1959-ம் ஆண்டு வெளியான ‘வண்ணக்கிளி’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் இடம்பெற்ற, “சித்தாடை கட்டிகிட்டு, சிங்காரம் பண்ணிகிட்டு, மத்தாப்பு சுந்தரி ஒருத்தி, மயிலாக வந்தாளாம்/ அத்தானை பாத்து அசந்து போய் நின்னாலாம்” பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கவிஞர் மருதகாசி எழுதி எஸ்.சி.கிருஷ்ணன், பி.சுசீலா பாடிய இப்பாடலில் எத்தனை விதமான தமிழரின் இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டிருக்கின்றன என்பது மிகுந்த ஆச்சர்யத்தை தரும்.
இவ்வளவு பெரிய அடிப்பாடலில் சந்தத் தொகையில் கவிஞர் விளையாடி இருப்பார். அதில் எஸ்.சி.கிருஷ்ணன், “முத்தாத அரும்பெடுத்து, முழ நீள சரம் தொடுத்து, வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்” என்று பாடும்போது தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம் பறக்கும்.
பெரும்பாலும் டி.எம்.சௌந்தராஜன் தான் எம்.ஜி.ஆருக்கு அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அதனால், மிக இயல்பாக அவர் குரலைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், எஸ்.சி.கிருஷ்ணன் குரல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
எஸ்.சி.கிருஷ்ணன் முதலில் டிகேஎஸ் சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி ஆகியோரின் நாடகக் குழுவில் நடித்து வந்தார்.
அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’ நாடகத்தில் நடித்ததன் மூலம், அவரின் அன்பைப் பெற்றார். அதன்பின் திரைத்துறையில் துணை நடிகனாகத்தான் அவரது வாழ்வு துவங்கியது. அதன் பின்பே பாடகரானார்.
கட்சிக் கூட்டங்களுக்குப் போகும்போது கட்டாயம் எஸ்.சி.கிருஷ்ணன் பாடலைக் கேட்காமல் இருக்க முடியாது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய, “நல்வாக்கு நீ போடடி.. நான் நாலு நாளில் வந்திடுவேன்” என்ற பாடலை எஸ்.சி.கிருஷ்ணன் பாடினார்.
அப்பாடலில் செல்வக் களஞ்சியமே எனச் சொல்லி விட்டு அரற்றுவார். இப்படியான முயற்சிகளை தனது பாடல்களில் தொடர்ந்து அவர் செய்து வந்தார்.
நடிகர் டணால் தங்கவேலுவிற்கு பொருத்தமான குரலாய் எஸ்.சி.கிருஷ்ணன் குரல் அமைந்தது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், ‘ராஜராஜன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு எஸ்.சி.கிருஷ்ணன் குரல் கொடுத்தார்.
பூசாரி வேடம் போட்டு எம்.ஜி.ஆர் படிக்கும் “ஆயி மகமாயி” பாடலை அருமையாக பாடியிருப்பார்.
சிவாஜிக்கு அவர் பாடிய “பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ” என்ற பாடலில் எஸ்.சி.கிருஷ்ணன், கடைசியாக வைக்கும் டிவிஸ்ட் மியாவ், மியாவ் என்ற வார்த்தை கேட்கும்போதே வித்தியாசமாக இருக்கும்.
தமிழ்த் திரையிசைப் பாடகர்களில் சீர்காழி கோவிந்தராஜனுக்கு அடுத்து எஸ்.சி.கிருஷ்ணனுக்கும் வெண்கலக் குரல் என்றே சொல்லலாம்.
அவருடைய ஒவ்வொரு பாடலும் வார்த்தை சுத்தமாக தான் எதிரொலித்தது. அதனால் தான் இன்றளவும் அவர் ஞாபகத்தில் நம் பக்கத்தில் நிற்கிறார்.
எண்ணற்ற பாடல்களை எஸ்.சி.கிருஷ்ணன் பாடியிருந்தாலும் புகழ்பெற்றவை என சில பாடல்களைப் பட்டியலிடலாம்.
பாண்டியன் நானிருக்க ஏண்டி உனக்கென்மேல், ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா, மை டியர் மீனா உன் ஐடியா என்னா, அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையில கனகாம்பரம்,
கலப்படம் இது கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம், பி.ஓ.ஒய் பாய்.. பாயின்னா பையன், நல்வாக்கு நீ போடடி நான் நாலு நாளில் வந்திடுவேன், சேதி கேட்டோ சேதி கேட்டோ,
சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே, மண்ணை நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா, அத்தானும் நான் தானே, பிளாட்பாரம் மட்டமுன்னு எண்ணாதீங்க, செத்தாலும் விடமாட்டேன்,
கண்ணாலே வெட்டாதே சும்மா கண்ணாலே வெட்டாதே, ஹலோ டார்லிங் பறந்தோடி வா, கைகளிரண்டில் வளை குலுங்க, மானத்தைக் காப்பதும் பொண்ணு நல்ல மகிழ்ச்சியைத் தருவதும் பொண்ணு, அலங்காரம் அலங்காரம் நீயே எந்தன் சம்சாரம்,
அடக்கிடுவேன் அடக்கிடுவேன், இருக்கும் வரையில் ரசிக்கணும் நீ இன்பமாக இருக்கணும், எல்லும் ஓவும் வீயும் ஈயும் லவ்வு, சிட்டு போல நடந்து வார, நெத்தியிலெ நீல நிறப்பொட்டு, வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே – உள்ளிட்ட பாடல்கள் இந்தப் பட்டியலில் அடங்கும்.
தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்ற எஸ்.சி.கிருஷ்ணனின் பாடல்கள் எக்காலத்திலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும்.
குறிப்பு: எஸ்.சி.கிருஷ்ணன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய மூவரும் இளம்வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
நன்றி: ப. கவிதா குமார்