டிசம்பர் பிறந்து விட்டது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. நான்கு முனைப் போட்டி நிலவப்போவது உறுதியாகி உள்ளது. இரண்டு அணிகள், தங்கள் நிலையை சில மாதங்களுக்கு முன்பே தெளிவுபடுத்திவிட்டன.
ஒன்று – திமுக. இந்த அணியில் திமுகவோடு, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
ராமதாஸ் தலைமையிலான பாமக, இந்த அணியில் சேர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இரண்டாவது – நாம் தமிழர் கட்சி. அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்தே போட்டி என பிரகடனம் செய்து விட்டார். வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்.
அதிமுகவிலும், தவெகவிலும் இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.
அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. மேலும் சில கட்சிகளுக்கு தூண்டில் போட்டுக் காத்திருக்கிறது.
அதிமுக, தேமுதிக, அன்புமணி தலைமையிலான பாமக ஆகிய கட்சிகள் அதிமுகவால் வலை வீசப்பட்டுள்ள கட்சிகள்.
விஜய்யின் தவெகவில் இந்த வினாடி வரை எந்த கட்சியும் சேரவில்லை. தேர்தல் நெருக்கத்தில் வரலாம்.
உதிரிக் கட்சிகள் திட்டம்:
எந்தக் கூட்டணியிலும் சேராமல் பல உதிரிக் கட்சிகள் மதில் மேல் பூனையாக நிற்கின்றன.
அதில் பிரதான கட்சி தேமுதிக. முதல் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்து நின்று 8 % ஓட்டுகளை அள்ளியது.
பாமக கோட்டையான விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றிக் கொடி நாட்டினார். அடுத்த தேர்தலில் (2011) அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது அந்தக் கட்சி.
அதன்பின் தொடர் தோல்விகள். இடதுசாரிகள், மதிமுக, விசிக, தமாகா ஆகிய கட்சிகளுடன் தேமுதிக சேர்ந்து மக்கள் நலக்கூட்டணியை அமைத்தது. 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்த் டெபாசிட்டையே பறிகொடுத்தார்.
கடந்த தேர்தலில் விருத்தாசலத்தில் நின்ற பிரேமலதாவும் டெபாசிட் இழந்தார்.
இப்போது – பாமகவின் நிலையை பார்ப்போம். சந்தித்த முதல் தேர்தலில் தனித்து நின்று 4 இடங்களை கைப்பற்றியது பாமக.
கடந்த தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெறும் 4 தொகுதிகளில் மட்டும் வென்றது.
இந்தச் சூழலில்தான் இன்றைக்கு பாமக இரண்டாக பிளவுபட்டுள்ளது. எனவே அந்தக் கட்சியையும் உதிரிக் கட்சி பட்டியலில் சேர்ப்பதில் தப்பில்லை.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமமுகவின் டிடிவி தினகரன், தமமுகவின் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரும் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
இந்தக் கட்சிகளில் சில டிசம்பர், ஜனவரி மாதங்களில் கட்சி மாநாடுகளை நடத்த உள்ளன. அதன்பின் கூட்டணி குறித்து அறிவிக்கப்போவதாக சொல்லி உள்ளன. ஜெயிக்கும் குதிரையில் பயணிப்பதே இவர்கள் இலக்கு.
ஓபிஎஸ், தினகரன், கிருஷ்ணசாமி ஆகியோர் தவெகவுடன் செல்வார்கள். அன்புமணி அதிமுக அணியில் இணைய வாய்ப்புகள் அதிகம்.
ஒட்டுமொத்தமாக இந்த உதிரிக் கட்சிகளுக்கு 10 சதவீத வாக்குகள் இருப்பதை இங்கே நினைவு கூற வேண்டும்.
– மு. கஜேந்திரன்.