவியமாகவும், சிற்பமாகவும் படைத்துவிட்டனர்.

சீனர்களுக்கு கண்கள் சிறிதாக இருக்கும். ஆகவே, அவர்கள் வடித்த புத்தருக்கும் கண்கள் சிரியதாகவே இருக்கும்.

இதனாலேயே சீனா, ஜப்பான், பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள புத்த பகவானின் ஓவியங்கள், சிலைகள், சிற்பங்கள் சற்று வித்தியாசமான வடிவங்களில் உள்ளன” என்றார்.

பாபாசாகேப்பின் உதவியாளர் நானக் சந்த் ரட்டு எழுதிய “Last few years of Dr.Ambedkar” என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை பேரா. ஜெ.பாலசுப்பிரமணியம் Balasubramaniam Jeyapal மொழிபெயர்த்துள்ளார்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment